

சித்திரபானு வருடத்து ஆடி மாதம். கோடைக் கருமுகில்களால் வானம் கறுத்திருந்தது. கோவை சிங்காநல்லூரில் இருந்து உக்கடம் புறப்பட்ட மாநகரப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.
பிரபல தனியார் தொலைக்காட்சி யின் நேரலை நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் பங்கேற்கவைக்கும் பணி நிமித்தமாக விடியற்காலையில் தான் நான் கோவை சென்றிருந்தேன்.
குண்டுவெடிப்பில் பாதிக்கப் பட்டவர்கள் குறித்த சரியான விவரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. யாரைச் சந்திப்பது என்கிற தெளிவுமில்லை. மாநகரப் பேருந்து கோவை அரசு மருத்துவமனையைக் கடந்தபோது எனக்குள் சிறுபொறி தட்டியது.
எதிரில் உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தேன். காலை நேரப் பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவ மனை பணியாளர்களிடம் விசாரித் தேன்.
“நாலு வருசத்துக்கு முன்னால நடந்த குண்டுவெடிப்புல பாதிப் படைஞ்சவங்களைப் பத்திய விவரம் வேணுமுங்க…” அவர்களில் சிலர் குண்டுவெடிப்பின் போது அங்கு பணிபுரிந்தவர்களாகவும் இருந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் பங்கேற்றுப் பேசத் தயங்கினர்.
அதேநேரம் அவர்கள் டவுன்ஹாலில் குண்டு வெடித்த ஜவுளிக்கடை ஒன்றின் பெயரைத் தெரிவித்தனர். நேராக அந்த ஜவுளிக்கடைக்குச் சென்றேன். அங்கு பணிபுரிந்தவர்கள் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.
அடுத்து உக்கடம் போனேன். கெம்பட்டி காலனி, சந்தைப்பேட்டை, மீன் அங்காடி என அலைந்தேன். இருப்பினும் நான் எதிர்பார்த்த உணர்வுபூர்வ மான நேரடி அனுபவம் கொண்டவர்கள் எவரையும் சந்திக்க முடியவில்லை.