‘அன்பில் நாம்’ எனும் பாக்கியலட்சுமி | சமூகப் பொறியாளர்கள் 11

‘அன்பில் நாம்’ எனும் பாக்கியலட்சுமி | சமூகப் பொறியாளர்கள் 11
Updated on
3 min read

பாக்கியலட்சுமியின் அமைதியான வாழ்க்கை மீது இயற்கை இரண்டு முறை தனது தாக்குதலைத் தொடுத்தது. இழப்பின் வலிகளுக்கு நடுவில், அவர் முன்னெடுத்தது பசி போக்கும் பணி. ‘பசிக்கிறது’ என்றுகூடக் கேட்க முடியாமல் சாலையோரங்களிலும் பேருந்து நிழற்குடைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட மனிதர்களை ஒரு தாய்ப் பறவையைப்போல் தன் சிறகுகளுக்குள் வைத்துக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுகிறார் பாக்கியலட்சுமி.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள பேராவூரணியில் அரசு வழங்கியிருக்கும் கட்டிடம் ஒன்றில் இயங்குகிறது பாக்கியலட்சுமி நடத்திவரும் ‘அன்பில் நாம்’ இல்லம். இங்கே தற்போது 15 ஆதரவற்ற முதியவர்கள் இருக்கிறார்கள். பேச்சு கொடுத்தால் ஒவ்வொருவரிடமும் இருந்து வரும் ஒரு நிராதரவின் கதை நம் கண்களைக் குளமாக்குகிறது. ‘ஊருக்கே உண விடும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் இப்படிக் கைவிடப்படும் மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டபோது களத்தில் தான் கண்ட காட்சிகளை நம்மிடம் பகிர்ந்தார் பாக்கியலட்சுமி.

“தஞ்சை மாவட்டம் என்றில்லை; நான் புரிந்துகொண்ட வகையில், உறவுகளைப் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கலும் மனிதர்களின் சுயநலமும்தான் பலரைக் குடும்ப நீரோட்டத்திலிருந்து பிய்த்துப் போட்டுவிடுகிறது. மகன் திட்டிவிட்டார், மருமகள் அவமானப்படுத்திவிட்டார், மனைவி மதிக்காமல் போய்விட்டார், கணவர் என்னை வெறுத்துவிட்டார் என்பது உள்படப் பலவித மனக்குறை களோடு வீட்டை விட்டு வெளியேறி வந்தவர்கள் அதிகம்.

அவர்களுக்கான முதல் தேவை கலப்படமற்ற அன்பு. இப்படி வீட்டைவிட்டு வந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ‘கவுன்சலிங்’ கொடுத்து குடும்பத்தோடு சேர்த்து வைத்துவிடுவேன். இல்லத்தில் கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்ப மில்லை. ஆனால், போக்கிடமோ குடும்பமோ இல்லாதவர்களை என்ன செய்வீர்கள்? ஒரு அக்காவுக்கு 72 வயதாகிறது. காதலர் வேறு திருமணம் செய்துகொண்டு போய்விட்டதால் திருமணமே செய்துகொள்ளவில்லை.

தற்போது அவர் தனிமரம். அம்மாவின் இறப்புக்குப் பிறகு அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் கேரளத்தி லிருந்து பத்து வயதில் தமிழ்நாட்டுக்கு வந்து, 70 வயது வரையிலும் தனியாளாக உழைத்து வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞர். இப்போது அவரால் வேலை செய்ய முடியவில்லை. இப்படி ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான் ‘அன்பில் நாம்’ இல்லத்தின் நோக்கம்” எனும் பாக்கியலட்சுமியின் மற்றொரு முக்கியப் பணி, மனநலம் குன்றியவர்கள் மீதான அக்கறை.

மனநலம் குன்றிய நிலையில் பல மாதங்களாகச் சாலையில் திரிபவர் களையும் குடும்பத்தினரால் உரிய மனநல சிகிச்சை கொடுக்க முடியாமல் சுமையாக மாறிப் போனவர்களையும் காவல்துறை உதவியுடன் மீட்டு, தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவ மனையில் செயல்பட்டுவரும் ‘இசிஆர்சி’ மையத்தில் (Emergency care and recovery centre) சேர்த்து விடுகிறார்.

இப்படிச் சேர்த்துவிட்ட ஒவ்வொருவரின் சிகிச்சை முன்னேற்றத்தையும் அவ்வப்போது பார்த்து, குணமானவர்களைக் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் பணியையும் மேற்கொள்கிறார். பாக்கியலட்சுமியின் கணவர், தென்னை விவசாயி. ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு தான் குடும்பத்தின் வாழ்வாதாரம்.

