

ராஜரத்தினம், கிளாடிஸ் தம்பதியினர் தங்கள் மகள்கள் நிவேதா, ஜீவிதாவுடன்
ஒரு பெண்ணுடைய முதல் ஹீரோ பெரும்பாலும் அவருடைய அப்பாவாகத்தான் இருப்பார். “முதல் ஹீரோ மட்டுமில்ல; எப்போதுமே அவருதான் என்னோட ஹீரோ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் நிவேதா.
வீட்டில் மட்டுமல்ல; கபடி கோர்ட்டிலும் நிவேதாவின் தந்தை ஒரு ஸ்டார்தான்! எண்பது, தொண்ணூறுகளில் கபடி விளையாடியவர்களுக்கு, கபடியைப் பார்த்தவர்களுக்கு டைகர் ராஜரத்தினம் இன்றும் ஹீரோதான். எவர்கிரீன் ஹீரோ.
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் நிவேதா, அவருடைய தந்தையின் கபடியைப் பற்றி மூச்சுவிடாமல் பேசுகிறார். “மணி கணக்கா பேச முடியும்” என்று சிரிக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? நிவேதாவும் நேஷனல் கேம்ஸில் தமிழ்நாட்டிற்காகக் கபடி விளையாடியுள்ளார். நிவேதாவின் தங்கை ஜீவிதா இந்தியப் பெண்கள் கபடி அணிக்கு கேப்டனாகவே இருந்துள்ளார். இருவரும் பீச் கபடியில் கலக்கியுள்ளனர்.
“அப்பாவும் நானும் ஒரே நேரத்தில கபடி ஆடியிருக்கோம். நாற்பது வயசு வரைக்கும் ஆடினாரு. சும்மா விளையாடல; சூப்பரா விளையாடுனாரு. அவரு விளையாடும்போது எங்க போனாலும் அவரைச் சுத்தி ஒரு கூட்டம் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடக்கிலேயும் டைகர் ராஜான்னு அவரைக் கொண்டாடுவாங்க.
அப்பா பிராக்டிஸ் செய்ய கிரவுண்டுக்குப் போகும்போது பைக்கில் பின்னாடி உட்கார்ந்து நானும் போவேன். அம்மாவோட மேட்ச் பார்க்கப் போவேன். நான் வளர்ந்த சூழ்நிலையே அவரு பெரிய ஹீரோ என்பதை சின்ன வயசுலேயே எனக்கு உணர்த்திடிச்சு” என்று ஒரு கபடி ரைடின் விறுவிறுப்புடன் பேசினார் நிவேதா.
எங்கே போனாலும் அப்பாவின் கபடியால் நிவேதாவுக்குப் பெருமைதான். “ஆனால் மிதப்பு வந்ததே இல்லை. அதற்குக் காரணம் அப்பாதான். எவ்வளவு உயரம் போனாலும் அடக்கமா இருக்கணும்; எல்லாரையும் மரியாதையா ட்ரீட் செய்யணும் என்பதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். உன்னைச் சுத்தி நாலு பேரு நல்ல இருந்தா பெருமைப்படணும்னு சொல்லுவாரு. என்கிட்ட ஒரு ஃப்ரெண்டு மாதிரிதான் பழகுவாரு. ஒரு டீனேஜ் பொண்ணு பேசும் விஷயங்களை அவர் கிட்ட தாராளமா பேசலாம். அவருக்கு ரசிகைகள் எழுதுன லவ் லெட்டர்ஸை எல்லாம் படிச்சிருக்கேன்” என்று சிரித்தார் நிவேதா.
தேசிய அளவில் பீச் கபடி பட்டத்தை வென்ற தமிழக அணியில் நிவேதாவும் ஜீவிதாவும் (கோப்பையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பவர்கள்)
ஆரம்பத்தில் தடகளத்தில் கவனம் செலுத்திய நிவேதா, பின்னர் அப்பாவின் ஏரியாவான கபடிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். “அப்பாவோட அம்மாவுக்கு விளையாட்டுல ரொம்ப ஆர்வம் உண்டு. எங்க அம்மா நல்ல அத்லெட். விளையாடுவதற்கு அருமையான சூழ்நிலை எங்க வீட்டில் இருந்தது. அப்பா என்னைக் கபடி விளையாடுன்னு கட்டாயப்படுத்தல; ஆனா அவரைப் பார்த்து வளர்ந்ததால் கபடி பக்கம் போயிட்டேன்.”
ராஜரத்தினம் ஐசிஎஃப்இல் வேலை பார்க்கும்போது ஒரு பெண்கள் அணியை உருவாக்கி பயிற்சியளித்து வந்தார். “அக்காக்களுடன் நானும் கிரவுண்டுக்குப் போவேன். பொண்ணுன்னு பாக்கமாட்டாரு; எல்லாருக்கும் விழும் அடி எனக்கும் விழும். கிரவுண்டில அடிச்சு சொல்லிக்கொடுத்து வீட்டில வந்து மருந்து போட்டு விடுவாரு. நான் நல்ல லெவலில் கபடி விளையாடியிருந்தாலும், என்னோட படிப்புனால வேலைக்குப் போகணும்னு விரும்பினார். தான் படிக்காத படிப்பை தன் பிள்ளைகள் படிக்கணும்னு ஆசைப்பட்டார்” என்கிறார் நிவேதா.
