

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்திலிருந்து மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்தவர் காலித் அகமது. அவருக்கு அன்று திருமணம். வாழ்வின் மிக முக்கிய மான அந்த நாளில் காலித் செய்த செயலை வேறு யாரும் செய்யத் துணிந்திருக்க மாட்டார்கள். யாராலும் உரிமை கோரப்படாமல் இரண்டு மாதங்களாகச் சவக் கிடங்கில் இருந்த சடலத்தை எடுத்து, அடக்கம் செய்துவிட்டு, உறவினர்களும் நண்பர்களும் புடைசூழ வாழ்க்கைத் துணையைக் கரம் பற்றினார் காலித் அகமது! இதை அவர் பரபரப்புக்காகச் செய்யவில்லை.
அவரே விரும்பிச் செய்த மனிதநேயச் செயல். கடந்த 2017 இல் சென்னையின் சூளைமேட்டில் அவர் தொடங்கிய ‘உறவுகள் அறக்கட்டளை’ கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழாயிரம் சடலங்களை அவரவர் மதச் சடங்கின்படி அடக்கம் செய்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து சடலங்களை இக்குழு அடக்கம் செய்கிறது. காலித் அகமதுவே தனது தன்னார்வலர்களுடன் சடலங்களின் அடக்கப் பணிகளைக் கவனிக்கிறார்.
அவரின் இணையர் ஃபிரோஸ் இந்தச் செயலை எப்படி ஏற்றுக்கொண்டார்? “திருமணத்தன்று உறவினர்கள், நண்பர்களால் வீடும் மண்டபமும் நிறைந்து வழிந்தன. நம்மை நேசிக்க இவ்வளவு பேர் இருக்கிறார்களே என மகிழ்ந்தேன். ஆனால், அடக்கம் செய்ய ஆளில்லாமல் ஒருவரது சடலம் இரண்டு மாதங்களாகச் சவக்கிடங்கில் இருப்பதாகக் காவல்துறை நண்பர்கள் அழைத்தனர். எனக்கு அன்றைக்குத் திருமணம் என்று அவர்களுக்குத் தெரியாது.
நான் செய்யும் செயலை என் சொந்தக் காரணங்களுக்காகத் தள்ளிப்போட விரும்பவில்லை. என் மணவிழாவை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற விரும்பினேன். எனக்கு இங்கே நிறைய உறவுகளும் நண்பர்களும் இருக்கிறார்கள். எனவே, ஆளில்லாமல் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவர் இருந்தால் அவருக்கு எவ்வளவு பெரிய மரியாதையாக இருக்கும். நான் அந்த ஒருவனாக இருக்க விரும்பினேன். இதை ஃபிரோஸிடம் விளக்கினேன், அவர் புரிந்துகொண்டார்” என்கிறார் காலித் அகமது.
நிர்கதியாக இறந்த ஒருவரின் சடலமோ அல்லது இறுதிச் சடங்கு செய்யக்கூட வசதியில்லாதவர் களின் சடலமோ, அடையாளம் காண முடியாத உரிமை கோரப்படாத சடலமோ, 24 மணி நேரத்தில் எப்போது அழைத்தாலும் அமரர் ஊர்தியுடன் சென்று, சடலங்களைப் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறது ‘உறவுகள் அறக்கட்டளை.’ இந்தச் சேவை மிக எளிதானதாகத் தோன்றலாம்.
ஆனால், ஒரு சடலத்தை அடக்கம் செய்யும்முன் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறை களுக்காகப் பெற வேண்டிய சான்றி தழ்கள், அனுமதி கடிதங்கள், சடலம் இருக்கும் பகுதியின் காவல் துறையின ரது ஒத்துழைப்பு என அதற்கு மட்டுமே பல மணிநேரம் செலவிட வேண்டியிருப்பதை காலித் சுட்டிக்காட்டுகிறார்.
