‘மனிதம் காக்கும்’ சந்துரு குமார்! | சமூகப் பொறியாளர்கள் 12

‘மனிதம் காக்கும்’ சந்துரு குமார்! | சமூகப் பொறியாளர்கள் 12
Updated on
3 min read

அது 2021. இருபத்தாறு வயது கவிதா, திருக் கோவிலூரைச் சேர்ந்தவர். தலைப் பிரசவத்துக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். சுகப் பிரசவத்துக்கு முயன்று முடியாமல் போகவே, தாயின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதைக் கண்டு மருத்துவர்கள் இரவு 2 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துவிட்டார்கள். ஆனால், ரத்த இழப்பு காரணமாகத் தாய் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றார். அவருக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டிய கட்டாயம்.

அரசு ரத்த வங்கியில் கவிதாவின் அரிய ரத்த வகையான ‘ஏ.பி.நெகட்டிவ்’ 1 யூனிட் மட்டுமே இருப்பில் இருந்தது. ஆனால், கவிதாவுக்கு மேலும் 2 யூனிட்டுகளாவது செலுத்தினால்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. அப்போது மருத்துவக் குழுவின் தலைவர், சந்துரு குமாரை அலைபேசியில் அழைத்து, “ஓர் இளம் தாயின் உயிரைக் காப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. 3 மணிக்குள் குருதிக் கொடையாளிகளை அழைத்து வாருங்கள். கொஞ்சம் நேரம் கடத்தி னாலும் ஆபத்தாகிவிடும். ரத்தம் எடுத்த பின் அதில் உரிய பரிசோதனைகளைச் செய்து முடித்து ஆபத்திலிருக்கும் தாய்க்குச் செலுத்த காலை 7 மணி ஆகிவிடும்” என்றார்.

பதறிய சந்துரு குமார், தனது ‘மனிதம் காப்போம்’ குழுவில் அந்த வகை ரத்தம் கொண்ட இரண்டு இளைஞர்கள் விழுப்புரம் நகரத்தில் வசிப்பதை அறிந்து அவர்களைத் தொடர்புகொள்ள, அடுத்த 45 நிமிடங்களில் மூவரும் மருத்துவமனைக்கு விரைந்து ரத்ததானம் செய்து விட்டுத் திரும்பினார்கள். காலை 7 மணிக்கு அவசரகால அடிப்படை யில் பெறப்பட்ட ரத்தம் கவிதாவுக்குச் செலுத்தப்பட்டது. காலை 10 மணிக்குஅவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டார் என மருத்துவர் குழுத் தலைவர் சந்துரு குமாரை அழைத்துக் கூறினார்.

அதன்பிறகு மருத்துவர் வழியாக, தனது மனைவிக்குக் குருதிக்கொடை அளித்தவர்கள் பற்றி அறிந்து சந்துரு குமாரை நேரில் சந்திக்கத் தொடர்புகொண்டார் கவிதாவின் கணவர். சந்துருவோ, “நீங்க இப்படிச் சொன்னதே போதும். நீங்க மது அருந்தாத மனிதரென்றால் ஆண்டுக்கு ஒருமுறை நாங்கள் நடத்துற ரத்ததான முகாமுக்கு வந்து குருதிக் கொடை பண்ணுங்கள், அது போதும்” என்று சொல்லிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

ஆனால், கவிதா தம்பதி வேறு மாதிரி சிந்தித்தார்கள். கடந்த ஆண்டு கவிதாவின் 2 வயது மகளுக்குக் காது குத்து வைபவம். விழா அழைப்பிதழில் ‘மனிதம் காப்போம் சந்துரு குமாரும் அவருடைய நண்பர்களும்’ என்று தாய்மாமன் பெயருக்கு நிகராக அச்சடித்து அனைவருக்கும் கொடுத் திருந்தனர்.

சந்துருவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க, தவிர்க்கவே முடியாமல் காதுகுத்து வைபவத்துக்குப் போனவர்களுக்கு நெகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் காத்தி ருந்தது! கவிதா தம்பதி ரத்ததான முகாமுடன் அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்க சந்துரு குமாரும் அவரது ‘மனிதம் காப்போம்’ கொடையாளிகள் இருவர் வந்திருப்பதாகவும் ஒலிப்பெருக்கியில் அறிவித்தது மட்டுமல்ல; ‘நடு இரவில்என் உயிரை ரத்ததானம் மூலம் காப்பாற்றியவர்கள்’ என்று கூறி அவர் களை மேடையேற்றிக் கௌரவித்தனர்.

