

விருதுநகர் மாவட்டம் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வறண்ட நிலங்களும் வெயிலின் விளையாட்டும் தான். ஆனால் அதே மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் நிழலில் கண் குளிர வைக்கும் பசுமையை ஒரு சால்வையாகப் போர்த்திக்கொண்டு அமைதியாக உறங்கிக் கிடக்கிறது கூமாப்பட்டி என்கிற கிராமம்.
வத்திராயிருப்பில் இருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தச் சிற்றூர், ஓர் இயற்கை ஓவியனின் தூரிகையிலிருந்து தவறி விழுந்த வண்ணக் காட்சிபோல் கவர்கிறது.
வயல்வெளிகள், கண்மாய்கள், தூரத்தில் நீளும் மேற்குத் தொடர்ச்சி மலைகள், காலைப் பனியில் கரைந்துபோகும் புல்வெளிப்பாதைகள் எனக் கிராமத்தின் ஒவ்வொரு மூலை யிலும் இயற்கையின் ஆட்சி விரித்திருக்கிறது.
கூமாப்பட்டியின் வாழ்க்கை விவசாயத்தைச் சுற்றியே சுழல்கிறது. நெல் சாகுபடிதான் இந்தக் கிராமத்தின் முக்கியத் தொழில். மலையிலிருந்து இறங்கிவரும் நீரும், அதனால் நிறையும் சுற்றி யுள்ள நீர்நிலைகளும் இந்த ஊரின் மண்ணை வளமாக்கு கின்றன.
அதனால்தான் விருதுநகர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இந்தக் கிராமமும் இதன் அருகில் உள்ள ஊர்களும் பசுமையுடன் வரவேற்கின்றன. கோடையில் சற்று வறண்டுபோவதும் உண்டு.
என்றாலும் இந்தக் கிராமத்திலும் இதன் அருகில் அமைந் துள்ள நீர்நிலைகள், பிளவக்கல் அணை, பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியான செண்பகத் தோப்பு, அய்யனார் அருவி, சதுரகிரி மலை, சஞ்சீவி மலை போன்ற இயற்கையின் ஈரம் நிறைந்த இடங்களை ரசிக்கக் கூமாப்பட்டியைக் கடந்துதான் சென்றாக வேண்டும்.