

ஈஸ்வர வருடத்துத் தை மாதத்தின் தொடக்கம். மூடுபனியோடு கொண்டல் குளிர்காற்று வீசிய விடியற்காலை. நான் உறங்கி எழும்போதே வீட்டு வெளித்திண்ணையில் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அமர்ந்திருந்தார். ஏதோ அவசர காரியமாக என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று புரிந்துகொண்டேன். தோட்டத்தின் கிழக்குப் புறத்தில் கொய்யா மரத்தடிக்கு அவரை அழைத்துப் போனேன். தணிந்த குரலில் செந்தில் பேசினார்.
“எனக்கும் எங்க அத்தைப் பொண்ணுக்கும் கலியாணம் உறுதியாகற நேரம். ஜாதகத்துல பொருத் தம் பத்தலையின்னு சொல்ல றாங்க… உனக்குத் தெரிஞ்ச பழநி சோசியர்கிட்ட ஒருக்கா போயிட்டு வந்தர்லாம்…”
பொழுது உதிக்கும் போதே நானும் செந்திலும் பேருந்தில் ஏறி பழநி சென்றோம். திருவா வினன்குடிக்கு அருகில் குறுவீதி ஒன்றில் ஜோதிடர் தங்கி ஜாதகம் பார்க்கும் வீடு இருந்தது.
வீட்டின் முன்னறையில் பஞ்சாமிர்தம் பிசைவதற்கான பழுத்த வாழைப்பழத்தார்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் பின்கட்டுத் திண்ணைக்குப் போனோம். ஜோதிடர் அறை பூட்டியிருந்தது.
ஜோதிடம் பார்க்க வந்த ஒருவர், ஏற்கெனவே பின்கட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். ஐம்பது வயது அனுமானிக்கக்கூடிய தோற்றம். அளவான உயரம். இளைத்த உடம்பு. கையில் மடித்து வைத்திருந்த கோயில் கும்பாபிஷேக மஞ்சள் பையில் ஜாதகம் இருந்தது.
அப்போது பின்கட்டுச் சேந்து கிணற்றடியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பித்தளைக் குடங் களை எடுக்கவந்த பெண்மணி சொன்னார். “சோசியர் இன்னிக்கு இங்க வரமாட் டாருங்க… பெத்தநாயக்கன்பட்டியில அவரோட தம்பு (தம்பி) தோப்புல இருப்பாரு. நீங்க அவசரமுன்னா அங்க போய்ப் பாருங்க…”
அந்தப் பெண்மணியே அங்கு போவதற்கான வழியையும் சொன்னார். நாங்கள் குறுவீதிக்கு வந்தபோது பின்கட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரும் எழுந்து எங்களோடு சேர்ந்துகொண்டார். மறுபடியும் பேருந்தில் ஏறி, நெய்காரப்பட்டி போய் இறங்கினோம்.