மாற்றத்தை விரும்பிய மகத்தான தோழர் நல்லகண்ணு!

மாற்றத்தை விரும்பிய மகத்தான தோழர் நல்லகண்ணு!
Updated on
3 min read

இருபது வருடங்களுக்கு முன்னால், சென்னை வந்த புதிதில் ஓர் அரசியல் தலைவரை எளிதில் அணுக முடியுமா, சரிசமமாக அவரோடு உட்கார்ந்து பேச முடியுமா என்கிற சந்தேகங்கள் இருந்தன. தரையில் நடக்காமல் உயரத்தில் பறக்கும் அரசியல்வாதிகள் நிறைந்த தேசத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயற்கைக்கு மாறானதல்ல என்று நம்புகிறேன்.

ஏனென்றால் நாட்டின் தொண்ணூறு சதவீத அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்கள். அதில் ஐம்பது சதவீத அரசியல்வாதிகள் பெருங்கோடீஸ்வரர்கள். அதிகாரம் எந்த அளவிற்கு அவர்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை என்னைப் போன்ற ஒரு கவிஞன் சந்திக்க முடியுமா என்ன? இல்லை, அவர்களுக்கும் கவிஞனுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ன? இல்லை, கவிதையென்றால் அவர்களுக்கு என்னவென்று தெரியுமா என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதராகத்தான் முதல் சந்திப்பில் அவரைப் பார்த்தேன்.வாழ்க்கையின் மீதும், எழுத்தின் மீதும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்த அந்தச் சந்திப்பை, அழகான அந்த அதிகாலையை நினைத்துப் பார்க்கக்கூடிய நேரமிது.

2008இல் கையெழுத்துப் பிரதியாக இருந்த அழைப்பின் பாடல்கள் தொகுப்பின் சில கவிதைகளை முதன்முதலாக வாசித்த குருநாதர், செஞ்சியில் நடைபெற இருக்கும் தோழர்கள் கமலக்கண்ணன் – நதியா திருமணத்தில் வெளியிடலாம் என்று ஆலோசனை சொன்னார்.

திருமணத்தைத் தலைமைதாங்கி நடத்த வருகை தருகிறார் தோழர் நல்லகண்ணு என்பதை அறிந்துகொண்டேன். இரண்டு நாள்களில் புத்தகத்தைத் தயார்செய்து தோழர்களோடு செஞ்சிக்குச் சென்றோம். மறுநாள் காலை ஆறு மணிக்குத் திருமணம்.

மண்டபத்தின் மாடியில் இரவு முழுக்க அரசியல் தத்துவ உரையாடல் நிலா வெளிச்சத்தில் நீண்டுகொண்டிருந்தது. அதிகாலை மூன்று மணிக்கு மேல்தான் தூங்கச் சென்றோம். சிறிதுநேரத்தில் ஒரு தோழர் என்னை எழுப்பி, “நல்லகண்ணு தோழர் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார், வர முடியுமா” என்று கேட்டார்.

அறைக் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தார். அதிகாலை நான்கு மணி இருக்கும். குளித்து, உடைமாற்றி உட்கார்ந்திருந்தார். அறிமுகம் செய்த மறுகணம் எழுந்து என் கரங்களைப் பற்றிக்கொண்டு கவிதைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார். பாரதியின் கண்ணம்மா பாடல்கள், நெருடாவின் காதல் கவிதைகள் என்று உற்சாகமாக உரையாடல் நீண்டு கொண்டிருந்தது. வெறும் வாய்வார்த்தைக்காகப் பேசவில்லை. கவிதை மரபைப் பற்றிய பரந்த வாசிப்பும், ஆழமான பார்வையும் அவருக்கு இருந்தது என்பதை உணர்ந்துகொண்டேன். “இதுபோல காதல் கவிதைகளை நெறய எழுதுங்க” என்று சொன்னபோது அதிகாலையின் ஒளி அந்த முகத்தில் ஒளிரத் தொடங்கியது. அந்தக் காலையிலிருந்து நாங்கள் தோழர்களாகிவிட்டோம்.

