

திராட்சைத் தோட்டங்களை 'வின்யார்ட்ஸ்' (vineyards) என்கிறார்கள். ஆல்ப்ஸ் மலையில் இந்தத் திராட்சைக் கொடிகள் படர்ந்திருக்கும் அழகே அழகு. பெரும்பாலான திராட்சைகள் மது தயாரிப்பதற்காகப் பயிரிடப்படுகின்றன. என்றாலும் திராட்சை பழச்சாறு, உலர்ந்த திராட்சை போன்றவற்றுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
நாங்கள் தங்கியிருந்த லொசான் பகுதியை 'கிரேட் வைன் தலைநகரம்’ என்பார்கள். அதாவது அதிக அளவில் திராட்சைத் தோட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. நமது தேயிலைத் தோட்டங்கள் போலவே, திராட்சைத் தோட்டங்களும் மலைப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன. எனவே அவை படிகளில் அமைந்திருப்பதுபோல் காட்சியளிக்கின்றன. இந்தத் திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே, அதாவது இருபுறமும் வேலியிடப்பட்ட திராட்சைத் தாவரங்களுக்கு நடுவே உள்ள பாதைகளில் நடப்பது வெகு சுகம். சில திராட்சைத் தோட்டங்களில் இரவு தங்குவதற்கும் அனுமதிக்கிறார்கள். இவை பெரும்பாலும் ஏரிக்கரை ஓரமாகவே அமைந்துள்ளன என்பதால் அழகுக்கு அழகு சேர்கிறது.
அன்று மதியம் மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டிருந்ததால் எங்கும் போக வேண்டாம் என்கிற முடிவில் இருந்தோம். மகன் தன் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். திடீரென்று அவரிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது, "நீங்கள் குடையை எடுத்துக்கொண்டு வீட்டருகே உள்ள அருங்காட்சியகத்துக்குச் சென்று வரலாமே. நானே அங்கு சென்றதில்லை. ஆனால் அருங்காட்சியகம் பற்றி வலைதளத்தில் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்” என்றார். கூடவே அந்த அருங்காட்சியகம் இருக்கும் இடத்தின் விவரத்தையும் அனுப்பினார்.
அங்கீகாரம் பெற்ற ஓவியர்களும் சிற்பிகளும் அநேகம் பேர் உண்டு. ஆனால், விளிம்புநிலை மனிதர்கள், உடலாலும் மனதாலும் அவதிப்பட்டவர்கள், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர்கள் போன்றோரும் சிறந்த கலைத்திறன் கொண்டவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களின் கைவண்ணங்கள் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டாமா?
அவர்களுக்கான ஓர் அருங்காட்சியகமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தின் லொஸான் நகலிலுள்ள ‘ஆர்ட் ப்ரூட்’.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள படைப்புகளை உருவாக்கியவர்கள் யாரிடமும் கலையைக் கற்றுக் கொள்ளாதவர்கள். யாருடைய அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்று எண்ணம் கொள்ளாதவர்கள். எதைத் தங்கள் கலைப்படைப்பின் கருவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தங்களது கருத்துக்கு மட்டுமே முன்னுரிமை தந்தவர்கள். இதுதான் கலை வடிவம் என்று கட்டமைக்கப்பட்டுள்ள எதற்கும் கட்டுப்படாதவர்கள்.
இரண்டு அடுக்குகள் கொண்டதாக அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அனைவரின் முகங்களிலும் வியப்பு. ‘ஆர்ட் ப்ரூட்' அருங்காட்சியகத்திலுள்ள பெரும்பாலான படைப்புகளைக் கொடையாக அளித்தவர் ஜீன் டபஃபெட் என்கிற பிரெஞ்சு ஓவியர்.
ஓர் இடத்தில் இந்தக் கலைப் படைப்புகள் குறித்த ஒரு சிறு குறும்படம் திரையிடப்பட்டது என்றாலும் அதன் விளக்கங்கள் பிரெஞ்சு மொழியிலும், சப்-டைட்டில்கள் ஜெர்மன் மொழியிலும் இருந்ததால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த அருங்காட்சியகத்தில் அவரவர் கலைப்படைப்புகளோடு அந்தக் கலைஞரின் வரலாற்றையும் ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள். அவர்களில் சிலர் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 17: பயன் தரும் ‘மானியத் தொகை’