இரவும் பெண்களும் | நகர் உலா

இரவும் பெண்களும் | நகர் உலா
Updated on
3 min read

சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்துக்குச் சென்றிருந்த போது பாங்காக்கில் ஓர் அற்புதத்தைக் கண்டோம். அங்கே பகல்போல் இரவிலும் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. கடைகள் ஷிஃப்ட் முறையில் இயங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

மக்கள் இரவு நேரத்தில் பொருள்களை வாங்க வருகிறார்கள். வேலை முடிந்த பெண்கள் பயமின்றி பைக், கார் பிடித்து வீட்டுக்குச் சென்றார்கள். இரவு உலாவுக்குப் பெண்கள் மட்டும் சென்றுவிட்டு, இரண்டு மணிக்கு மேல் அறைக்குத் திரும்பினோம். முன்பின் அறியாத நாடு. ஆனாலும் அந்த இரவு எங்களை அவ்வளவு இயல்பாக நடமாட வைத்தது. மொத்தத்தில் அங்கே இருளைத் தவிர, பகலுக்கும் இரவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி நாம் வாழும் நகரங்களில் பெண்கள் தனியாகச் சென்றுவிட்டு, இயல்பாகத் திரும்ப முடியுமா என்கிற கேள்வியும் வந்துகொண்டே இருந்தது.

‘சிங்கப்பூரில் எல்லாம் மதியத்துக்கு மேல் அலுவலகம் சென்று, இரவு பன்னிரண்டு மணிக்குப் பத்திரிகை பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவேன். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை. ஆனால், இங்கே வந்தவுடன் அரை மணி நேரம் தாமதமாகிவிட்டாலே என் அம்மா போன் செய்துவிடுகிறார். எனக்கு இது சங்கடமாக இருக்கிறது’ என்றார் ஒரு தோழி.

இன்று நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்கிற கண்டிப்பு பெரும்பாலும் இல்லை. ஏனென்றால், அது சாத்தியமில்லை என்பதால் குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், வழக்கமான நேரத்தைத் தாண்டிச் சென்றால், நிச்சயம் கேள்விகளை எதிர்கொள்ளும் சூழல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் ‘ஹெர் ஸ்டோரிஸ்’ அமைப்பைச் சேர்ந்த நிவேதிதா லூயிஸும் கீதா இளங்கோவனும் ‘இரவும் நமக்கே’ என்கிற முழக்கத்துடன் பெண்களுக்கான ஓர் உலாவை ஏற்பாடு செய்திருந்தனர். பயணம் முழுவதும் அந்தந்த இடங்களின் வரலாறும் பெண்கள் குறித்த விவாதங்களுமாக சுவாரசியமாக இருந்தது.

சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 35 பெண்கள் ஒரு பேருந்தில் இரவு 10.30 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தனர். மெரினா கடற்கரை நோக்கிப் பேருந்து கிளம்பியது.

நகரம் உறங்க ஆரம்பித்திருந்தது. விளக்குகள் ஆளரவமற்ற தெருக்களை அழகாகக் காட்டிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே பெண்கள் சீருடையில் துப்புரவுப் பணியை மேற்கொண்ட வண்ணம் இருந்தனர். பத்துப் பெண்களும் ஓர் ஆணுமாக ஒவ்வோர் இடத்திலும் பிரிக்கப்பட்டு நகரம் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

பன்னிரண்டு மணிக்கு லூப் சாலைக்குள் நுழைந்தது பேருந்து. வலப் பக்கத்தில்புதிதாகக் கட்டப்பட்டுள்ள மீன் அங்காடிபளிச்சென்று கண்களைக் கவர்ந்தது. அந்த நள்ளிரவிலும் மக்கள் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார்கள். சில தள்ளுவண்டி உணவகங்களும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தன.

அனைவரும் அமர்ந்து மெரினாவின் வரலாற்றையும் சிலைகளில் பெண்களின் பங்கையும் குறித்து விவாதித்தனர். ஒரு தேநீர் வியாபாரி ஃபிளாஸ்க்குடன் ஓடிவந்தார். 35 பேருக்குத் தேநீர் இருக்குமா என்று கேட்ட தற்கு, 300, 400 டீகூட இருக்கிறது என்றார்!

அடுத்துப் பேருந்து கிண்டி ‘அர்பன் ஸ்கொய’ருக்குச் சென்றது. தாய்லாந்துக்கு வந்துவிட்டோமோ என்று யோசிக்கும் அளவுக்கு அங்கே மக்கள் குடும்பத்துடன் திரண்டிருந்தனர். ஒரு மணிக்குக் குழந்தை கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் பெரியவர்கள் பிரியாணியை ருசிப்பதையும் பார்க்க முடிந்தது.