அதற்குப் பிறகு நான் எழுதிய பெரும்பாலான கவிதைகளை அன்றோ அல்லது மறுநாளோ சந்தித்துக் கொடுத்துவிடுவேன். அப்போதே வாசித்துவிட்டு கவிதையை, அதன் அரசியலை, அதன் அழகியலைப் பற்றி நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருப்பார். ஆசை ஆசையாகப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பார். திரிபுராவில் பிஜேபி வெற்றிபெற்ற உடன் அங்கிருந்த தலைவர் லெனின் சிலையை உடைத்தார்கள். அதைக் கண்டித்து தவாரிஷ் லெனின் என்கிற நீண்ட கவிதையை எழுதி முடித்துவிட்டு, நானும் தோழர் இசாக்கும் சென்று சந்தித்தோம். கவிதையை வாசித்தவர் மிகுந்த உற்சாகமாகி, வேகமாக வீட்டிற்குள் சென்று பாதுகாத்து வைத்திருந்த லெனின் புகைப்படம் ஒன்றை எடுத்து வந்தார்.

“கவிஞரே, ஒடனே பொஸ்தகமாகக் கொண்டுவரணும், இதான் அட்டப்படம்” என்றார். சின்னதா நான் ஓர் அணிந்துரை எழுதுகிறேன் என்றதும், நாங்கள் வேலையைத் தொடங்கினோம். “எனக்கொரு 300 பொஸ்தகம் குடுத்திருங்க கவிஞரே, தேவைன்னா பெறகு வாங்கிக்கிறேன்” என்று சொல்லி வாங்கிக்கொண்டார். மறுநாளில் இருந்து ”நல்லகண்ணு தோழர் புஸ்தகம் கொடுத்தார்” என்று சொல்லி அழைப்பு வந்துகொண்டே இருந்தது. கையில் புத்தகத்தோடு எல்லா நிகழ்வுகளுக்கும் சென்றவர், சந்திக்கும் தோழர்களுக்கெல்லம் புத்தகம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், என்னுடைய எண்ணைக் கொடுத்துப் பேசவும் சொல்லியிருக்கிறார்.

மறக்காமல் எல்லாரிடமும் புத்தகத்திற்கான விலை 30 ரூபாயை வாங்கியிருக்கிறார். 300 புத்தகத்தையும் கொண்டு சேர்த்து முடித்தவர், தோழர் இசாக்கையும் என்னையும் அழைத்து எவ்வளவோ மறுத்தும், அந்தப் பணத்தைக் கொடுத்தனுப்பினார்.

“சரியான அங்கீகாரம் இல்லையே” என்று வருத்தப்படுவார் ஒவ்வொரு சந்திப்பிலும். “ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள்” என்று வாஞ்சையோடு கரம்பற்றிக்கொள்வார் எப்போதும். கலையும் இலக்கியமும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், கலையும் இலக்கியமும் அறிந்தவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும். ஒருவேளை தோழர் நல்லகண்ணு போன்றவர்களின் கரங்களில் அதிகாரம் இருந்திருந்தால் மாற்றத்தின் தொடக்கத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாத இந்தச் சமூகத்தில்தான், ஓயாது உழைத்துக் கொண்டிருந்தார்.

தன்னை முழுமையாகப் புரிந்துகொள்ளாத இந்தச் சமூகத்திற்காகத்தான் ஓடிஓடி பாடுபட்டுக் கொண்டிருந்தார். தேர்தல் அரசியலுக்குள் இருந்துகொண்டு என்னதான் செய்துவிட முடியும் என்கிற கேள்விகள் அவருக்குள் இல்லாமல் இல்லை. உலகத்தின் புரட்சிகர வரலாற்றைப் பேசும்போது அந்த அனுபவ நரம்புகளுக்குள் ரத்தம் பீறிட்டுப் பாய்வதையும், அமைதியான அந்த முகத்தை ஆக்கிரமிக்கும் உறுதியையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஊரடங்கு கொஞ்சம் தளர்த்தப்பட்டபோது ‘ஊரடங்கின் உளவியல்’ நூலை வழக்கம்போல நானும் தோழர் இசாக்கும் கொண்டுபோய்க் கொடுத்தோம். “அதான கவிஞரே, எழுதிருப்பீங்கனு நெனைச்சேன்” என்று சொல்லி, ஐயா சந்ரு வரைந்த அட்டைப்படத்தை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இரவே அலைபேசியில் அழைத்துப் புத்தகத்தைப் பற்றிய மதிப்புரையைப் பகிர்ந்துகொண்டார்.

