

'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' என்கிற பிரபல இந்திப் படத்தின் பல காட்சிகள் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் (GStadd) என்கிற பகுதியில் எடுக்கப்பட்டவை. இந்தத் தகவல்களை அவர்கள் அழகாகச் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.
’ஸானென்’ பகுதியில் உள்ள பாலத்துக்கு அருகே ஷாருக்கான், கஜோல் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இந்தப் பாலத்தில்தான் கஜோல் தன்னை விரும்புகிறார் என்பதை ஷாருக்கான் அறிந்து கொள்கிறார். மிக வித்தியாசமான ஸானென் ரயில் நிலையமும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றது.
1942 இல் ஜிஸ்டாட்-ஸானென் விமானப் பறப்பு திறந்துவைக்கப்பட்டது. இது முக்கியமாக ராணுவ விமானங்களுக்கானது. பின்னர் ஹெலிகாப்டர் தளமாகவும் இது பயன்பட்டது. தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஆகாய விமானம் ஒன்று மெதுவாக நகரத் தொடங்க, அதோடு போட்டி போட்டுக்கொண்டு ஷாருக்கான் ஓடிவருவதற்கும் பயன்பட்டது!
நகர வாழ்வின் சந்தடியிலிருந்து அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கிறது ஜிஸ்டாட். இயற்கையின் அழகு மலைகள் அளிக்கும் பெரு அமைதி, ஒரு கிராமத்தின் கவர்ந்திழுக்கும் சூழல் அனைத்துமாக நிறைந்திருக்கிறது இது. மனதுக்குப் பேரமைதியைக் கொடுக்கிறது. அங்கே தங்கினால் புது ஐடியாக்கள் உருவாகும் போலிருக்கிறது!
மிக அகலமான தெருக்கள். ஆங்காங்கே பல இடங்களில் குடிநீர் வசதி உண்டு. ஒவ்வொரு குழாய்த் தொட்டிக்குக் கீழும் ஒரு சிறிய தொட்டி இருக்கிறது. விலங்குகள் அந்த நீரைக் குடிப்பதற்கு.
சாலைகளில் ஆங்காங்கே மரங்கள். ஒவ்வொரு மரத்துக்குக் கீழும் அதைச் சுற்றிலும் வித்தியாசமான வடிவத்தில் மர பெஞ்சுகள் காணப்படுகின்றன. தங்களுக்கு நெருங்கியவரின் நினைவுச் சின்னமாக அந்த பெஞ்ச்சை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான வாசகங்களும் காணப்படுகின்றன.
கட்டிடங்களுக்கு நடுவே கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் அங்கிருந்து மலையைப் பார்க்க முடிகிறது.
சாலைகளில் ஆங்காங்கே சில விலங்குகளின் சிலைகளும் அமைந்து கவனத்தைக் கவர்கின்றன. குறிப்பாக இரண்டு செம்மறியாடுகளின் சிலைகள். ஒரு கரடியின் சிலை வெகு உயிர்ப்புடன் இருக்கிறது.
போதிய இடைவெளி விடப்பட்டு காட்சிதரும் மரத்தினால் உருவாக்கப்பட்ட வீடுகள் மனதை மயக்குகின்றன. அவற்றின் முன்னே அழகாகச் செதுக்கப்பட்ட புற்கள். வீடுகளின் முன்புறத்தில் ஆங்காங்கே அற்புதமான மலர்க் கொத்துகள்.
அந்தப் பகுதியில் ஒரு காரைக்கூடக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது, அந்தக் கிராமத்தில் கார்கள் ஓட்ட தடை என்று. வாகனங்களால் ஏற்படும் நச்சுக் காற்று இல்லாதது அந்தப் பகுதியின் தூய்மைக்கு வலு சேர்க்கிறது.
மேரி பாப்பின்ஸ், சவுண்ட் ஆஃப் மியூசிக் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஜூலி ஆண்ட்ரூஸுக்குக் கௌரவக் குடிமகள் என்கிற விருதை 2014இல் அளித்தது ஜிஸ்டாடின் ஒரு பகுதியான ஸானேன். அறுபதுகளில் இங்கு ஒரு வீட்டை வாங்கிய அவர், அதற்குப் பிறகு பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டார். ‘கடவுள் படைத்த கடைசி சொர்க்கம் ஜிஸ்டாட்’ என்று கூறி புளகாங்கிதப்பட்டார். உண்மையாக இருக்கக்கூடும்!
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 30: வியப்பூட்டிய லொஸான் ரயில் நிலையம்