

அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்று யாரைப் பார்த்தாலும் எனக்கு நேரம் சரியில்லை, வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று புலம்பித் தீர்க்கும் நண்பர் ஒருவரைச் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.
அவரிடம் பேசினால் இரண்டு நாள்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிடும். அய்யய்யோ இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே என்று நினைத்தேன். ஆனால், நண்பரின் முகம் புத்துணர்வுடன் காணப்பட்டது. அன்றைக்கு அவர் பேசிய விதமும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
“என்னப்பா, இவன் இன்னும் புலம்பலை யேன்னு பார்க்கறீயா? ஒரு வாகனத்தில் 'எண்ணம்போல் வாழ்கை’ என்கிற வாசகத்தைப் படித்தேன். அது இரண்டு நாள்கள் என்னை யோசிக்க வைத்துவிட்டது. பிறகு எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். இத்தனை நாளும் நம் எண்ணங்களே நம் நிம்மதியைக் குலைத்துவிட்டன என்பதைப் புரிந்துகொண்டேன். எப்போதும் பிறரைக் குறைசொல்வதைவிட, என் எண்ணங்களைச் சரி செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது.
“உண்மையில் நம் எண்ணங்களே நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. நாம் எதையும் குறையாகப் பார்க்கும்வரை நம்மிடம் குறைகளே நிறைந்திருக்கும். அது நம்மைச் சுற்றி இருப்ப வர்களையும் கஷ்டப்படுத்தும். மேலும் எதிர்மறை எண்ணங்கள் மனதை மட்டுமல்ல, உடலையும் கடுமையாகப் பாதிப்பதை அனுபவரீதியாக உணர்ந்தேன். அதனால் கஷ்டப்பட்டு என்னைமாற்றிக்கொண்டேன். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. இப்போது வழக்கத்துக்கு வந்து விட்டது. இப்போது நானும் நிம்மதியாக இருக்கிறேன். என் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது” என்றார்.என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. - ஏ. மூர்த்தி, திருவள்ளூர்.