சமூகப் பொறியாளர்கள் - 6: சென்னையின் ‘அன்னபூரணி’

சமூகப் பொறியாளர்கள் - 6: சென்னையின் ‘அன்னபூரணி’
Updated on
3 min read

பெருநகரச் சென்னையில் ஜமீன் பல்லாவரத்தை ஒட்டியிருக்கிறது கீழ்க் கட்டளை. அங்கேதான் இருக்கிறது ‘தவமொழி ஃபவுண்டேஷன் அன்னதானக் கூடம்’. பகல் 12.15 மணிக்கெல்லாம் சேவை தொடங்கிவிடுகிறது. உமாராணியும் அவருடைய தன்னார்வலர்கள் நான்கு பேரும் வட்டமாக நறுக்கப்பட்ட வாழை இலையுடன் கூடிய தட்டுகளில் உணவைக் கொடுக்கிறார்கள். வரிசையில் வரும் அப்பகுதியின் எளிய மக்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், முதியோர் எனப் பல தரப்பினரும் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கி உண்டபின், நிம்மதியாகச் செல்கிறார்கள். பிற்பகல் 3 மணி வரை சுமார் 380 பேர் சாப்பிட்டிருந்தார்கள்.

பல்லாவரத்தைச் சேர்ந்த அன்பரசன், “நாங்க 6 பேர் இங்கே வருவோம். 15 வருஷமா பெயிண்ட் வேலை செய்றோம். பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரியாலயே வாரத்துல 4 நாளாவது வேலை கிடைச்சுடும். 600 ரூபா நாள் சம்பளம். இதுல 50 ரூபா வேலை கொடுக்கிற மேஸ்திரிக்குக் கொடுத்துடணும். காலையில் 9 மணிக்கு பிரெஷ் பிடிப்போம். பட்டி பார்க்கிற வேலை இன்னும் கஷ்டம். வேலை செய்ய ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே பசிக்கும். ஒரு டீ 12 ரூபா, ஒரு வடை 8 ரூபா. 20 ரூபா காலி. மதியம் சாப்பிட்டாத்தான் 6 மணி வரைக்கும் வேலை ஓடும். மதியச் சாப்பாடு ரோட்டுக் கடையில 60 ரூபா. ஒட்டல்லனா அளவு சாப்பாடு 80 ரூபா. வயித்தக் கட்டினா வேலை செய்ய முடியாது. இப்போ உமாராணி அக்கா போடுற சாப்பாடு எங்கள மாதிரி உழைக்கிற ஆளுங்களுக்குப் பெரிய உதவிங்க. குடிகாரன் எவனும் இங்க வார மாட்டான். ஏன்னா, ‘குடிச்சு அழியிற எவனும் இங்கே வராதீங்க. உழைச்ச காசை வீட்டுக்குக் கொடுக்கிறவங்க எப்ப வேணா வந்து வயிறாரச் சாப்பிட்டுப் போங்க’ன்னு ராணி அக்கா சொல்வாங்க. ஒரு தடவை நான் சாப்பிட்டுவிட்டு அவங் களைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ‘இந்த மாதிரிக் கும்பிடறதா இருந்தா இங்க வராதீங்க. உங்க தங்கச்சி, அக்கா, அம்மா வீட்ல கை நனைக்கிறதா நினைச்சி இங்க வாங்க. நீங்கள்லாம் எனக்குச் சொந்தம். என் வீட்டுக்குச் சாப்பிட வர்ற கடவுள்’ன்னு சொன்னதும் அழுதுட்டேன். அக்கா கையால நல்ல சோறு துன்றதுக்காக இங்கே வாரோம்” என்று சொல்லும்போதே அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

65 வயது ஜெயாம்மா, “நான் இங்க 3 வருஷமா சாப்பிடுறேன்பா. என்னை மாதிரி வயசான லேடீஸ் 50 பேருக்கு மேல வர்றோம். 12 மணிக்கெல்லாம் பசி மயக்கம் வந்துடும். மருமககிட்ட அதிகாரம் பண்ணிச் சாப்பாடு கேட்க முடியாது. மகன்கிட்ட குறைபட்டு, குடும்பத்துல என்னால பிரச்சினை வேண் டாம்ன்னு இங்கே வந்துடுறேன். இங்க சாம்பர் சாதம், தயிர் சாதம்ன்னு பட்டச் சோறு போடுறாங்கன்னு நினைச்சுடாதீங்க. சன்னமான பொன்னி அரிசியில வடிச்ச மல்லிகைப்பூ சாதம், பலவித காய்கறி போட்டு துவரம்பருப்பு சாம்பார், இன்னிக் குக் கோவைக்காய் கூட்டு, ரசம், மோர்ன்னு ராணி போடுற மதியச் சோறு விருந்துப்பா” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

