

தமிழ்நாடு மின்சார வாரிய அணியில் ராஜரத்தினம் (முதல் வரிசை, வலமிருந்து மூன்றாவது)
“ராஜரத்தினம் போட்டோ ஒவ்வொரு கபடி வீரனோட வீட்டிலேயும் இருக்கணும்; அவரோட போட்டோ இருந்தாதான் அவன் கபடி வீரன்” என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் முன்னாள் இந்திய வீரரான சாமியப்பன். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவரல்ல சாமியப்பன்; சேலம் மாவட்டத்தில் அவர் நடத்தும் கபடி பயிற்சி பள்ளியில் நுழைந்தவுடன் உங்களை வரவேற்பது ராஜரத்தினத்தின் போட்டோதான்.
ஐசிஎஃப் அணியில் ராஜரத்தினத்துடன் விளையாடி, பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்தவர் சாமியப்பன். தொண்ணூறுகளில் தமிழ்நாடு மூன்று முறை தொடர்ந்து சீனியர் நேஷனல்ஸ் பட்டம் வென்றபோது, ராஜரத்தினத்தின் தளபதியாக இருந்தவர். கவர் டிஃபெண்டராகத் தன்னுடைய முத்திரையைப் பதித்த சாமியப்பனின் பட்டறையில் இன்று பல இளம் வீரர்கள் பட்டைத் தீட்டப்பட்டு வருகின்றனர்.
“ராஜரத்தினத்தோட டீம்ல விளையாடியிருக்கேன்; அவரை எதிர்த்தும் விளையாடியிருக்கேன். அவருக்கு நிகரா இதுவரை யாரும் பொறக்கல; இனிமேலும் பொறக்க முடியாது. பல்விந்தர் சிங் உடம்பை வைச்சு ஆடுவாரு; மணல்மேடு சுப்பிரமணியன் கேம் ஸ்டைலா இருக்கும். ராஜரத்தினத்தோடது பவர் கேம். அது ஸ்பெஷல். என்னோட அகடமி பசங்க கிட்ட ஒவ்வொரு நாளும் அவரோட கபடியைப் பத்தி பேசிக்கிட்டே இருப்பேன்” என்கிறார் சாமியப்பன்.
எதிரணியில் விளையாடும்போது ராஜரத்தினத்தின் பவரை நேரடியாக அனுபவித்துள்ளார் சாமியப்பன். “என்னோட குரல்வளையில் கைவைத்து ஒருமுறை அவுட் ஆக்கினார்; எனக்குக் கழுத்தே துண்டான மாதிரி இருந்தது. அரை மணி நேரம் இருமிக்கிட்டே இருந்தேன். அவரு அடிக்கும் அடியெல்லாம் டம், டம்முன்னு விழும்.
ரைட் கார்னர், ரைட் கவர் ரெண்டு பொசிஷன்லயும் ஆடுவாரு. எங்கே போனாலும் அடி விழும். ராஜரத்தினம் இருக்கும் இடத்துக்குப் போகவே எல்லாரும் பயப்படுவாங்க. நுணுக்கத்தோடும் கபடி விளையாடுவாரு; ஆனா பவர்தான் அவரோட கேம்ல ரொம்ப முக்கியமான அம்சம்.”
சாமியப்பன் - ராஜரத்தினம்
ராஜரத்தினம் ஓர் அற்புதமான ஆல்-ரவுண்டர். எந்த அளவுக்கு டிஃபென்ஸ் ஆடுகிறாரோ, அதே அளவுக்கு ரைடும் செய்வார். “கணுக்காலைப் பிடிச்சு அவரை அவுட் ஆக்குவது அவ்வளவு கஷ்டம். எப்படித்தான் காலை ரிலீஸ் செய்வாருன்னு தெரியாது. அவராலகூட அதை விளக்க முடியாது; அவருக்கு அந்த ஸ்கில் இயற்கையா வந்தது. காலை நீட்டி ரைடு செஞ்சா பேலன்ஸ் கிடைக்காது; ஆனா அவரு அப்படித்தான் ஆடுவாரு. கபடிக்காக அவரு பிறந்தாரா; இல்லை கபடி அவருக்காக பிறந்ததான்னு சொல்ல முடியாது” என்று பிரமிப்போடு பேசினார் சாமியப்பன்.
