ஸ்விஸ் எனும் சொர்க்கம் 7: ‘சாக்லெட்’ வந்த கதை

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 7: ‘சாக்லெட்’ வந்த கதை
Updated on
2 min read

பதினாறாம் நூற்றாண்டில் சாக்லெட் தயாரிப்பதற்கு அடிப்படைப் பொருளான கோகோ விதைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நாணயமாகவே பயன்படுத்தப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் பிற நாடுகளையும் புதிய பகுதிகளையும் கண்டுபிடிப்பதில் (ஆக்கிரமிப்பதிலும்) தனி கவனம் செலுத்திக் கொண்டிருந்தது ஸ்பெயின். அப்போது கோகோவின் தாயகமாக விளங்கி வந்தது மெக்சிகோ. கோர்டெஸ் எனும் ரசனைக்காரர்தான் 1528ஆம் ஆண்டில் கோகோவை ஸ்பெயினுக்குக் கொண்டுசென்றார்.

அவ்வளவுதான், ஸ்பெயினில் சாக்லெட் புகழ்வட்டத்துக்குள் வந்து உடனடியாக அமர்ந்தது. ஸ்பானிய அரசவையின் உடனடி அங்கீகாரத்தைப் பெற்றது சாக்லெட். இந்த இடத்தில் ஒன்றை நினைவுகொள்ள வேண்டும். அன்றைய சாக்லெட்டுக்கும் இன்றைய சாக்லெட்டுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அப்போதைய சாக்லெட் ‘திரவ’ வடிவில் உட்கொள்ளப்பட்டது. கொஞ்சம் மிளகுத்தூள்கூட அதில் சேர்க்கப்பட்டது. சர்க்கரை விலை உயர்ந்தப் பொருளாக இருந்ததால் அதற்குப் பதிலாகத் தேன் பயன்படுத்தப்பட்டது. கோகோ திரவம் மிகவும் கெட்டியானதாக இருந்ததால் அதில் தண்ணீர் அல்லது பால், ஒயின் ஆகியவை சேர்த்துக் கலக்கப்பட்டன.

பாரிஸ் நகருக்கு சாக்லெட் பயணம் செய்யக் காரணமாக அமைந்தது ஒரு திருமணம். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இளவரசி அன்னா, ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் வளர்ந்தவர். அவர் சாப்பிட்ட தினசரி உணவில் சாக்லெட் கட்டாயம் இருந்தது. 1615ஆம் ஆண்டு மன்னர் பதின்மூன்றாம் லூயியைத் திருமணம் செய்துகொண்டார். எனவே அவர் பாரிஸுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிச் சென்றபோது, தன்னுடன் சாக்லெட் பானத்தையும் எடுத்துச் சென்று பருகினார். மன்னருக்கும் அரசவை சீமான்களுக்கும் சாக்லெட் பிடித்துப்போக, சாக்லெட் குடிப்பது என்பது பிரான்ஸ் நாட்டின் ஓர் அந்தஸ்துச் சின்னமாக ஆனது. பின்னர் அங்கிருந்து சாக்லெட் ஐரோப்பா முழுவதும் பரவியது.

எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாக்லெட் பானம் வீழ்ச்சியைச் சந்தித்தது. மன்னர் ஆட்சிகள் அடுத்தடுத்துப் பல நாடுகளில் முடிவுக்கு வந்தன. இதனால் ‘மக்கள் பானம்’ என்று அறிமுகமான காபியும் தேநீரும் பிரபலமாகத் தொடங்கின. ஆனால் சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள் சுதாரித்துக் கொண்டன. இதனால் சாக்லெட் தன் அவதாரத்தை மாற்றிக்கொண்டது. அதாவது ‘திரவ’ சாக்லெட் ‘திட’ சாக்லெட்டாகத் தன்னை மாற்றிக்கொண்டது. பிறகு சாக்லெட்டின் விற்பனை ஏறுமுகம்தான்.

‘திட’ சாக்லெட்டின் தாயகம் என்று இத்தாலியைக் கூறலாம். உலகப் பொருள்காட்சிகள் இத்தாலியில் நடைபெற்றன. பிற நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் அங்கு சென்றனர், சாக்லெட் சுவையில் மயங்கினர். ஆக ‘திட’ சாக்லெட் பிற நாடுகளுக்கும் பரவியது. முக்கியமாக ’சுவிஸ் சாக்லெட்கள்’ புகழ் பெற்றன. உலகில் எவ்வளவோ நாடுகள் இருக்க சுவிட்சர்லாந்து எதற்காக சாக்லெட் தயாரிப்பில் முன்னணியில் இருக்க வேண்டும்? இத்தனைக்கும் சாக்லெட்டுக்குத் தேவையான இரண்டு முக்கியப் பொருள்களை (கோகோ, சர்க்கரை) அதிகப் பணம் கொடுத்து வெளிநாடுகளிலிருந்துதான் சுவிட்சர்லாந்து இறக்குமதி செய்தது, செய்கிறது.

என்றாலும், தரம் என்பதில் சுவிட்சர்லாந்து காட்டிய அக்கறை சாக்லெட் தயாரிப்பில் அந்நாட்டை முன்னணியில் வைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தப் பெருமையைத் தக்க வைத்தும் கொண்டுள்ளது. இயற்கை அழகினால் சூழப்பட்டுள்ள சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமானது. இவர்கள் ‘சுவிஸ் சாக்லெட்டின்’ அருமையைத் தங்கள் நாடுகளுக்கும் எடுத்துச் சென்றனர்.

(பயணம் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in