

‘தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது என்ன?’ என்கிற கேள்வியை வாழ்க்கையில் ஒரு முறையாவது எதிர்கொண்டிருப்போம். பெரும்பாலும் பட்டாசு, இனிப்பு, திரைப்படங்கள் என்கிற பதில்களையே சொல்லியிருப்போம். ஆனால், இனி நோக்கும் திசையெல்லாம் ‘ரீல்ஸ் தீபாவளி’ என்கிற புதிய பதிலைக் கேட்கப்போகிறோம்.
இது ‘பரிதாப’ தீபாவளி! - தீபாவளிக்கு விடுமுறை எப்போது எனத் தேடும்போது, தீபாவளியே விடுமுறையில் வருவது ஒரு ரகம். சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் வரும் தீபாவளியை எப்படி மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியும்? ‘ஐயோ லீவு போச்சே’ எனக் குமுறத்தானே வேண்டும்.
ஆனால், அட்டகாசமான தீபாவளி என்றால் அது திங்கள்கிழமை வரும் தீபாவளிதான்! அப்போது அது ‘ஒரு நாள்’ தீபாவளியாக இருக்காதே. வெள்ளிக்கிழமை இரவே தொடங்கிவிடும் ‘வீக் எண்ட் தீபாவளி’ அல்லவோ அது. மூன்று நாள்கள் பண்டிகை விடுமுறையோடு செவ்வாய்க்கிழமை யையும் சேர்த்துக்கொண்டால், அதுதான் ‘சரவெடி’ தீபாவளி!
இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே! சரவெடியும் இல்லை, வாண வேடிக்கையும் இல்லை. ஏனென்றால், இந்த ஆண்டு வியாழக்கிழமையிலும் மாத இறுதியிலும் அல்லவா வந்துசேர்ந்திருக்கிறது! ‘லைக் கமென்ட்’
நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் அதை ‘ரீல்ஸ்’ ஆகவும் ‘கன்டென்ட்’ ஆகவும் மாற்றி வைத்திருக்கிறது இந்த இணையச் சமூகம். டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லையா? ஒரு ‘சோக ரீல்’ பார்சல்! துணி எடுக்கும்போது ‘ஷாப்பிங் பரிதாபங்கள்’, ஊருக்குப்போகும்போது ‘டிராவல் விளாக்’, முறுக்குச் சுடும்போது ‘பாட்டி சுட்ட பலகாரம் ரீல்…’ இதன் தொடர்ச்சியாகப் ‘பட்டாசு ரீல்’, ‘இட்லி- கறிக்குழம்பு ரீல்’, ‘பட்டாசு புஸ்ஸான ரீல்’ எனச் சகலமும் ரீல்ஸ் மயம்தான்!
வீட்டுக்கு ஒரு செடி வளர்த்தோம் என்கிற காலம் மாறி வீட்டுக்கு ஒரு ‘யூடியூபர்’, ‘இன்ஃபுளூயன்சர்’களை நாமே லைக் செய்து, ஷேர் செய்து, சப்ஸ்கிரைப் செய்யவைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறோம். ‘பட்டாசு சுற்றுச்சூழலுக்குக் கேடு’ என அறிவுரை சொல்வதும், ‘10,000 வாலா வீடியோ போட்டிருக்கேன், லைக் பண்ணுங்க...’ எனக் காணொளிகளைப் பதிவிடுவதும் ஒரே ஆளா? ஆமாம், ஒரே ‘இன்ஃபுளூயன்சர்’தான்!
இந்த அதிர்ச்சி பார்ப்பவருக்குத்தான் இருக்குமே தவிர, ‘ரீல்ஸ்’ பதிவிடுபவருக்கு அல்ல! இனி தீபாவளியோடு ரீல்ஸும் ஓர் அங்கமாக மாறிப் போயிருக்கும் இந்தச் சூழலை 90ஸ் கிட்ஸும், அதற்கு முந்தைய கிட்ஸும், ‘பூமர்’களும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நீங்கள் எந்தக் காலத்து ‘கிட்’ ஆனாலும், சார்ந்தோர் அனைவருக்கும் ‘விசாலக்கிழமை' தீபாவளி நல்வாழ்த்துகள்!