வானகமே இளவெயிலே.. | பாற்கடல் 17
அது தகரம் வேய்ந்த தாழ்வாரம். தகரத்திற்குக் கீழாகப் பிரப்பந்தட்டி என்கிற மூங்கிலால் செய்த தட்டி அடித்துக் கோடைகாலத்தில்கூட அந்த இடம் குளிர்ச்சியோடு இருக்கும். தோட்டத்துக் காற்றும் துணைக்கு வீசும். அதன் வடமேற்கு மூலையில் நல்ல வெள்ளைக்கல்லில் வடித்த ஓர் ஆட்டுரல் பதித்திருக்கும். சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்த ஓய்வான மதிய வேளையில் அதில்தான் வளவுப் பெண்கள் மாவரைப்பார்கள்.
அப்படி யாராவது மாவரைத்தால் அவரை நெருங்கி, அல்லது நடுவில் வட்டமாக மற்ற பெண்கள் அமர்ந்துகொண்டு வீட்டுக்கதை, தெருக்கதை, ஊர்க்கதை, சினிமாகதை எல்லாம் பேசுவார்கள். ‘ஊட்டுக்குள்ள இருக்கிற ஊசக் குமரிக்குத்தான் ஊர்க்கதை எல்லாம் தெரியும்’ என்று சொலவடை சொல்கிற மாதிரி சகல விஷயங்களையும் பேசு வார்கள். அவ்வப்போது பொதுவில் அரைத்த மருதாணியை ஒருவருக்கு இன்னொருவர் வைத்துக்கொண்டே பேசுவார்கள். மருதாணி பறித்து வருவது என் வேலை.
