

தங்கக் கோடாரிக்கு ஆசைப்படாத ஏழை விறகுவெட்டிக்கு அதைப் பரிசாகக் கொடுத்த தேவதையைப் பற்றி நாட்டுப்புறக் கதையாகக் கேட்டிருப்போம். அதைப் போல், கையறு நிலையில் வாழும் எளியவர்களின் கஷ்டத்தைத் தம் தொடர் முயற்சியால் இல்லாமல் செய்துவிடும் தேவதை மனிதர்கள் நமக்கு நடுவே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஆரவாரம் இல்லாமல், விளம்பர வெளிச்சம் படாமல் சேவை செய்து கொண்டிருக்கிறவர்களில் ஒருவர் கடலூர், வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிந்துவரும் தேவி.
அது என்ன ‘ஆசிரியர் பயிற்றுநர்’ பணி? இதுவோர் அரசுப்பணி. அதில் பணியமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் பட்டதாரி ஆசிரியர்கள். இவர்கள் சிறப்புப் பயிற்றுநர்களை வட்டாரம்தோறும் ஒருங்கிணைத்துப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் செய்யும் பணி? மூளை முடக்குவாதம், ஆட்டிசம், இளம் பிள்ளைவாதம், மாற்றுத் திறனாளிக் குழந்தைகள், முக்கியமாக முது கெலும்பும் கால், கை மூட்டுகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிறந்தது முதலே பேசாதவர்களாக, நடக்காதவர்களாக இருக்கும் குழந்தைகளை வீடு வீடாகச் சென்று எடுக்கப்படும் ஆய்வின் மூலம் கண்டறிந்து, வட்டார ‘பள்ளி ஆயத்தப் பயிற்சி மைய’த்துக்குப் (School Readiness Programme centers - SRPC) பெற்றோர் உதவியுடன் அழைத்து வந்து சேர்க்கிறார்கள்.
அங்கே பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அவர்களுக்குப் பேசவும் நடக்கவும் கற்கவும் பயிற்சியளித்து, பின்னர் அவர்களை எல்லாக் குழந்தைகளோடும் பள்ளியில் சேர்ந்து பயிலும் அளவுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆயத்தப்படுத்துகின்றனர். குறைந்தது 15 அரசுப் பள்ளிகளை இதற்காக ஒருங்கிணைக்கும் ஆசிரியர் பயிற்றுநர்களின் களப்பணி முக்கியமானது.
ஏனென்றால், இவர்கள்தான் கண்டறியப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்குப் போய், அவர்களின் நிலை, குடும்பத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து, அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து, குழந்தைகளை ‘வட்டார வள மைய’ங்களில் சேர்க்கின்றனர். சிறப்புப் பயிற்றுநர்களை ஒருங்கிணைக்கும் - ஆற்றுப்படுத்தும் முக்கியமான பணியையும் செய்கிறார்கள். ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்கும் தேவைப்படும் தனித்தனியான வளர்ச்சியையும் தேவைகளையும் கண்காணித்து அதன்படி பணியாற்று கிறார்கள்.
தேவி தனக்குத் தரப்பட்ட பணியைச் செவ்வனே செய்வதுடன் கடமை முடிந்தது என்று போய்விடவில்லை. முதலில் இவர், இந்தக் குழந்தை களுக்கான அடையாள அட்டை, மாதாந்திரப் பராமரிப்புத் தொகை, பாதுகாவலர் பயணப்படி, கல்வி உதவித் தொகை என்று அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதைச் செய்துவிடுகிறார்.
ஆனால், களத்துக்குச் சென்று பார்த்தபோதுதான் அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்துக்குமான அடிப்படைத் தேவையும் வாழ்வாதாரத் தேவையும்தான் அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, பாதுகாப்பாக உணரவைத்து, மனரீதியாக அவர் களை முன்னேற்றுகிறது என்பதைத் தெரிந்துகொண்டார்.
தன்னால் முடிந்தவரை தனது சொந்தப் பணத்தில் தொடக்கத்தில் உதவிகள் செய்துவந்த தேவி, ஒரு கட்டத்தில் தனது சக்திக்கு மீறிய செயல்களைச் செய்யச் சமூகத்திடம் உதவி கேட்கத் தொடங்கினார். சமூக ஊடகங்கள் வழியாகவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் உதவி பெற்று இவர் செய்துவரும் பணிகள், கண்ணீரை மட்டுமே அறிந்திருந்த நூற்றுக்கும் அதிகமான எளிய குடும்பங்களில் மகிழ்ச்சியைப் பூக்கச் செய்திருக்கிறது.
