கருப்பணவெளி சாமியாடிகள் | மயில்கள் அகவும் பெருநிலம் 18

கருப்பணவெளி சாமியாடிகள் | மயில்கள் அகவும் பெருநிலம் 18
Updated on
2 min read

பவ வருடத்துப் பங்குனியின் திங்கள்கிழமை. அந்தி முடிவுற்று இருள் சூழும் நேரம். கண்ணன்கோயில் தாண்டித் தென்மேற்கே நீளும் மண்சாலையில் நானும் அப்புக்குட்டி அண்ணனும் மிதிவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தோம். ஆகாயத்தில் மஞ்சள்மூக்கு ஆள்காட்டிகள் அபயக்குரலிட்டுப் பறந்தன. ஓரிடத்தில் மணற்கிளுவை மரத்தினடியில் காரைத்திண்டின் மீது உருவமற்ற கற்சாமிகள் வீற்றிருந்தன. அப்புக்குட்டி அண்ணன் மிதிவண்டியை நிறுத்தி இறங்கி வணங்கினார்.

“காரமடை சாமிய வணங்கிய சித்தர் ஒருத்தர் இங்க ஜீவசமாதி ஆகியிருக்கிறாரு… ரொம்ப சத்திய வாக்கான இடம். நம்ம ஆறுச்சாமி அண்ணன் தினமும் இங்கு பூசை செய்வாரு.” நானும் மிதிவண்டியில் இருந்து இறங்கி வணங்கினேன். அப்போது மணற்கிளுவை கிளைகளுக்குள் மரப்பல்லி சகுனித்தது.

அப்புக்குட்டி அண்ணன் சொன்னார்: “உனக்கு நல்லது நடக்கும். இங்கு அவ்வளவு சுலபத்துல சகுனம் கெடைக்காது.”

மீண்டும் நாங்கள் மிதிவண்டிப் பயணத்தைத் தொடர்ந்தோம். அத்து வான மானாவாரி மேய்ச்சல் காடுகள் கடந்தன. அப்புக்குட்டி அண்ணன் என் பக்கத்துத் தோட்டத்துக்காரர். முப்பது வயது இளைஞர். வெகுநாளாக என்னை இந்தக் கோயிலுக்கு வரும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது.

காதப்புள்ளப்பட்டிக்கு முன்பான தோட்டம் ஒன்றினுள் நுழைந்து, அப்புக்குட்டி அண்ணன் மிதிவண்டியை நிறுத்தினார். காய்ந்த கொழுக்கற்றைப் புற்கள் காற்றாடும் மேய்ச்சல் காட்டின் மையத்துக்குக் கூட்டிப்போனார். மணற்கிளுவை மரத்தினடியில் சிறிய சீமையோட்டுக் கூரையின் கீழ் சேமலையாண்டவர் கோயில் இருந்தது. கனவில் சிவன்மலை ஆண்டவரின் உத்தரவு கிடைத்து உருவாக்கிய ஸ்தலம். மூலஸ்தானத்தில் முருகரின் ரூபமற்ற கற்சிலை.

இருள் அடர்ந்தபோது அந்தக் கோயிலை நிர்வகிக்கும் திப்பணாங் காட்டு அய்யன் வந்தார். குள்ளமான தோற்றம். எழுபது வயது முதுமை. சிரித்த முகத்தோடு என்னைக் குறித்து அப்புக்குட்டி அண்ணனிடம் விசாரித்தார். “தம்பி, எங்கக் கிழபுறத்தோட்டத்துப் பையனுங்க. மெட்ராஸுல வேலை செஞ்சுட்டு விட்டுட்டு வந்திருச்சு. மறுக்காவும் மெட்ராஸுக்குப் போகணும். சாமிகிட்ட நல்ல உத்தரவு வாங்கறதுக்குக் கூட்டிக்கிட்டு வந்தேனுங்க.” “வடக்கால கருப்பராயனக் கும்பிட் டுட்டு வாங்க. கணக்கு வருதான்னு பார்க்கறேன்.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in