

ஊர் கூடித் தேர் இழுக்கிற அனுபவம் என்றென்றைக்கும் இதம் தரும். காரணம், அந்த வடத்தில் படிந்த கைரேகைத் தடங்களுக்கு இடையேயான பிணைப்பு. அப்படியொன்றாக நம் முன்னே விரிகிறது ‘ஆரே’ (AURAE) கண்காட்சி.
சென்னை லலித் கலா அகாடமி யில் கடந்த அக்டோபர் 9 தொடங்கி 15 வரை நடைபெறுகிற இக்கண்காட்சி யில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் அனுபவமுடைய ஓவியர்கள், சிற்பிகள் தொடங்கித் தற்போது கவின் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வரை 25 பேரின் படைப்புகள் இடம் பிடித்துள்ளன.
வழக்கமாக ஓர் ஓவியர், சிற்பி அல்லது இன்ஸ்டலேஷன் கலைஞரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டால், அவற்றினூடே அவரது பாணியை அறியலாம். அதேநேரத்தில், அவரது தனித்துவமே ஓரிழையாக அனைத்தையும் இணைத்து ‘ஒருமுகப் பார்வை’ யைத் தரும்.
இந்தக் கண்காட்சியில் வயது, பாலினம், வாழ்க்கை முறை, பணிச்சூழல், அனுபவங்கள் என வேறுபாடுகள் பல கொண்ட கலைஞர்கள் ஒரு குழுவாக இணைந் திருப்பதால், இது பல்சுவை விருந்தாக இருக்கிறது.