

சமச்சீர்க் கல்வி, ஸ்மார்ட் வகுப் பறை, இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம் என அரசுப் பள்ளிகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இருப்பினும் போட்டி உல கத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப் பலவிதங்களில் தயார்படுத்த வேண்டியிருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த தனியார், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்றுக்கொள்வதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தற்போது பல அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளும் கணினி ஆய்வகங்களும் கிடைத்துவருகின்றன.
ஆனால், தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation Inc) 13 ஆண்டுளுக்கு முன்பிருந்தே அரசுப் பள்ளிகளுக்குச் செய்துவரும் கல்விப் பணி, சமூகப் புரட்சி எனலாம். அரசுப் பள்ளி வட்டாரங்களில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் ‘டி.என்.எஃப்’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை அப்படி என்ன செய்கிறது?
அரசுப் பள்ளியில் பயிலும் பிள்ளைகளில் எவ்வளவு பேருக்குக் கற்றல் திறனில் குறைபாடு உள்ளது, ஊக்கமுடன் பயில ஏற்ற வகையில் அமையாத சூழ்நிலைகள் என்னென்ன, ‘இடை நிற்கும்’ மாணவர்களின் குடும்பப் பொருளாதார நிலை என்ன, அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா, பயிலும் பள்ளியின் வகுப்பறை, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளில் தேவை இருக்கிறதா என்பது உள்ளிட்ட இருபதுக்கும் அதிகமான காரணங்களை நேரடிக் கள ஆய்வு மூலம் அறிந்து, அவற்றைச் சீர்படுத்த செயல் படுத்தப்பட்டுவரும் தொகுப்புத் திட்டம்தான் தமிழ்நாடு அறக்கட்டளை. ‘ஏ.பி.சி புராஜெக்ட்ஸ்’ (Academic bridge course Projects) என்கிற பெயரில் தேவையுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கி விடுகிறது.
அதில் முதலாவது, ‘கற்றலில் உதவிநாடும் மாணவர் திட்டம்’. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை, கற்றுக்கொள்வதில் பின்தங்கிய மாணவ, மாணவியரைக் கண்டறிந்து, அவர்களுக்குக் கூடுதல் பயிற்சியளித்து, முன்னேற்றிக் கொண்டு வரும் திட்டம் இது. இத்திட்டத்தால் 2023 – 2024ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 29 மாவட்டங்களில் 105 பள்ளிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து, 10, 11, 12 ஆகிய பள்ளியிறுதி வகுப்புகளில் பொதுத்தேர்வை எதிர்கொள் ளும் மாணவர்களுக்கு அவர்களது பாட வாரியான பலம், பலவீனத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. அதில் பாடப் பகுதிகளுடன் கணினி அறிவு, பொது அறிவு, வளரும் துறைகள் பற்றிய அறிமுகம், தன்னம்பிக்கை, ஆளுமைப் பண்பு உள்ளிட்ட மென்திறன் பயிற்சி வகுப்புகள், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், அண்ணா பல்கலைக்கழகம், என்.ஐ.டி, ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்விச் சுற்றுலா ஆகியவற்றையும் இணைத்திருக்கிறது.
பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தச் ‘சிறப்புப் பயிற்சி வகுப்பு’களை நடத்திவருகிறது. இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் நடப்புக் கல்வியாண்டில் மட்டும் 17,758 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். பள்ளி நேரம் முடிந்த பிறகு ஒன்றரை மணிநேரம் நடைபெறும் இந்த மாலைநேரச் சிறப்பு வகுப்புகளில் மாணவர்களுக்குப் புரதச்சத்து அடங்கிய சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்த நிலைகளில், ஊட்டச்சத்துக் குறைபாடு கண்டறியப்பட்ட மாணவர் களுக்குச் சத்துமாவு வழங்குதல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதரவற்ற மாணவர்களுக்குச் சீருடை வழங்குதல், மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல், உள்ளூர் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து டிஜிட்டல் வகுப்பறைகள் அமைத்துத் தருதல், கம்ப்யூட்டர் லேப்களை அமைத்துக் கொடுத்தல் எனக் கல்விச் சேவை பல திசைகளில் விரிந்து செல்கிறது.
தமிழ்நாடு அறக்கட்டளைக்கான விதை 50 ஆண்டுகளுக்கு முன் 1974இல் நான்கு அமெரிக்கவாழ் தமிழ்க் குடும்பங்களால் ஊன்றப்பட்டது. பல்லாயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும், தங்களின் வேர்கள் தொடங்கும் தாய் நிலமான தமிழ் நாட்டின் மீது கொண்ட அன்பாலும் அக்கறையாலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கவாழ் தமிழ்க் குடும்பங்களின் நன்கொடையால் இன்று மாபெரும் ஆலவிருட்சமாக வளர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களை வாஞ்சை யுடன் அரவணைக்கிறது டி.என்.எஃப்.
தேவையுள்ள மாணவர்களின் கல்வித் திறன், மென்திறன் பயிற்சித் திட்டங்களைத் தங்கு தடையில்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் விதமாக ‘மண் வாசனை’ என்கிற வைப்பு நிதித்திட்டத்தைத் தமிழ்நாடு அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. சோமலெ எனும் பயண இலக்கியத் தமிழறிஞரின் மகனான சோமலெ.
சோமசுந்தரம் என்கிற அமெரிக்க வாழ் தமிழரின் சீரிய சிந்தனையில் இந்தத் திட்டம் உருவானது. பிறகு, இன்னோர் அமெரிக்கவாழ் தமிழரான முருகானந்தம் பழனிச்சாமி, 2020இல் ரூபாய் மூன்று கோடியாக இருந்த இதன் வைப்பு நிதியை, நன்கொடைகள் மூலம் 15 லட்சம் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உழைத்தார்.
அவரோடு அங்கிருந்தே இதில் இணைந்து கரம்கோத்துப் பணியாற்றியவர் வீரா. நிர்ணயிக்கப்பட்டபடி பெறப்பட்ட இத்தொகை தற்போது ஒரு மாவட்டத்துக்குத் தலா 175 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக 38 மாவட்டங்களுக்கும் தனித்தனியாகப் பிரித்து வைக்கப் பட்டுள்ளது.
அத்தொகைக்கு வங்கி தரும் வட்டியிலிருந்தும் பிற நன்கொடைகள், இணைந்து கொள்ளும் உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடனும் இந்தக் கல்விச் சேவையை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் அறங்காவலர் குழுத் தலைவராகத் தற்போது பொறுப்பு வகித்துவருபவர், பணி நிறைவு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான எஸ்.ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ். எந்தத் திட்டமும் திறம்படத் தொய்வின்றிச் செயல்பட்டால்தான் பயனாளிகளுக்கு உரிய வகையில் அதன் பயன் சேரும். அத்தகு பணியில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தலைமைச் செயல் அதிகாரி முனைவர் க.இளங்கோ, முகம் காட்டாமல் நன்கொடை அளித்துவரும் அமெரிக்கவாழ் தமிழர்கள் எனப் பலரும் இப்பணியில் சமூகப்பொறியாளர்களாக மாறி நிற்பதில் அரசுப் பள்ளி மாணவர் மேன்மை பெற்று உயரட்டும்!
(பொறியாளர்களைக் கண்டறிவோம்)
- jesudoss.c@hindutamil.co.in