இதனால், ஆர்வத்துடன் வரும் தன்னார்வலர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து ஈடுபட முடியாமல் போய்விடுகிறார்கள். காரணம், சடலத்துடன் நீண்ட நேரம் இருக்கும் துயரம் ஒரு கட்டத்தில் அவர்களை மனரீதியாகப் பாதித்துவிடுகிறது. அதையும் மீறிய மனப்பக்குவம் பெற்றவர்கள் உறவுகளாக எங்களுடன் தொடர்ந்து பயணிப்பவர்கள்” என்கிறார் காலித். உரையாடிக் கொண்டிருந்தபோதே, அடக்கத்துக்கு உதவி கேட்டு அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன. இப்படியொரு சேவையை செய்ய வேண்டும் என ஏன் நினைத்தார்?
“சென்னை விடுதியில் தங்கிப் படித்தபோது நானும் என் நண்பர்களும் சாலையோரத்திலும் கோயில், பள்ளி வாசல், தேவாலய வாசல்களிலும் பிச்சை கேட்டு அமர்ந்திருக்கும் முதியவர் களுக்குப் பண்டிகை நாள்களில் உணவு வழங்கி மகிழ்ந்தோம். நான் சிலரிடம் உரையாடினேன்.
அப்போது ஒரு முதியவர், ‘எங்களுக்குப் பத்துப் பேர் பிச்சை கொடுத்தா, எங்க முகத்தை அன்பா பார்த்துக் கொடுக்குறவங்க அதில அஞ்சு பேர்தான். அவங்கள நான் குற்றம் சொல்லலை. வாழ்க்கைக்காக ஓடுறாங்க. நானும் அப்படி ஓடி ஓடிதான் மூணு பிள்ளைகளை வளர்த்தேன்.
இந்த 75 வயசுல மூணு பேருமே என்னைக் கைவிட்டுட்டாங்க. நான் எதிர்பார்க்கிறது நான் செத்துக்கிடந்தா, அவங்களுக் குத் தகவல் கிடைச்சா, ஒரு கண்ணியமான இறுதிச் சடங்கு செய்வாங்க ளான்றதுதான். இப்போ அந்த நம்பிக் கையும் இல்லாமல் போச்சு’ என்று உடைந்து அழுதார். அந்தப் பண்டிகை நாளின் மகிழ்ச்சி என்னிடமிருந்து அகன்றது. ஆனால், அன்றிரவு நான் செய்ய வேண்டிய சமூகப் பணி என்ன என்பதைப் புரிந்துகொண்டேன். நம்மை இந்த உலகத்துக்குத் தந்தவர்கள், நம்மை ஆளாக்க எவ்வளவோ உழைக்கிறார்கள்.
ஆனால், நம்மிடமிருந்து பதிலுக்கு மிகக் குறைவாகவே கேட்கிறார்கள்” எனும் காலித் தன்னுடைய நண்பர்கள் பத்துப் பேருடன் சேர்ந்து ‘உறவுகள் அறக்கட்டளை’யை உருவாக்கியிருக்கிறார். உடல் அடக்கத்துடன் நின்று விடாமல், உடல்நலம் குன்றிச் சாலை ஓரங்களில் படுத்துக்கிடக்கும் முதியோர், நிராதரவானவர்களை மீட்டு இல்லங்களிலும் மருத்துவ மனைகளிலும் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறார்.
தற்போது குரூப் 1 தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கும் காலித் அகமது, நன்கொடைகள் மூலமே 2 ஆம்புலன்ஸ் வண்டிகள், 5 அமரர் ஊர்திகள் ஆகியவற்றுக்கான எரிபொருள், 4 முழுநேர வாகன ஓட்டிகளுக்கான ஊதியம், இறுதிச் சடங்குகளுக்கு ஆகும் செலவு ஆகிய வற்றைச் சமாளித்து வருகிறார்.
(பொறியாளர்களைக் கண்டறிவோம்)
- jesudoss.c@hindutamil.co.in