

'ஆர்ட் ப்ரூட்’ அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற வித்தியாசமான கலைப்படைப்புகளைப் படைத்தவர்களில் சிலர்.
அமெரிக்காவில் பிறந்தவர் ஜார்ஜஸ் வைடனர். அப்பா சிறுவயதில் இருந்துவிட, அம்மா மது நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். வைடனர் கணிதத்திலும் ஓவியத்திலும் தன் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அற்புதமான நினைவாற்றல் கொண்டவர். அமெரிக்க விமானப்படையில் ஒரு தொழில்நுட்ப ஊழியராகச் சேர்ந்தார். பின்னர் மனநிலை சரியில்லாமல் போக, அதற்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றும் ஓவியங்கள், காலண்டர்கள் ஆகிய வடிவங்களில் அவரது கலைப்படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அடால்ஃப் வோல்ஃபி சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவர். விவசாயக் குடும்பமொன்றில் வளர்ந்தவர். பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காகச் சிறைப்படுத்தப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்த உடனே மீண்டும் இந்தத் தவறைச் செய்யவே, அவர் மனநலம் குன்றியவராகக் கருதப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறக்கும் வரை அங்கேயே இருந்தார். தனது 35 வயதிலேயே ஓவியம் தீட்டுவது, இசைக்கோவையை உருவாக்குவது போன்றவற்றைத் தொடங்கிவிட்டார். இணையொட்டுப் படங்கள் (கொலாஜஸ்) என்கிற முறை இவருக்கு மிகவும் பிடித்தது. இவரது ஓவியங்களில் கண்களைச் சுற்றிலும் ஒரு கவசமும் அதில் இசைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
லண்டனுக்கு 19 வயதில் திரும்பிய மேரி, மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்தார். 1903இல் அவரின் சித்தி மூலம் ஆவி உலகம், ஜோதிடம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டார். தனது ஓவியத்தை ஆவிகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்று கூறினார்.
கிளிமென்ட் ஃப்ரெய்ஸ் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். தனது 24 வயதில் தன் பெற்றோருடன் அவர்கள் தங்கியிருந்த பண்ணை வீட்டை எரிக்க முற்பட, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வன்முறையில் ஈடுபட்டார். எனவே மிகக் குறுகலான சிறையில் அடைக்கப்பட்டார். அதன் சுவர்கள் மரத்தினால் ஆனவை. ஒரு ஸ்பூனைக் கொண்டு அந்த மரத்தில் விதவிதமான கலை வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்.
'ஆர்ட் ப்ரூட்’ அருங்காட்சியகத்தில் காணப்படும் மிக வித்தியாசமான கலைப் பொருள்கள் மனதில் ஓர் அதிர்வை ஏற்படுத்துகின்றன. முடிவில்லாத கோடுகள், தலைகீழாகக் காணப்படும் எழுத்துகள், மரங்களில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான முகங்களின் உணர்வுகள், சில ஓவியங்களின் ஜியாமெட்ரி அளவுகள் திகைக்க வைக்கின்றன.
‘கழுதை உருவத்தில் உள்ள ஓநாய், அருகில் இது பற்றிக் கவலைப்படாத வித்தியாசமான ஒரு பெண்மணியின் உருவம்’ என்று முழு உருவப் படைப்புகளும் காணப்படுகின்றன. நான்கு விதமான அரக்க உருவங்கள். அவற்றில் ஒரு காமிக்ஸ் தன்மையும் அழகாகத் தெரிந்தது விதவிதமான வண்ண மீன்கள் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஏதோ ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் அவை இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன.
’ஆர்ட் ப்ரூட்’ என்கிற பிரெஞ்சு வார்த்தைக்கு, 'சுத்திகரிக்கப்படாத கலை’ என்று பெயர். அதாவது யாரும் இந்தக் கலை தொடர்பாக எதையும் இவர்களுக்குக் கற்பிக்கவில்லை. இப்படி ஒரு வித்தியாசமான அருங்காட்சியகத்தை உருவாக்கியவர்களுக்கு ‘ராயல் சல்யூட்’. தங்களது கலைப்படைப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே இந்தக் கலைஞர்களுக்குத் தெரியாது என்பதுதான் நெருடலை ஏற்படுத்துகிறது.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 18: வித்தியாசமான ‘ஆர்ட் ப்ரூட்’ அருங்காட்சியகம்