

ஓவியம்: முத்து
பிரமாதி வருடத்தில் மார்கழி பிறந்தும் பருவமழை சரியாகப் பெய்யவில்லை. சுற்றுவெளியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எங்கள் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தினோம். பெரியப்பா மாட்டுக் கட்டுத்தரை அருகில் ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரைப் பாசனத்துக்காகத் தேக்குவதற்கு நீர்மெட்டு (சிறியநீர்த்தேக்கம்) அமைத்தோம்.
ஐம்பது அடி நீளம், ஐம்பது அடி அகலம், மூன்று அடி உயரம் கொண்ட நீர்மெட்டு அது. நீர் கசியாமல் இருக்க நீர்மெட்டின் அடிப்பகுதிக்குக் களிமண்ணும் நாற்புறச் சுவர் களுக்குச் செம்மண்ணும் கொண்டு பூசினோம். ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கம்ப்ரசர் மோட்டார் மூலம் இறைக்கப்படும் தண்ணீர் நீர்மெட்டில் வந்து சேகரமாகிப் பாசனத்திற்குத் திறந்து விடப்பட்டது.
நாளடைவில் நீர்மெட் டில் பாசம் பிடித்துத் தண்ணீர் பச்சை நிறத்தில் அழுக்காயிற்று. தோட்டத்துக்கு வந்த சிவலிங்கம் மாமா, நீர்மெட்டை நோட்டமிட்டு விட்டுச் சொன்னார். “ராமு… ஆத்துல போயி மீனை உசிரோட புடிச்சுக்கிட்டு வந்து மெட்டுல உட்டோமுன்னா மீனுக தண்ணிய சுத்தமா வெச்சுக்கும்.”
அன்று பின்மதியத்திலேயே நானும் சிவலிங்கம் மாமாவும் அமராவதி ஆற்றுக்குச் சென்றோம். கரையோரமாக நீந்திய சிப்பிலி, அயிரை, கெளுத்தி, உழுவான், கெண்டை போன்ற சிறுமீன்களைப் பிடித்து நீர் நிரம்பிய சில்வர் போசியில் இட்டு, நீர்மெட்டுக்குக் கொண்டுவந்து விட்டோம். நீர்மெட்டில் மீன்கள் பெருகின. பாசம் பிடிப்பது குறையவில்லை. மறுபடியும் சிவலிங்கம் மாமா சொன்னார்.
“ஆரா மீனும் விலாங்கு மீனும் புடிச்சுக்கிட்டு வந்து உட்டுப் பார்ப்போம்.” ஆற்றில் ஆரா மீனும் விலாங்கு மினும் பிடிப்பது எளிதான காரியமல்ல. நீரோட்டத்தின் ஆழத்தில் சற்றுப் பெரிய கூழாங்கற்களின் அடியில் ஆரா மீன்கள் பதுங்கியிருக்கும். விலாங்கு மீன்களோ நீர்மடுவின் பாறை இடுக்குகளில் பதுங்கியிருக்கும். சிவலிங்கம் மாமா சொன்னார்.
“ஆரா மீனும் விலாங்கு மீனும் புடிக்க நல்ல அனுபவசாலியா இருக்கணும். நீ போய் நம்ம பருவக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துரு…”
நான் ஆற்றின் அக்கரை போய் எங்கள் நெல்வயல் வரப்பில் பருவக்காரரைத் தேடினேன். பருவக்காரர் தென்படவில்லை. அப்போது ஆற்றங்கரைச் சரிவை ஒட்டிய நெல்வயலில் இருந்து புல்லாங்குழல் இசை கேட்டது.