

சித்தார்த்தி வருடத்துத் தை மாதம். தலைநடுங்கும் குளிர் கொண்ட வைகறை. இருள் விலகி ஊமைவெளிச்சம் பரவிற்று. வடக்கே செங்காட்டூர் தலைவாசலில் உள்ளூர் முயல் வேட்டையாடிகள் வேட்டைநாய்களை உசுப்பேற்ற சீழ்க்கை ஒலி எழுப்பினர். வேட்டைநாய்களும் ஆக்ரோசமாகக் குரைத்தன.
அப்பாவும் பெரியப்பாவும் ‘கட்டுக்கோல்’ (முயல் வேட்டையாடப் பயன்படுத்தும் கம்பு) எடுத்துக்கொண்டு முயல் வேட்டைக்குப் புறப்பட்டனர். ஏழு வயது சிறுவனான நானும் பெரியப்பா மகன் கண்ணப்பன் அண்ணனும் முயல் வேட்டைக்குச் செல்வதற்காக அழுது அடம்பிடித்தோம். அம்மாவும் பெரியம்மாவும் எங்களை அதட்டி அடித்து வீட்டுக்குள் இழுத்துப் போயினர்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பும்கூட எங்களுக்கு முயல் வேட் டையாட வீடு அனுமதிக்கவில்லை. முயல் வேட்டையின் மீதிருந்த பரவசமும் கிளர்ச்சியும் ஒருபோதும் தணியவு மில்லை. காலம் விரைந்தோடிற்று. கோவில் பாளையத்தில் எங்கள் ஊராத்தா (அம்மாவின் அம்மா) கட்டிலைவிட்டு எழ முடியாமல் ‘கிடை’ சேர்ந்துவிட்டார்.
அம்மாவும் துணைக்குப் போய் தங்க வேண்டிய சூழல் நேர்ந்தது. நானும் நாள்தோறும் சென்று ஊராத்தாவைப் பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தேன். அப்படியான தருணத்தில் ஓர் இளமதியத்தில் தெற்குவெளி ஊர்களின் முயல் வேட்டையாடிகள் கோவில் பாளையத்தைக் கடந்து போயினர்.
அப்போது கொட்டிலின் உத்திரத்தில் வெள்ளாடுகளுக்கு முசுட்டைத் தழை கட்டிக்கொண்டிருந்த அப்புச்சி என்னிடம், அந்தக் காலத்தில் நடந்த ஒரு வித்தியாசமான முயல் வேட்டையின் கதையை நினைவுகூர்ந்தார்.
“அப்போ பிலவ வருசம். தை மாசத்துப் பட்டிப் பொங்கலுக்கு (மாட்டுப் பொங்கல்) மக்யாநாளு… ஊரே ஒண்ணு சேர்ந்து மொசல் வேட்டைக்குப் பொறப்பட்டுச்சு…” எனக்குள் முயல் வேட்டையின் களம் ஒன்று காட்சிப்பூர்வமாகக் கண் முன்னே விரியத் தொடங்கிற்று.
உள்ளூர் தலை வாசலில் முயல் வேட்டையாடிகள் ஒன்றுகூடினர். பெரியவீட்டுக்காரர் வேட்டைப் பண்ணாடியாகச் செயல்பட்டார். மானா வாரி மேய்ச்சல் குறுங்காடுகளின் முள்புதர்களுக்குள் பதுங்கிப் படுத்தி ருக்கும் முயல்களைச் சத்தமிட்டு எழுப்பிவிடும் எழுப்பாளிகள் முதல் வரிசையில் வந்து நின்றனர்.