எம்.எஸ்சி., பி.எட்., பட்டதாரியான பாக்கியலட்சுமி திருமணத்துக்குப் பிறகு, குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளியொன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். 2016 மழைக் காலம் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு விட்டது. தென்னந்தோப்பில் பம்ப் செட்டுக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் கணவர் இறந்துவிட, பத்து வயது மகளுடன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். தென்னந்தோப்பிலிருந்து கிடைத்து வந்த வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிவந்த பாக்கிய லட்சுமியின் வாழ்க்கையில் அடுத்த இடியாக இறங்கியது கஜா புயல். அதில் தென்னை மரங்கள் அத்தனையும் வேரோடு சாய நொடித்துப்போனார்.

அப்போது மாநில அரசு தென்னை மரங்களுக்கான இழப்பீடாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தது. அதில், பாக்கியலட்சுமி, தனக்கென்று ஒரு ரூபாய்கூட வைத்துக் கொள்ளா மல், அந்தப் பணத்தைக் கொண்டு பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்குக் கூடைப்பந்து மைதானம் அமைத்துக் கொடுத்துவிட்டார். அவர் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தனது ஊரின் மாணவியர் கூடைப்பந்து விளையாட்டில் காட்டிய ஆர்வமும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு மாணவியர் தேர்வு செய்யப்பட்டதும் அவரை இதைச் செய்யும்படி தூண்டியிருக்கின்றன.

இந்த நேரத்தில்தான் கரோனா பெருந்தொற்று வந்துசேர, ஊரடங்குக் காலத்தில் பேருந்து நிலையத்திலும் பொது இடங்களிலும் உணவின்றித் தவித்த 50 ஆதரவற்ற மனிதர்களுக்குத் தினமும் உணவு சமைத்துக் கொடுக்கத் தொடங்கினார். 50 என்கிற எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துவிட, சற்றும் சோர்ந்து விடாமல் கடன் வாங்கி ‘அன்னம் பகிர்ந்திடு’ பணியை, கரோனா ஊரடங்கு முடிந்த பின்ன ரும் தொடர்ந்திருக்கிறார். அம்மாவின் சேவையைப் பார்த்த அவரது மகள், தன்னிடம் சேமிப்பாக இருந்த 8,800 ரூபாயை அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பேரிடர் நிவாரணமாகக் கொடுத்தார்.

2020இல் இவர் உணவளித்து வந்த வர்களில், உடல்நலம் குன்றிய தனது மகனுடன் பேராவூரணி பேருந்து நிலையத்தில் வசித்து வந்திருக்கிறார் ஒருவர். அவரது மகன் திடீரென இறந்துவிட, காவல்துறையினர் உதவி யுடன் அவரை அடக்கம் செய்துவிட்டு, அந்தப் பெண்மணியைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்து தனது தாயுடன் மற்றொரு தாய்போல் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். இது பத்திரிகைகளில் செய்தியாக வர, அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், பாக்கியலட்சுமியை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

‘கைவிடப்பட்டவர்கள் வாழ நினைக் கிறார்கள். அவர்களுக்கு அரசின் ஆதரவுக் கரம் மட்டுமே போதாது. உங்களைப் போன்ற தன்னார்வலர்கள் இன்னும் அன்போடு அவர்களின் தேவை அறிந்து காப்பாற்ற முடியும். உங்கள் வட்டாரத்தில் ஆதரவற்றோர் இல்லம் என்று எதுவும் இல்லை. நீங்கள் தேடிப்போய் உணவு கொடுக்கிறீர்கள். கைவிடப்பட்டவர்களை ஓரிடத்தில் திரட்டி அவர்களைத் தங்க வைத்து உதவும் எண்ணம் இருந்தால் கூறுங் கள். அரசுத் தரப்பிலிருந்து நாங்களும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

எனக்கும் அது சரி என்று பட்டது. கோவிந்த ராவ் ஐ.ஏ.எஸ், தஞ்சை மாவட்ட விவசாயிகள், சாமானிய மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர். அவர் சொன்னது போலவே பேராவூரணியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு ‘ஷெட்’டை ‘அன்பில் நாம் இல்லம்’ இயங்க அனுமதி கொடுத்தார். அவர் மாற்றலாகிச் சென்றபோது, அடுத்து வந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த இல்லம் செயல்படும் விதத்தைப் பார்த்துவிட்டுச் செய்து கொடுத்த உதவிகளை மறக்க முடியாது.

அவரும் மாற்றலில் சென்றுவிட்டார். தற்போது அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் இல்லை. பிறந்தநாள், திருமணம் போன்ற தருணங்களில் சிலர் செய்யும் உதவிகள் மூலம் சமாளித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் இப்படிச் சமாளிக்க முடியும் என்று தெரிய வில்லை” எனும் பாக்கியலட்சுமியின் குரல், தற்போது தஞ்சாவூரின் மாவட்ட ஆட்சியராகப் பொறுப் பேற்று மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து வருவதாகப் பாராட்டப்படும் டெல்டாவின் மற்றொரு மகளான பா.பிரியங்கா ஐ.ஏ.எஸ்ஸின் கவனத்துக்குச் சென்றடையட்டும்.

(பொறியாளர்களைக் கண்டறிவோம்)

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in