ஸ்விஸ் எனும் சொர்க்கம் 32: ’மேடம் ஜிஸ்டாட்’

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 32: ’மேடம் ஜிஸ்டாட்’
Updated on
2 min read

ஜிஸ்டாட்டில் மிகப் பெரிய பால் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தும் தன்யாவைச் சந்தித்துப் பேசினோம். சிறிதும் தயக்கமில்லாமல் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''எனக்குப் பசுக்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். இப்போதுகூட நான் பத்துப் பசுக்களை வைத்துப் பராமரிக்கிறேன். பொருளாதார வகையில் அவை எனக்கு லாபமளிக்கின்றன. எனக்கு ஒரே மகள். ஆனால், அவளுக்குப் பால் பண்ணை போன்றவற்றில் சிறிதும் ஈடுபாடு இல்லை. அவளுக்குப் பிடித்தது இசை. அதுவும் டபுள் பாஸ் இசைக் கருவியை வாசிப்பதில் அவளுக்கு அலாதி பிரியம். இதே ஜிஸ்டாட் கிராமத்தில்தான் என் தாத்தா பாட்டி வசித்தார்கள். அப்போது இங்கே மருத்துவமனை வசதிகூடக் கிடையாது. என்றாலும் சுற்றுலா மக்களின் சொர்க்கமாக இது விளங்கியது. எனக்கு இப்போது 52 வயது. பால் பொருள்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். என் பெற்றோர் தீவிர கத்தோலிக்கர்கள். ஆனால் எனக்குப் பலவித தெய்வங்களையும் பிடிக்கும்'' என்றார்.

போருக்குப் பின்...

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு ஜிஸ்டாட் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வழியில் பல கட்டுமானங்களைச் செய்ய அரசு முன்வந்தது. அங்குள்ள மக்கள் அனைவருமே அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம் (இதற்காகப் பலரின் நிலங்கள் மற்றும் வீடுகள் மாறுதல்களுக்கு உள்ளாயின).

இதைத் தொடர்ந்து டென்னிஸ் அரங்குகள், நீச்சல் குளங்கள், ஸ்கீயிங் விளையாட்டு ஆகியவற்றுக்கான கட்டுமானங்கள் பெருமளவில் இங்கே உருவாகின. 1980லிருந்து ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல பெரிய ஹோட்டல்களை மூடிவிட்டனர். ஆனால், நிறைய சிறிய ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. அந்த வகையில் ஸ்டேட் பேலஸ் என்பது 1913இல் உருவான முதல் ஆடம்பர ஹோட்டல்.

இந்த இடத்தில் ’மேடம் ஜிஸ்டாட்’ என்கிற வரலாற்றுப் புதினத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதிக அளவில் விற்ற ஒரு நூல் இது. எமிலி ஸ்டீபன் என்கிற பெண்ணின் வாழ்வில் நடந்தது. ஜிஸ்டாட் பகுதியில் ஏழ்மையான குடும்பம் ஒன்றில் பதினான்கு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் எமிலி. அந்தப் பகுதியில் வசித்த பல இளம் பெண்களைப் போலவே எமிலியும் மேம்பட்ட வாழ்க்கையை நாடி, வீட்டைவிட்டு வெளியேறினார். பல வருடங்கள் ஜெனீவாவிலும் பாரிஸிலும் வாழ்க்கையைக் கழித்த பிறகு தன் சொந்த மண்ணுக்குத் திரும்பினார்.

அங்கு ஒரு பேக்கரிக்கு உரிமையாளர் ஆனார். பின்னாளில் ஜிஸ்டாட் கிராமத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக மாறினார். 1898இல் அங்கு நடக்கும் ஒரு பெரும் தீ விபத்து பலரது வாழ்க்கையை மாற்றிப் போட்டது. அப்போது தனது கஷ்ட நஷ்டங்களையும் மீறி அந்தக் கிராமத்தை ஒரு சுற்றுலாப் பகுதியாக மாற்றுவதில் முனைப்புக் காட்டி வெற்றி பெற்றார் மேடம் ஜிஸ்டாட்! ஜிஸ்டாட்டின் குரல் பெண்ணுரிமைக்காகவும் ஒலித்தது.

(பயணம் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in