கண்காட்சி: சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் ‘தக்‌ஷணம்’

கண்காட்சி: சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் ‘தக்‌ஷணம்’
Updated on: 
2 min read

கலையும் கலை சார்ந்த வாழ்வுமாக இருக்கிற கலைஞர்களைக் கொண்டாடுவது சிறப்பானது. அதுவே, பல்வேறுபட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடித் தங்களது படைப்புகளை முன்வைக்கும்போது வேறுபட்ட பண்பாடுகளின் பின்னணியில் அமைந்த கலைச்செழுமை மிளிரும்.

அப்படியொன்றாக அமைந்துள்ளது, டெல்லியில் நடைபெற்றுவரும் ‘தக்‌ஷணம்’ சிற்பக் கண்காட்சி. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மத்தியக் கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இதனைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் செழுமையான சிற்பப் பாரம்பரியத்தையும் சமகாலப் படைப்பாக்கத்தையும் வெளிப்படுத்துகிற நோக்கோடு நடத்தப்படுகிற இந்தக் கண்காட்சி, அங்குள்ள ‘நேஷனல் மாடர்ன் ஆர்ட் கேலரி’யில் நடைபெறுகிறது. ஏறக்குறைய 150 சிற்பக் கலைஞர்களின் 250க்கும் மேற்பட்ட படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மத்தியக் கலாச்சார அமைச்சகமும் நேஷனல் மாடர்ன் ஆர்ட் கேலரியும் நடத்தும் இக்கண்காட்சி குறித்து நாடு முழுவதும் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் அனுப்பிய படைப்பு மாதிரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து ஏ.கருப்பையா, ஆரோக்கியம், பாலசுப்பிரமணி. சி.வென்னிமலை என நான்கு பேரின் படைப்புகள் இதில் இடம்பிடித்துள்ளன.

இந்தக் கண்காட்சியில் நேரடியாகப் பங்கேற்றுள்ள வென்னிமலை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த தனது படைப்பை இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். தீப்பெட்டி ஆலைகள், கட்டிடக் கட்டுமானம், லேத் பட்டறைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் இன்றும் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் ‘கலவைச் சிற்பமாக’ (mixed medium - sculpture) உருவாக்கியதாகச் சொல்கிறார். 12 அடி நீளத்தில் ஒரு பெரிய எரிந்த தீக்குச்சி, அதனைத் தாங்கி நிற்கிற தீப்பெட்டி போன்று இவரது சிற்பம் அமைந்திருக்கிறது.

“நம்பிக்கையே வாழ்வுக்கான திறவுகோல் என்று சொல்கிற வகையில் இதனை உருவாக்கியிருக்கிறேன். இந்தப் படைப்பைச் சென்னையில் இருந்து டெல்லிக்கு எடுத்து வந்தது முதல் இதில் ஒவ்வொரு நாளும் பங்கேற்பது வரை அனைத்தும் புதுவிதமான அனுபவங்களைத் தந்து வருகிறது.

இங்கிருக்கும் பல்வேறு கலைஞர்களின் படைப்புகள் அரசு அலுவலகங்களில், அவை சார்ந்த நிகழ்வுகளில் காட்சிப்படுத்தப்படுகிறபோது, அவற்றில் கூறப்பட்டிருக்கிற கருத்துகள் குறித்த விழிப்புணர்வு மேலும் பெருகும் என்பது எனது அபிப்ராயம்” என்கிறார் வென்னிமலை. தனது கல்லூரி சீனியர்களின் படைப்புகளுடன் தனது படைப்பும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகிறார்.

கலைஞர்களின் திறனையும் உழைப்பையும் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல் அவர்களது கலைப் படைப்புகளின் விற்பனையை ஊக்குவிக்கும்விதமாகவும் இக்கண்காட்சி முன்னெடுக்கப்படுகிறது என்பது ‘தக்‌ஷண’த்தின் இன்னொரு சிறப்பு. அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ‘தக்‌ஷணம்’ கண்காட்சி, பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை அடுத்து, இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி: சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் ‘தக்‌ஷணம்’
தென்காசியில் ஒரு தொழில்முனைவு!

X