

பெர்ன் நகரில் அது கரடிக்குழி என்று அழைக்கப்பட்டாலும் அதைக் கரடிப் பூங்கா என்றும் கூறலாம். பசுமையான பகுதியில் காணப்பட்ட அந்த மூன்று ‘புஷ்டியான’ கரடிகளும் வேகமாக நடந்தபோது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. அங்கு இருந்த நீர்நிலைகளில் அவை குளிப்பதும் தூங்குவதும்கூட அழகாக இருந்தன.
காய்கறிகளும் கனிகளும்தான் அந்தக் கரடிகளின் முக்கிய உணவு. கூடவே குறைந்த அளவில் இறைச்சி, மீன்கள் உண்பதும் உண்டு. முந்திரியும் பாதாமும் தினசரி உணவில் சேர்க்கப்படுகின்றன. கான்க்ரீட் தளத்தில் மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கரடிகளின் நடமாட்டத்துக்கு உகந்த வகையில் புல் வளர்வதற்கானச் சூழலும் உண்டாக்கப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் விலங்கியல் துறைதான் இந்தப் பூங்காவை மேற்பார்வை இடுகிறது. காலை எட்டு மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை இந்தக் கரடிகளைக் கண்டு ரசிக்கலாம்.
உயர்ந்த கோபுரத்தால் வசீகரிக்கிறது பெர்ன் தேவாலயம். இது ‘பெர்ன் மின்ஸ்டெர்’ என்றும் அழைக்கப்படுகிறது. 1421ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் கட்டுமானம் 1893ஆம் ஆண்டில்தான் முடிவடைந்திருக்கிறது. 330 அடி உயரம் கொண்ட இதுதான் சுவிட்சர்லாந்தின் மிக உயரமான தேவாலயம்.
ஆரே தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் இது அமைந்திருக்கிறது. தூய வின்சென்ட் பெயரிலும் அழைக்கப்படுகிறது இந்தத் தேவாலயம். இதன் மேற்பகுதிக்குச் சென்று (344 படிகள்) சுவிட்சர்லாந்தின் பல அற்புதப் பகுதிகளைக் காண முடியும். பெர்ன் நகரை மட்டுமல்ல, சற்றுத் தள்ளி உள்ள பனி படர்ந்த மலைகளையும் காண முடியும்.
பெர்ன் நகரில் மேற்படி தேவாலயத்தில் அமர்ந்திருந்தபோது அருகில் அமர்ந்த ஓர் இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் ஒரு வேலையில் இருந்ததாகவும், நான்கு மாதங்களுக்கு முன்பு தன்னைப் பணிநீக்கம் செய்துவிட்டதாகவும் வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இதையெல்லாம் கூறும்போது அவர் முகத்தில் ஒன்றும் அதிகபட்ச வருத்தம் இல்லை. காரணம் சுவிட்சர்லாந்து இது போன்றவர்களுக்கு அளிக்கும் 'மானியத் தொகை.’
வேலையில் இருந்தபோது கடைசி மூன்று மாதங்களில் நீங்கள் பெற்ற ஊதியத்தின் சராசரித் தொகையில் 70 சதவீதத்தை உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கும். உங்களது மாத ஊதியம் 3,769 ‘ஸ்விஸ் ஃபிராங்க்’ மதிப்பைவிடக் குறைவாக இருந்தாலோ, குழந்தைகள் ஊதியத்தை நம்பி இருந்தாலோ, இது 80 சதவீதமாக அதிகரிக்கும்.
உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும் வரை அல்லது இரண்டு வருடங்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். இந்த மானியத்தைப் பெறுவதற்கான தகுதிகள் மிக எளிமையானவை. நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்க வேண்டும். உங்களுக்கு வயது 15க்கு மேல் இருக்க வேண்டும். நீங்கள் ஓய்வூதியம் எதையும் வாங்கிக்கொள்ளக் கூடாது. ஓய்வு பெறும் வயதை அடைந்திருக்கக் கூடாது. வேலை இல்லாத காலக்கட்டத்தில் நீங்கள் உங்கள் தகுதிக்குரிய வேலையைத் தேட வேண்டும். (அந்த முயற்சியை நீங்கள் எடுப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்).ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்து சுவிட்சர்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்தால், அவர் ‘செட்டில்மெண்ட் பர்மிட்’ அல்லது ‘ரெசிடன்ஸ் பர்மிட்’ பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த மானியம் கிடைக்கும்.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 16: பெர்ன் நகரின் அடையாளம் கரடி!