ஏன் வாசிக்க மாட்டேன் என்கிறீர்கள், ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று அடிக்கடி என் தோழர்களிடம் கோபித்துக்கொள்வேன். 96 வயதில் இப்படி வாசிக்கும் ஓர் உன்னதமான தோழரோடு பழகிக்கொண்டு வாசிக்காமல் இருப்பவர்களைப் பார்த்துக் கோபப்படாமல் இருந்தால்தானே ஆச்சரியம். அழைப்பின் பாடல்களில் ஆரம்பித்து கடைசியாகப் பாலஸ்தீனத்திற்காக எழுதிய காத்திருக்கும் சாவிகள் வரையிலும் வாசித்து என்னை உற்சாகப்படுத்தினார். உண்மையைச் சொன்னால் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

இறந்துவிட்டார் என்கிற செய்தி இழப்பின் வேதனையை மெல்ல இதயத்தில் ஏற்றிக்கொண்டிருந்தாலும்கூட, கடந்துவிடுவேன். என் தந்தை இறந்தபோதுகூட அழவில்லை, கவிதை எழுதினேன். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ மேடைகளில் தோழரின் முன்னால் கவிதை வாசித்திருக்கிறேன். எத்தனையோ பொழுதுகள் அவரோடு பேசித் தீர்த்திருக்கிறேன். இந்த நேரத்தில் எல்லாமும் உள்ளிருந்து எழுந்து வருகின்றன. என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதிசெய்து கொள்கிறேன்.

நீங்கள் அவரைச் சாந்தமானவர் என்று சொல்கிறீர்கள். சொல்லிவிட்டுப் போங்கள். இந்த முதலாளித்துவச் சமூகத்தின் மீது அவருக்கிருந்த அதிருப்தியையும் கோபத்தையும் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்கள் அவரைப் பற்றற்றவர் என்று சொல்கிறீர்கள், சொல்லிவிட்டுப் போங்கள். மார்க்சியத்தின் மீதும், சோசலிச சமூகத்தின் மீதும் எவ்வளவு உறுதியான பற்றுக்கொண்டவர் என்பதை நன்றாக அறிவேன்.

சமூக மாற்றத்தை விரும்பினார், அது சாத்தியமாகவில்லை என்கிற ஆதங்கம் அவருக்குள் இருந்தது. புரட்சியை விரும்பினார், அதையும் சாத்தியப்படுத்த முடியவில்லையே என்கிற வருத்தம் அவருக்குள் இருந்தது. யுத்தங்களால் காயம்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பூமியைப் பார்த்து நொந்துகொண்டார்.

இளைஞர்களே, ஒரு நல்ல அரசியல்வாதிக்கு உதாரணம் அவர். அப்படியென்றால் மோசமான அரசியல்வாதிகளை என்ன செய்யப் போகிறீர்கள்? இளைஞர்களே ஒரு நல்ல தலைவருக்கு உதாரணம் அவர், அப்படியென்றால் மோசமான தலைவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்கள் சொல்வதுபோல எளிமையான அரசியல்வாதிதான். இருக்கட்டும், பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? அந்த எளிமை அதிகாரத்தின் படோடபத்திற்கு எதிரானது என்பதை உறுதியாகச் சொல்வேன். அவரைப் புரிந்துகொள்வது என்பது இந்தியச் சமூகத்தையும், இந்திய அரசியலையும் புரிந்துகொள்வதுதான்.

தோழர் நல்லகண்ணு ஒரு கம்யூனிஸ்ட். முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான சோசலிச சிந்தனை கொண்ட உறுதியான கம்யூனிஸ்ட். கலை இலக்கியத்தின் மீது தீராக்காதல் கொண்ட கம்யூனிஸ்ட். எல்லாவற்றிற்கும் மேலாக நம் தோழர்!

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

மாற்றத்தை விரும்பிய மகத்தான தோழர் நல்லகண்ணு!
நல்லகண்ணு: மக்கள் மறப்பதில்லை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in