சென்னைப் பல்கலைக் கழக அணியில் தான் இடம்பெற்றதற்கு அப்பாதான் காரணம் என்கிறார் நிவேதா. “டீமைத் தேர்ந்தெடுக்கும் போட்டியோட ஃபர்ஸ்ட் ஹாஃப்ல சொதப்பிட்டேன்; ஒரு பாயிண்ட்கூட எடுக்கல. ரிஸ்க் எடுக்காம ரிவார்டு கிடையாது; அடிச்சு ரைடு செய்யுன்னு பிரேக்ல சொன்னாரு; செஞ்சேன். கடைசியா நான்தான் டாப் ஸ்கோரர். ஏ புள்ள, உன்னைப் புடிக்க வர்றவங்களோட அடியைவிட, நீ தைரியமா ஆடாம வெளியே வந்தா நான் அடிக்குற அடி பலமா இருக்கும்னு சொன்னாரு!”
நேஷனல் கேம்ஸில் நிவேதாவின் பயிற்சியாளராக இருந்த முருகானந்தம், அவருடைய அப்பாவைப் பற்றி சொன்னதை மறக்கவே முடியாது என்கிறார். “கண்ணுக்குப் பின்னாடி என்ன நடக்குது என்பதை நிழலைப் பார்த்து விளையாடிய ஒரே பிளேயர் உங்க அப்பான்னு சொல்லுவார்!.”
இயற்கையாக அமைந்த கபடிக்கு ஏற்ற உடல், அசாதாரணமான திறமை இருந்தாலும், ராஜரத்தினம் கடும் பயிற்சியைக் கைவிடவே இல்லை. “எப்ப தூங்கினாலும், நாலு மணிக்கு எழுந்து கிரவுண்டுக்குப் போயிடுவாரு. இப்பவும் நாலு மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வாரு. ஐசிஎஃப்இல் இருக்கும்போது அப்பா பல நாள் தனியா பிராக்டிஸ் செய்வதைப் பார்த்திருக்கேன். மரத்தை உதைச்சு பயிற்சி எடுப்பாரு. சின்ன வயசுல வாலிபால் விளையாடிருக்காரு. என்னைப் பொறுத்தவரை, அவருக்கு இருந்த டெடிகேஷன்க்கு, எந்த விளையாட்டை எடுத்திருந்தாலும் பெரிய ஆளாக வந்திருப்பார்” என்றார் நிவேதா.
ராஜரத்தினத்தின் கபடி திறமை எப்படியும் வெளி வந்திருக்கும், என்கிறார் நிவேதா. “ஆனால், அவருடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்ததற்கு அம்மாதான் காரணம். விருமாண்டி, ஆளவந்தான் மாதிரி ஆளான அப்பாவுக்கு அம்மாவோட வழிகாட்டுதல் ரொம்ப முக்கியமா இருந்துட்டு வருது.”
ராஜரத்தினத்தை நன்கு அறிந்தவர்கள் அனைவரும் அவருடைய மனைவி கிளாடிஸ் அந்த கபடி ஜாம்பவானின் வெற்றிப் பயணத்தில் வாழ்க்கைத்துணையாக மட்டுமல்லாமல், உறுதுணையாகவும் இருந்ததை உறுதிப்படுத்துவார்கள்.
டைகர் ராஜரத்தினம்
ராஜரத்தினம் தன்னுடைய வாழ்க்கையில் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்கிற எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருடனும் பழகியது தனக்குப் பெரிய பாடம் என்கிறார் நிவேதா. “அப்பாவோட விளையாடிய எல்லா பிளேயர்ஸையும் மாமா, சித்தப்பா என்றே கூப்பிடுவோம். லீவுக்கு கணபதிபுரம் வந்தா, ரோட்டில் பார்க்கும் தெரியாதவர்கள்கூட, ராஜேந்திரன் பொண்ணா (சொந்த ஊரில் ராஜரத்தினத்தை ராஜேந்திரன் என்றும் அழைக்கின்றனர்) என்று அன்போடு பேசும்போது பெருமையா இருக்கும்!”
“கபடி வரலாற்றை எழுதும்போது எங்க அப்பாவைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது” என்றார் நிவேதா. “கபடியை விடுங்க. சின்ன வயசுல கரண்ட் போயிடுச்சுனா நானும், என் தங்கச்சியும் தூங்க இரவு முழுவதும் ஈரத் துணியை வச்சு விசிருவாரு. நான் அப்பா புள்ள. என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகத்திலேயே பெஸ்ட் அப்பா!”
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். தொடர்புக்கு: tnrags@gmail.com