

திண்டுக்கல்லிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 11ஆவது கிலோ மீட்டரில் வந்துவிடு கிறது சின்னாளப்பட்டி. ஊரில் போய் இறங்கியதுமே ‘டக் டக்.. டக் டக்..’ என்கிற கைத்தறி களின் ஓசை காதுகளை வந்தடைகிறது.
விதவிதமான வண்ணங்களில் சாயம் தோய்க்கப்பட்டு, திறந்தவெளிகளில் காயும் பருத்திப் புடவைகளைக் காணும்போது, பிரபஞ்சத்தில் தோன்றும் எல்லா வானவில் கூட்டமும் இந்த ஊருக்கு ஊர்வலமாக வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
கிராமமாக இருந்து இன்று பேரூராட்சியாக விரிந்திருக்கும் சின்னாளப்பட்டியின் மக்கள்தொகை 27 ஆயிரம். அதில் ஏழாயிரம் பேர், புவிசார் குறியீடு (2005) பெற்றுவிட்ட, உலகப் புகழ் ‘சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலைகள்’ நெசவில் ஈடுபட்டுவருகிறார்கள்.
மதுரையும் சுங்குடியும்
‘சுங்கு’ என்கிற தெலுங்குச் சொல்லுக்கு ‘புடவையின் மடிப்பு’, ‘வட்ட வடிவப் புள்ளிகள்’ என இரண்டு பொருள்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 4 தலைமுறைகளாக மதுரையில் ‘சுங்குடி’ பருத்திப் புடவைகள் நெய்யப்பட்டுப் புகழ்பெற்றன. இன்றைக்கும்கூட மதுரையின் சுங்குடிச் சேலைகளுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது.
ஆனால், சுங்குடிப் பருத்திப் புடவைகளுக்கான பெயரையும் புகழையும் சின்னாளப்பட்டி தட்டிக்கொண்டு போனது கடந்த மூன்று தலை முறைகளாகத்தான். அதற்கு மதுரையும் ஒருவகையில் காரண மாக இருந்திருக்கிறது.
சின்னாளப்பட்டியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புவரை ‘கண்டாங்கி’ என்கிற ஒருவகை பட்டுப் புடவைகள், கைத் தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்டுவந்தன. அவற்றுக்கு 70கள் வரையிலும் மவுசு இருந்து வந்துள்ளது.