ஸ்விஸ் எனும் சொர்க்கம் 22: பிரமிக்கவைத்த ‘கிளேசியர் 3000’

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 22: பிரமிக்கவைத்த ‘கிளேசியர் 3000’
Updated on
2 min read

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலை பல இடங்களில் திடீரென்று தோன்றி கண்ணாமூச்சி காட்டும், விளையாடும், நம்மை வியக்க வைக்கும். ஆனால் ஆல்ப்ஸ் மலையின் மையமாக வைத்து சுவிட்சர்லாந்தில் சில இடங்களுக்குப் பயணம் ஆனோம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று ‘கிளேசியர் 3000.’

இரண்டு முறை அந்த இடத்துக்குக் கிளம்புவதாக இருந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டு மூன்றாவது முறைதான் கிளம்ப முடிந்தது. காரணம் முதல் இரண்டு முறையிலும் லேசான மேகமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆரூடம் கூறப்பட்டது. “மேகம் சூழ்ந்து இருந்தால் பனிமலையைத் தெளிவாகப் பார்க்க முடியாது. நாம் செல்வது வீணாகிவிடும்” என்று மகன் அழுத்தமாகக் கூறிவிட்டார்.

‘ஜிஸ்டாட்’ (Gstadd) என்கிற பேரழகான இடத்தில் இருந்து (அதையும் இந்தத் தொடரில் பிறகு பார்ப்போம்) இருபது நிமிடப் பயணத்தில் இங்கு வந்துவிடலாம். கேபிள் காரில் உயரே செல்ல வேண்டும். கேபிள் காரில் ஏறி 3,000 மீட்டர் உயரத்திலுள்ள ஓரிடத்தை அடைய முடியும், அதனால்தான் ‘கிளேசியர் 3000’ என்று அந்த இடத்துக்குப் பெயர். கேபிள் காரில் ஏறிய பதினைந்து நிமிடங்களிலேயே மிக உயரத்துக்குச் செல்ல முடியும்.

இப்போதுதான் கிளம்பியதுபோல் இருந்தது, ஆனால் கீழே பார்த்தால் கிடுகிடு பள்ளம். இந்தப் பதினைந்து நிமிடங்களில் மூன்று கிலோ மீட்டர் உயரத்தை அடைந்துவிட்டோம்.

அங்கு இறங்க வேண்டிய கேபிள் கார் நிலையம் மிகவும் வித்தியாசமானதாகவும் அழகாகவும் இருந்தது. சுவிஸ் சிற்பக் கலைஞரான மரியோ போட்டோ என்பவர் இதை வடிவமைத்திருக்கிறார். நிலையத்தில் இறங்கியதற்குப் பிறகு பல படிகளைக் கடந்து மேலே ஏற வேண்டியிருக்கிறது. கொஞ்சம் உயரமான படிகள்தான். பனி உருகி ஆங்காங்கே சொட்டிக் கொண்டிருந்தது. எனவே வழுக்கி விடாமலும் ஏற வேண்டியிருந்தது.

ஆனால் அந்தப் படிகளைக் கடந்துவிட்டால் நாம் காணும் காட்சி மனதை கொள்ளை கொள்ளும். அங்கு காணப்படும் நீண்ட தொங்கு பாலத்தில் நடந்து சென்றோம். வெகு தூரத்தில், அந்தத் தொங்கு பாலம் முடியும் இடத்தில் உயரே ஒரு சுவிட்சர்லாந்து கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிக்கிறது.

இது இரண்டு மலைச் சிகரங்களுக்கு நடுவே அமைந்த உலகின் முதல் தொங்கு பாலம். இதில் நடப்பது ‘திரில்’லாக இருந்தது என்றாலும் கடினமாக இல்லை. ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் இங்கு எல்லாத் திசைகளிலும் பனி மலைகளைக் காணலாம். செப்டம்பர் மாத இறுதியில் மட்டும் ஒரு மாதம் பராமரிப்புக்காக மூடப்படுகிறது. அப்போது வர இருப்பவர்கள் விவரம் தெரிந்துகொண்டு வரலாம். ஒன்றரை வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ’கிளேசியர் 3000’இல் அனுமதி கிடையாது.
நாங்கள் சென்றிருந்தபோது அங்கு நல்ல குளிர். அரை டிரௌசர் போட்டுக் கொண்டு வந்திருந்த இரண்டு இளம் பெண்கள் குளிரில் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

தொங்கு பாலத்தில் நடந்தபடி நாம் பார்க்கும் காட்சிகள் எதிர்பாராதவை. எய்கெர், மோன்ச், ஜுங்ஃப்ரூ, மேட்டர்ஹார்ன் உள்ளிட்ட இரண்டு டஜன் பனிமலைச் சிகரங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தன. அதாவது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் வெள்ளைப் பனி. மேலும் சில அனுபவங்களும் காத்திருந்தன.

(பயணம் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in