ஸ்விஸ் எனும் சொர்க்கம் 23: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 23: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
Updated on
1 min read

சுவிட்சர்லாந்தின் ’கிளேசியர் 3000’ பனிமலையில் அமைந்துள்ள தொங்கு பாலத்தில் நடந்து முடிந்த பிறகு கீழே வந்தால் ‘அல்பைன் கோஸ்டர்’ என்கிற பனியில் நகரும் பேருந்து உள்ளது. இந்தப் பேருந்தில் பயணித்த பிறகுதான் பனிமலையின் கீழ் பகுதியை நாம் அடைய முடியும். அங்கு பனிச்சறுக்கு நாய்கள் பூட்டிய வண்டியில் நாம் சிறிது தூரம் பயணிக்கலாம். மேலும் அங்குள்ள ஹெலிகாப்டர் மூலம் பனிவிலங்குகளைக் காணவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

யூரோப் யு ரயில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கிளேசியர் 3000 பனிமலைக்கான நுழைவுக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்விஸ் டிராவல் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடி.

பிரமிக்க வைத்த இசைத் திருவிழா: உலகப் புகழ்பெற்ற மான்ட்​ரூ ஜாஸ் திருவிழா இந்த ஆண்டு ஜூலை 16 முதல் 19 வரை நடைபெற்றது. பல பிரபல ஜாஸ் இசைக்கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, ஜாஸ் இசை தொடர்பான பயிலரங்குகள், நாடகங்கள், சின்ன சின்ன விளையாட்டு நிகழ்வுகளும் அங்கு நடக்கும்.

மாலை ஆறு மணியிலிருந்து நிகழ்ச்சிகள் தொடங்கி விடுகின்றன. இங்கிலாந்து, குரேஷியா, ஸ்லோவேனியா, பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இசைக் கலைஞர்கள் வந்திருந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் ஒரு ஸ்விஸ் இசைக்குழுவும், ஒரு சர்வதேச பிரபல இசைக்குழுவும் அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தின. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாகப் பாடும் கலைஞர்களுக்குப் பெரும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. இதில் சுவாரசியம் என்னவென்றால் பரிசுக்குரிய நபரை மக்களே வாக்களித்து, தேர்ந்தெடுக்கிறார்கள்.

நாங்கள் சென்ற அன்று ஜெனிவாவைச் சேர்ந்த ’டான் அண்ட் டைனமைட்’ என்கிற இசைக்குழு ஜாஸ் இசைத்தனர். அடுத்து மேடை ஏறியது ’ஃப்ரீகைண்ட்’ என்கிற இசைக்குழு. இதில் குரேஷியா, ஸ்லோவேனியா நாடுகளிலிருந்து வந்திருந்த இரண்டு பாடகிகளின் ​டூயட் மெய்மறக்கச் செய்தது. ஹிப் ஹாப் பாடல்களும் பாடப்பட்டன.

நாங்கள் சென்ற நாளில் ’மனோ கலோ’ என்பவர் (இவர் ஆப்பிரிக்க பாஸ் இசைக்கருவியின் ராணி என அழைக்கப்படுகிறார்) ஆப்பிரிக்காவில் பெண் இசைக் கலைஞர்கள் குறித்துப் பயிலரங்கத்தை நடத்தினார். ஏரிக்கரை ஓரமாகவே மிக நீண்ட தூரத்துக்கு விரிந்து கொண்டிருக்கிறது இந்த இசைத் திருவிழா.

இசை நிகழ்ச்சிகளை நின்று கொண்டு கேட்கலாம் (காதில் பொருத்திக் கொள்ள இயர்ஃபோன் தருகிறார்கள். காரணம் சிலருக்கு அதீத ஒலி காரணமாகச் செவிகள் பாதிக்கப்படலாம்.) சில இடங்களில் உட்கார்ந்து கொண்டு கேட்கலாம். ஆடிக்கொண்டே கேட்கலாம். பாடிக் கொண்டே கேட்கலாம். ஏன் படகுகளிள் உட்கார்ந்து கொண்டேகூடக் கேட்கலாம். பெரும்பாலானவர்கள் உணவு உட்கொண்டபடியே கேட்டு ரசித்தனர்.

(பயணம் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in