இதற்கு முன் குறிஞ்சிப்பாடி வட்டார வள மையத்தில் பணியாற்றியபோது, சிறப்புக் குழந்தைகளின் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்படுவதைத் தடுக்கச் சொந்தச் செலவில் செராமிக் டைல்ஸ் தரை அமைத்துள்ளார். குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்கள், விளையாட்டுச் சாமான்கள் வாங்கியிருக்கிறார்.
அப்படியும் பல குழந்தைகள் வள மையத்துக்கு வராமல் போக, அவர்களது வீடுகளுக்குச் சென்று காரணம் அறிந்தபோது மனம் நொந்துபோனார். ‘ஆப்சென்ட்’ ஆன குழந்தைகளில் பலரும் பேச்சு வராதவர்கள் என்பதால், இரவில் பெற்றோரை அழைக்க முடியாமல், நகர முடியாமல் படுக்கையிலேயே சிறுநீர், மலம் கழித்து விடுவதை அறிந்துகொண்டார். அடுத்த நாள் அவர்களைச் சுத்தப்படுத்துவதே பெற்றோருக்குப் பெரும் போராட்டமாக இருப்பதைக் கண்டு, அதை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ‘டயபர்’ சிறந்த தீர்வு என்பதைக் கண்டுகொண்டார்.
பொதுவெளியில் உதவிபெற்று இப்படிப்பட்ட இயலா குழந்தை களுக்கும் மாணவர்களுக்கும் டயபர் வாங்கிக் கொடுக்கத் தொடங்கினார். இதன் தேவையைப் புரிந்துகொண்ட அரசு, தற்போது இந்தக் குழந்தை களுக்கு டயபர்களுக்காக மாதம் 200 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 600 வழங்கி வருகிறது.
அதேபோல், முதுகுத் தண்டு வளைந்த, நிலையாக நிற்க முடியாத குழந்தைகள் வீட்டுக்கு வெளியே சூரிய ஒளி உடலில் படும்படி அமர்ந்து, வெளிக்காற்றைச் சுவாசித்தபடி மரம், செடி, கொடிகளைச் சுற்றி இருப்பவற்றைக் காண ஏற்ற வகையில் ‘பீன் பேக்’குகளை உதவிகள் மூலம் பெற்று அவர்களுக்குப் பெரும் மனத் திறப்பை உருவாக்கியிருக்கிறார்.
இப்படித் தனது வள மையத்திலும் அங்கே வர முடியாத உடல்நிலையுடன் வீட்டிலிருந்தும் பயிலும் 75 சிறப்பு மாணவர்களின் அடிப்படையான தேவைகள் பலவற்றையும் நிறை வேற்றி வருகிறார். அதேபோல அவர்களுடைய பெற்றோரின் வசிப்பிட, வாழ்வாதார நிலையையும் முடிந்தவரை முன்னேற்றிவருகிறார்.
“சிறப்புக் குழந்தைகளுக்குச் சேவை செய்வதே அரசுப் பணியாக அமைந்தது ஒரு வரம்தான். இந்தக் குழந்தைகளில் பாதிப் பேர் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள். சில குழந்தைகள் இருவராலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். குறிப்பாக, வீடுகள் இல்லாமலும் குடிசை வீடு இருந்தும் கூரை இல்லாமலும் இருக்கும் பலரைப் பார்த்தேன்.
அவர்களில் சிலரது வீடுகளுக்குக் கூரை அமைத்து, சிறு வீடு கட்டிக்கொடுக்கக் கருணை உள்ளம் கொண்டவர்கள் முன்வந்தனர். கடவுளின் குழந்தைகளாக இருக்கும் இவர்களுக்கும் பெற்றோருக்கும் உதவ முன்வரும் யாருக்கும் கடவுள் இரட்டிப்பான மகிழ்ச்சியை வழங்குவார் என்று நம்புகிறேன்.
பெற்றோர் பிரச்சினை இன்றி இருந்தால்தான் இந்தக் குழந்தைகள் வாழ்வில் மாற்றம் வரும்” எனும் தேவி, இந்தக் குழந்தைகளின் தாய்மார்களுக்குத் தையல் பயிற்சியுடன், தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுப்பது, வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்குத் தள்ளுவண்டி எனத் தேவையறிந்து உதவிகளைப் பெற்றுக்கொடுத்து வருகிறார். இந்தக் குழந்தைகளுக்குக் குளிர்காலத்துக்கான ஸ்வெட்டர்கள், தீபாவளிப் பண்டிகை நாளுக்கான புத்தாடை, சத்துமாவு விநியோகம் ஆகியவற்றுக்கான உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் தேவி.
(பொறியாளர்களைக் கண்டறிவோம்)
- jesudoss.c@hindutamil.co.in