காசிமேடுக்கு வண்டி புறப்பட்டது. வழியில் அண்ணா சாலை தர்கா அருகில் சாலைகளில் வாகனங்கள் குவிந்திருந்தன. பிலால், புஹாரி, தலப்பாகட்டி என்று வரிசைகட்டி நின்றிருந்த உணவகங்களில் மக்கள் கூட்டத்தைக் கண்டு பிரமிப்பாக இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பத்தோடு மக்கள் திரண்டிருந்தனர்.

மீன் மார்க்கெட்டுக்குச் செல்லும் வழியில் முதிய பெண்கள் மீன்களை எடுத்துச்செல்லும் ஈயப்பாத்திரங்கள், கூடைகள், பெட்டிகள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களைக் கடந்து மார்க்கெட்டுக்குள் நுழைந்தால், பரபரப்பாக மக்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் கரைக்கு வந்த படகுகளில் இருந்து விதவிதமான மீன்கள், நண்டுகள், கணவாய்கள், இறால்கள் எனக் கூடைகூடையாக இறங்கிக்கொண்டே இருந்தன. அந்தக் கூடைகளை வண்டிகளில் ஏற்றி, வெளியே சென்றுகொண்டே இருக்கி றார்கள். மார்க்கெட்டிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.

நிற்பதற்கு இடமோ பேசுவதற்கு நேரமோ இருக்கவில்லை. அப்படியும் பொடிமீன்களை வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்த ஓர் அம்மாவிடம் பேசினோம். “நானும் எங்க வீட்டுக்காரரும் அலாரம் வச்சு ஒரு மணிக்குக் கிளம்பி வந்துடுவோம். அஞ்சு மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டுக்குக் கொண்டுபோய் வியாபாரம் செய்வேன். பத்து, பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிடுவேன். எங்க வீட்டுக்காரர் வேற வேலை செய்யறார். பிள்ளைகளைப் படிக்க வச்சு, கல்யாணம் பண்ணியாச்சு. என் செலவுக்காகத்தான் இந்த வியாபாரம். மத்தபடி இதில் குடும்பம் எல்லாம் நடத்த முடியாதும்மா” என்றார்.

அங்கிருந்து கோயம்பேடுக்குச் சென்றோம். பூ மார்க்கெட்டுக்குள் நுழையும்போதே உழைத்துக் களைத்த பெண்களும் ஆண்களும் நாய்களோடு வெட்டவெளியில் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து சென்றால், ஒரு பக்கத்தில் அழகாகக் கட்டப்பட்ட பூச்சரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் தேநீர்க் கடையில் விற்பனை சூடுபிடித்திருந்தது.

நான்கு மணிக்கு ஓர் அம்மா, பெரிய தூக்கு வாளியில் இனிப்பு, காரப் பணியாரங்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். எல்லாருக்கும் பசி. 6 பணியாரங்கள் 20 ரூபாய் என்று ஒரு தொன்னையில் வைத்து, தக்காளிச் சட்னியோடு கொடுத்தார். அதிகம் எண்ணெய் இல்லாத இனிப்பு, காரப் பணியாரங்கள் மிகவும் சுவையாக இருந்தன. கடகடவென்று வாளியின் கால்பகுதி காலியாகிவிட்டது!

“சாயங்காலம் ஆறு மணிக்கு மாவு அரைச்சிடுவேன். இரவு ஒரு மணிக்குப் பணியாரம் சுட ஆரம்பிப்பேன். நான்கு மணிக்கு இங்கு வந்துவிடுவேன். வியாபாரிகள் ஐம்பது, நூறுன்னு பணியாரங்களை வாங்குவாங்க. ஏழு, எட்டு மணிக்கு எல்லாம் வித்துட்டுக் கிளம்பிடுவேன். சமையல் என் மருமக பார்த்துக்கிடுவா. நான் இந்த வியாபாரத்தைப் பார்த்துக்கறேன்” என்றார் அந்த அம்மா.

பணியாரங்களைச் சாப்பிட்டுவிட்டு, தேநீர் அருந்திவிட்டு, மார்க்கெட்டுக்குள் சுற்றினோம். வண்ண வண்ணப் பூக்கள் சிறு சிறு குன்றுபோல் குவிந்து கிடந்தன. சூரியன் உதிக்கும் நேரம் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினோம்.

பெண்கள் பணிபுரிவதற்கு இரவு, பகல் என்கிற பாகுபாடு இல்லை என்பதையும் பெண்கள் பணிபுரிவதற்கான சூழல் இருப்பதையும் உணர்ந்துகொண்டபோது, சென்னை பாதுகாப்பான நகரம் என்கிற நம்பிக்கை பிறந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in