ஒரு பயிற்சியாளராகவும் சாமியப்பன், ராஜரத்தினத்திடம் தொடர்ந்து கற்றுக் கொள்வதாகச் சொன்னார். “ஜெயிச்சுகிட்டே இருந்த என்னோட ஒரு டீம், தோற்க ஆரம்பிச்சுது. எனக்குக் காரணம் புரியல. ராஜரத்தினத்திடம் கேட்டேன். ‘கபடியைப் பத்தி பெரிசா தெரியாம, ஃப்ரீயா ஆரம்பத்தில் விளையாடினதுனால ஜெயிச்சாங்க; இப்ப கபடி தெரிஞ்சு, இவன் அடிப்பானா, அவன் அடிப்பானான்னு பயந்து ஆடுவதால் ஜெயிக்க முடியல’ என்றார். ஜாலியா விளையாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை எளிமையா விளக்கினார்.”
விளையாட்டில் கேப்டன் லீடராகும் இடம் நுட்பமானது. லீடர் என்பவர் தான் நன்றாக விளையாட முடியாவிட்டாலும், அணியை உற்சாகப்படுத்தி நன்றாக விளையாட வைத்து வெற்றி பெற வைப்பார். ராஜரத்தினம் தானும் நன்றாக விளையாடி, அணியில் உள்ள அனைவரையும் நன்றாக விளையாட வைக்கும் தனித்திறமை கொண்டவர்.
“நான் ரைடு போகணும்னு சொன்னா உடனே அனுப்புவாரு. நான்தான் போகணும்னு ஆணவமா இருக்க மாட்டாரு; தனக்குத்தான் எல்லாப் பேரும் கிடைக்கணும்னு ஆடவே மாட்டாரு. அவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும், இவன் என்ன சொல்றது, நான் என்ன கேக்கறது அப்படின்னு நினைக்கவே மாட்டாரு. சரியா யார் சொன்னாலும் கேட்டுப்பாரு. நான் பெரிய பிளேயர்னு தெனாவட்டே இல்லாத மனுஷர் ராஜரத்தினம். எப்போதும் டீமுக்காகத்தான் ஆடுவாரு. இப்ப கோச் பேச்சைக் கேட்காத பிளேயர்ஸ்க்கு அவரைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்வேன்” என்கிறார் சாமியப்பன்.
ராஜரத்தினம் அணியில் விளையாடுவது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்கிறார் சாமியப்பன். “அவரு ஒரு தூண். அவர் டீம்ல இருந்தா மத்தவங்களுக்குத் தெம்பு வரும்; எதிரணிக்குப் பயம் வரும். நான் இருக்கேன்; ஆடுங்கப்பா என்று எல்லாரையும் ஆட வைப்பார்.”
கடற்கரையில் பயிற்சி எடுத்ததால், ராஜரத்தினத்தின் கால்கள் வலுவடைந்தன என்கிறார் சாமியப்பன். “நல்லா சாப்பிடுவார். ரெண்டு கிலோ மீனை, ஒருத்தரா முடிப்பாரு. கடுமையா உடற்பயிற்சி செய்வாரு. காலைல ஆறு மணிக்கு பிராக்டிஸ்னா 5.50க்கு கிரவுண்ட்ல இருப்பாரு.
மின்சார வாரிய அணியில அவரோட சேர்ந்தவங்கெல்லாம் கபடி விளையாடுவதை நிறுத்திய பிறகும் ராஜரத்தினம் பல ஆண்டுகள் விளையாடியதற்குக் காரணம் அவருடைய உழைப்புதான். அவரோட கபடியைக் குறை சொல்ல இந்தியாவில் யாருக்குமே தகுதியில்லைனு நான் சவால் விடுவேன். கபடி சரித்திரத்தில் அவருக்குத் தனி இடம் உண்டு. ராஜரத்தினம் தமிழ்நாட்டோட பொக்கிஷம்” என்று உணர்வுபூர்வமாகச் சொன்னார் சாமியப்பன்.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். தொடர்புக்கு: tnrags@gmail.com