

செட்டிநாடு என்றாலே பாரம்பரிய தலையாட்டு பொம்மை, உணவு, பலகாரம், பிரம்மாண்டமான கட்டிடங்கள், செட்டிநாடு காட்டன் புடவை ஆகியவை நம் நினைவுக்கு வருபவை.
செட்டிநாடு பொருள்களுக்கென தனி சிறப்பம்சம் இருக்கின்றன. இவற்றை எல்லாம் வாங்க காரைக்குடிக்குத்தான் செல்ல வேண்டுமென இல்லை. சென்னையில் அண்மையில் நடைபெற்ற காரைக்குடி சந்தையில் அனைத்து பொருள்களும் விற்பனைக்கு இருந்தன.
நாட்டுக்கோட்டை நகரத்தார் பெண்களில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 2019-இல் காரைக்குடி நகரத்தார் சங்கத்தால் 'காரைக்குடி சந்தை' கண்காட்சி நடத்தப்பட்டது.
இதன் ஐந்தாவது பதிப்பு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மண்டபத்தில் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற்றது.
சென்னை, காரைக்குடி, கோவை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றனர்.
கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு செட்டிநாடு கலையைப் பிரதிபலிக்கும் கைவினைப் பொருள்கள், ஓவியங்கள், வீட்டு உபகரணங்கள், விளையாட்டு பொருள்கள், இயற்கை அழகுசாதனப் பொருள்கள், அணிகலன்கள், வேளாண் தயாரிப்புகள் எனப் பல்வேறு வகையான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வியாபாரத் திறமையையும், நிதி மேலாண்மையையும் குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ‘குட்டீஸ் கார்னர்’ பகுதி புதுமையான முயற்சி. செடி விதைகள், கீ செயின்கள், ஓவியங்கள் போன்று சில பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அரங்கில் குழந்தைகளே விற்பனையாளர்களாக இருந்தனர்.
சிறு வயது முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை ஆர்வமாக தங்களது தயாரிப்பில் உருவான பொருள்களை அரங்குகளில் விற்பனை செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கண்காட்சியைக் காணப் பலரும் கூடி இருந்தனர்.