சமூகப் பொறியாளர்கள் - 9: மாற்றிக் காட்டிய ஹசினா!

பனை விதைக்கும் ஹசினா திருநர் குழு
பனை விதைக்கும் ஹசினா திருநர் குழு
Updated on
3 min read

நாட்டின் மாநகரங்களில் மாற்றுப் பாலினத்தவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சமூக நீரோட்டத்தில் அவர்களை இணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு கடந்த இரு பத்தாண்டுகளில் சீராக வளர்ந்து வந்திருக்கிறது.

இந்த ஏற்பின் பின்னணியில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரச்சாரப் பங்களிப்பு, அரசுகள் செயல் படுத்தி வரும் நலத்திட்டங்கள் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, மாற்றுப் பாலினத்தவரின் கல்வி, வேலை வாய்ப்பில் ஆரோக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், சில கிராமப் புறங்களில் அவர்களை நிராகரித்தல், கைவிடுதல், இழிவுபடுத்துதல் ஆகியவை இன்னும் தொடரவே செய்கின்றன. இந்த நிலையை புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது தளராத சேவையின் (புதுக் கோட்டை திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையம்) மூலம் ஒருவர் மாற்றிக் காட்டியிருக்கிறார். அவர் 47 வயது திருநங்கையான ஹசினா மாணிக்கம்.

புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலை யில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக் கிறது கல்குமியல்பட்டி. பேருந்தை விட்டு இறங்கி 500 மீட்டர் நடந்தால் வந்துவிடுகிறது ஹசினாவின் வீடு. கால்நடை வளர்ப்பின் மூலம் வாழ்ந்துவருகிறார்.

“நான் மட்டும் 10ஆம் வகுப்பு வரை படித்திருந்தால், இந்நேரம் ஒரு நல்ல வேலைக்குச் சென்றிருப்பேன். ஆனால், ஆறாம் வகுப்போடு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனக்குள் பொங்கிய பெண்மை உணர்வை வீட்டார் புரிந்துகொண்டு அன்பும் ஆதரவும் கொடுத் தனர். மாறாகச் சமூகப் புறக்கணிப்புதான் பெரும் மனக்காயத்தை உருவாக்கியது. அதனால், 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

“முதலில் சென்னை, பிறகு மும்பை என அகதியைப் போல் அலைந்தோடியது வாழ்க்கை. திருநர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கும் மும்பையை விட்டு வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். 2008இல் கூவாகம் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு ரயிலில் மும்பைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது எங்கள் பெட்டியில் பயணித்துக்கொண்டிருந்த திருநங்கை மோகனா வழியாக ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிந்து கொண்டேன். ‘முதல்வர் மு.கருணாநிதி திருநர்களுக்கென்றே நலவாரியம் உருவாக்கியிருக்கிறார்; அதன்மூலம் அனைத்து உரிமைகளையும் திருநர்கள் பெற்றுக் கௌரவமாக வாழ முடியும்’ என்பதுதான் அவர் சொன்ன செய்தி. திருநர்கள் முன்னேற்றத்திலும் தமிழ்நாடுதான் முன்னோடி என்பது தெரிந்ததும் இனி நல்லதே நடக்கும் என்று இங்கேயே தங்கிவிட்டேன்.

ஹசினா
ஹசினா

“பிறகு நலவாரியம் மூலம் கிடைக்கும் உரிமைகளில் முதலில் திருநர்களுக்கான அரசு அடையாள அட்டையைப் பெற்றுவிடுவது என்று புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 20 திருநங்கைகளைத் திரட்டிக்கொண்டுபோய் மோகனா அம்மாவைச் சந்தித்தேன். அவரது வழிகாட்டுதலோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொண்டோம்.

அதை வைத்து விண்ணப்பித்ததும் ரேஷன் அட்டை கிடைத்தது. ரேஷன் அட்டை கிடைத்ததும் வாக்காளர் அடையாள அட்டை பெற்று, வாக்குச் செலுத்தியபோது தன்னம் பிக்கையும் தன்மானமும் அதிகரித்தது. “என்னைத் தேடிவந்து கேட்ட திருநர்கள் அனைவருக்கும் இவை அனைத்தையும் அலைந்து திரிந்து வாங்கிக்கொடுப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக நலவாரியம் வழியாக இதுவரை 51 மாற்றுப் பாலினத்தவருக்குப் பட்டாவுடன் கூடிய இலவச வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றோம்.