இப்படிப் பல நெகிழ்ச்சியான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்ட சந்துரு குமார், விழுப்புரம் மாவட்டம், மேலக்கொந்தை ஊராட்சியைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி. கடந்த 2020இல் ‘மனிதம் காப்போம்’ என்கிற குருதிக் கொடையாளர்கள் குழுவை உருவாக்கிய இவர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி. கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டு களில் 4,000 பேருக்கு அவசரக் காலத்தில் குருதிக் கொடை அளித்ததன் மூலம் மாநில அளவில் பெயர் பெற்றிருக்கிறார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்களை அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து நடத்தியிருக்கிறார் சந்துரு குமார். இவரது சேவையைப் பாராட்டி மாவட்ட நிர்வாகம், சுதந்திர நாளன்று ஆட்சியர், மாவட்டத் தலைமைக் காவல் அதிகாரி தலைமையில் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது. பல விருதுகளைக் குவித்துள்ள சந்துரு குமார், ரத்ததானத்தின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கித் தனது ‘மனிதம் காப்போம்’ குழுவை நகர்த்தியிருக்கிறார்.

“2019இல் என் நண்பனுடைய அம்மாவுக்கு அரசு மருத்துவமனையில் கருப்பை நீக்க அறுவைசிகிச்சை நடந்தது. அப்போ நண்பன் பதறி, ‘ரத்ததானம் செய்ய ஆளைக் கூட்டிட்டு வான்னு சொல்றாங்க. நான் எங்கடா போவேன்’னு குழந்தை மாதிரி அழுதான். ‘நான் இருக்கும்போது எதற்கு அழறே’ன்னு சொல்லிவிட்டு, அன்றைக்கு முதல் முறையாக நானும் அவனும் குருதிக்கொடை செய்தோம். அவனுடைய அம்மா முழுமையாகக் குணமாகி வந்ததும் மனதில் அப்படியொரு நிறைவு. ரத்ததானம் கொடுத்தபோது அங்கிருந்த மருத்துவர், ரத்ததானம் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்தார். அதைப் படித்ததும் பெரிய அளவில் மனமாற்றம் ஏற்பட்டது.

2020இல் ‘மனிதம் காப்போம்’ அமைப்பைத் தொடங்கி நண்பர்களையும் மாணவர்களையும் அதில் சேர்க்கத் தொடங்கினேன். இப்போது 500 பேர் எங்கள் குழுவில் ‘ஆக்டிவ்’வாக இருக்கிறார்கள். ‘பாம்பே ரத்த வகை’ மிகவும் அரிய ஒன்று. ராஜஸ்தானைச் சேர்ந்த 10 நோயாளிகளுக்கு அந்த வகை ரத்தத்தைக் குருதிக்கொடை அளித்தோம். ரத்தச் சிவப்பணுக்களில் ‘H’ ஆன்டிஜென் உற்பத்தியாகாமல் பாதிக்கப்படும் பிரச்சினை கொண்ட வர்களுக்குத்தான் இந்த பாம்பே ரத்த வகைத் தேவைப்படுகிறது. அதைக் கொடுக்கும் தகுதியுடைய பலர் எங்கள் குழுவில் இருக்கிறார்கள்.

இப்போது குருதிக்கொடையில் அடுத்த கட்டமாக ‘ரத்தத் தட்டணுக்கள்’ தானம் செய்வதையும் தொடங்கியிருக்கிறோம். புற்றுநோய் நோயாளிகள், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்தத் தட்டணுக்கள் உயிர்காக்கும் மருந்தாக இருக்கின்றன” என்றார் சந்துரு குமார்.

ரத்ததானச் சேவையின் தொடர்ச்சி யாக, பெற்றோரை இழந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு எல்லாவிதத்திலும் உதவுவது, பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று முறையாக அனுமதி பெற்று, ரத்ததானம், போதைப்பொருள், போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கு எல்லா வகையிலும் உதவுவது எனத் தனது சேவைகளை விரித்திருக்கிறார் சந்துரு குமார்.

(பொறியாளர்களைக் கண்டறிவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in