

ஜென் தத்துவம் என்பது ஜப்பானில் செழித்து வளர்ந்த பௌத்த மதத்தின் ஒரு தத்துவப் பிரிவு. ஜப்பானியப் பண் பாட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆட்சி செலுத்துவது. பொ.ஆ. (கி.பி.) பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஜப்பானில் வேரூன்றிய ஜென், அதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவின் தத்துவ ஆன்மிக இயக்கங்களில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது.
ஜென் தத்துவப்படி, ‘கடவுளும் பிரபஞ்சமும் ஒன்றே’ அல்லது ‘கடவுளின் பலவகை வெளிப்பாடே பிரபஞ்சம்.’ ஜென் தத்துவம் புதிர்களாலும் குட்டிக் கதைகளாலும் விளக்கப்பட்டு மக்களிடையே பரவிவந்த பௌத்த மதத்தின் ஒரு பிரிவு எனலாம். `இந்தக் கணத்தில், இந்தக் கணத்தை வாழ்’ என்னும் இருத்தலியல் கொள்கைகளைப் பெரிதும் பேசுகிறது ஜென் பௌத்தம்.