உதவிக்காக என்னைத் தேடிவரும் திருநர்கள் தங்கவும், குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, திருநர் குழுக்களைத் தேடி வரும் இளம் திருநங்கை களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் ஒரு வீடு அவசியம் என்பதை உணர்ந்தேன். உடனே அரசு கொடுத்த நிலத்தில், என்னுடைய சேமிப்பைக் கொண்டு இந்தச் சிறிய வீட்டைக் கட்டினேன். இன்றைக்கு என் வீடு ஒரு வேடந்தாங்கலாக மாறி இருப்பதில் மகிழ்ச்சி.

நான் பெற முடியாமல் போன கல்வியை இவர்கள் பெற வேண்டும். கல்வியின் வழியாக வேலைவாய்ப்பு பெறுவது எளிதாகிவிடும் என்று நினைத் தேன். சமூகநலத் துறை தரும் பல்வேறு இலவசத் தொழில் பயிற்சிகளுக்குத் திருநங்கைகளை அனுப்பி வைத்து, அதை அவர்கள் வெற்றிகரமாக முடித்து, இன்று பலர் கெளரவமான வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

இந்தப் பணிகளைத் தொய்வில்லாமல் செய்வதற்காகப் புதுக் கோட்டை மாவட்டத் திருநர் நலவாழ்வு சங்கத்தைத் தொடங்கினேன். இன்று எனது பணியின் தேவையைப் புரிந்துகொண்டு பல திருநங்கைகள் இதை முன்னெடுத்துச் செல்வது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. என்றாலும் எங்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற இன்னும் பல காலம் பிடிக்கலாம்” என்கிறார்.

ஹசினா கரம் கொடுத்துத் தூக்கி விட்டவர்களில் பலர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், அரசு கால்நடைத் துறை வழங்கிய செயற்கைக் கருவூட்டல் பயிற்சி பெற்று, அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இச்சேவையை வழங்கி வருகிறார்கள்.

அவர்களில் திவ்யா, ஷிவானி இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பிரபலமான கருவூட்டல் நிபுணர்களாகப் புகழ்பெற்றிருக்கிறார்கள். சம்யுக்தா காவலர் பயிற்சி முடித்து காவலராகப் பணிபுரிந்து வருகிறார். 18 திருநங்கைகளுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொடுத்து, பலர் வாடகை வாகனம் ஓட்டி வருகின்றனர்.

இந்த மாற்றங்களைவிட ஹசினா தனது தொடர் முயற்சியால் கொண்டுவந்துள்ள மாற்றம்தான் அவரைத் திருநர்கள் மத்தியில் கொண்டாட வைத்திருக்கிறது. ‘கடைகேட்பு’, பாலியல் தொழில் ஆகிய இரண்டிலும் இந்த மாவட்டத்தில் வாழும் திருநங்கைகள் ஈடுபடாதவண்ணம் அவர்களைக் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழிலின் பக்கம் திருப்பியிருக்கிறார்.

தான் வாழும் கிராம மக்கள் தரும் ஆதரவில் நெகிழ்ந்துபோய், தன்னால் முடிந்ததைக் கிராமத்துக்குச் செய்ய வேண்டும் என்று கல்குமியல்பட்டியில் உள்ள குளங்கள், ஏரிக்கரைகளில் பனை விதைகளையும் நாட்டு வகை மரக் கன்றுகளையும் தனது குழுவினருடன் நட்டு, அவற்றுக்குக் கோடையில் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வருகிறார்.

இவர்களது செயலைப் பார்த்து அக்கம்பக்கத்துக் கிராமத்தினர் அழைக்க, இவர்களது பனை விதைக்கும் பசுமைப் பணி தொடர்கிறது. ஹசினா மாணிக்கம் விதைத்த மாற்றம், தன்னம்பிக்கையும் சுயசார்பும் மிக்க திருநர்களையும் மழை தரும் மரங்களையும் உருவாக்கி இருக்கிறது.

(பொறியாளர்களைக் கண்டறிவோம்)

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in