

‘குளிக்கப் போவோமா?’ என்றால் இப்போது அதிர்ச்சி யடைவார்கள். ஆனால், அந்தக் காலத்தில் கிராமங்களில் வழக்கமான சொல்லாடல் இது. அப்போது பெரும்பாலும் தோட்டங்களில் உள்ள கிணறுகள், குளங்களில்தான் குளியல். ஒவ்வொரு தெருவினரும் அவரவருக்குப் பக்கத்தில் இருக்கும் கிணறுகளுக்குச் சென்று குளிப்பார்கள்.
எங்கள் பகுதியில் உள்ள அனைத்துப் பெண்களும் பெரியவர் ஒருவரின் தோட்டத்துக்குதான் செல்வோம். யார் போனாலும் குளிக்கத் தண்ணீர் கொடுத்துவிட வேண்டும் என்பதில் அவர் அக்கறையாக இருப்பார். சில நாள்கள் குளிக்கச் செல்லும்போது, அவர் வீட்டிற்குச் சாப்பிடப் போய்க் கொண்டிருப்பார்.
அப்போதும்கூட மோட்டார் அறையின் சாவியைக் கொடுத்துவிடுவார்! கிணற்றில் இருந்து நீரை இறைக்க பம்பு மோட்டார் வேண்டும். மழைக் காலத்தில் நிலத்தடி நீர் உயர்ந்து கிணற்றில் தண்ணீர் மேலே வந்துவிடும். அப்போது மோட்டாரை மேலே ஏற்ற வேண்டும்.