இங்கே உண்டு செல்பவர்களின் முகங்களைக் கவனித்தால் வாழ்க்கை தரும் அன்றாட அழுத்தங்களை மீறிய நிறைவையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. 3 மணிக்குக் கூட்டம் குறைந்த தும் ராணியிடம் உரையாடினோம். ஒரு யோகியைப் போல் கால்களை மடித்துத் தரையில் அமர்ந்து தனது வாழ்க்கையை நம்முடன் பகிர்ந்தார்:

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவண்ணாமலையின் ஆரணியில். நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள். நான் 10ஆம் வகுப்புல 90% மார்க் வாங்கினேன். அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். ‘நீ டாக்டருக்குப் படி கண்ணு’ன்னு சொன்னாங்க. கேன்சர் அவங்களைச் சட்டுன்னு எடுத்துக்கிச்சு. நாங்க உடைஞ்சு போய்ட்டோம். அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்களுக்குச் சித்தி இருந்தும் படிக்க வசதியில்லைன்னு சொல்லிட்டாங்க. மன அழுத்தத்துக்கு நடுவுலயும் 2 முடிச்சேன். அதுலயும் 90%. அப்போ, நாங்க குடியிருந்த வீட்டோட ஓனர் தாத்தா தன்னோட பென்சன் சேமிப்பிலிருந்து 40 ஆயிரத்தைக் கொடுத்து, ‘நீ நல்லா படிக்கிற பொண்ணு; படிப்பை நிறுத்தாதே’ன்னு சொல்லி நான் பி.எஸ்.சி. நர்சிங் சேர உதவினார். எங்க அம்மாவோட தோழி தன்னோட நகைகளை அடமானம் வைத்து எனக்கு பீஸ் கட்டினாங்க. இவங்க எல்லாருமே எனக்குக் கடவுள்.

இப்படிப் பல நல்ல உள்ளங்கள் உதவியால படிச்சு மேல வந்தேன். எனக்கு அவங்க உதவின மாதிரி நானும் என்னோட சம்பளத்திலிருந்து தேவை இருக்கிற படிக்கிற பிள்ளை களுக்கு உதவ ஆரம்பிச்சேன். அப்படித் தொடங்கினதுதான் இன்னைக்கு அன்னதானமா மாறி நிக்குது. இப்போ ‘பெட் ரிட்டர்’னாக இருக்கிற பல சீனியர் சிட்டிசன்களைப் பார்த்துக்கறேன். அதுல கிடைக்கிற ஊதியத்தை வைச்சு கரோனா ஊரடங்கு காலத்துல அன்னதானத்தைத் தொடங்கினேன். பெருந்தொற்று காலத்துல நான் குடியிருந்த இந்தப் பகுதியில பல சாமானியக் குடும்பங்கள் பிழைப்பு இல்லாம, பட்டினி கிடந்த தைப் பார்த்தேன். கரோனா முடிஞ்ச பிறகும் குடும்பத்துக்காக வாயையும் வயித்தையும் கட்டி, அரை வயித்துக்குச் சாப்பிட்டு வாழ்றவங்களைப் பார்த்தப்போ தான் அன்னதானம் நம்ம பண்பாட்டுல ஏன் காலம் காலமா இன்னும் தொடருதுங் கிற அர்த்தம் புரிஞ்சுது. அதனாலதான் அன்னதானத்துக்கு மிஞ்சினது எதுவு மில்லன்னு அதைக் கையில் எடுத்தேன். நான் இருக்கிற வரை இது தொடரும். எனக்கப்புறம் என் பிள்ளைகள் இதைத் தொடரலாம்” என்ற வரிடம், ‘உங்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவைப் படுகிறது’ என்றபோது மிகவும் மனம் நொந்து சொன்னார்:

“வாடகை வீட்டிலிருந்துகிட்டு சிங்கிள் லேடியா எப்படி இதைச் செய்ய முடியுதுன்னு நினைக்கிறவங்க தர்ற நெருக்கடி மனசைப் பாரமாக்குது. கடந்த 4 வருஷத்துல 2 இடம் மாற்றிவிட்டேன். இந்த இடத்தின் உரிமையாளர், டிசம்பர் வரைக்கும் டைம் கொடுத்திருக்கார்” எனும் உமாராணியைப் பிரபல என்.ஜி.ஓ நிறுவனங்கள் சில தங்களது குடையின் கீழ் கொண்டுவந்து சேவையை ‘பிராண்ட்’ செய்ய முயற்சித்து நடக்காமல் நடையைக் கட்டிவிட்டதை அறிந்துகொள்ள முடிந்தது.

காலையில் கேழ்வரகு கூழ், மதியச் சாப்பாடு, இரவுச் சாப்பாடு என்று மூன்று வேளையும் சுமார் 750 பேருக்குப் பசியாற்றி வரும் உமாராணியை, ‘சென்னையின் அன்னபூரணி’ என்றால் அது மிகையல்ல. அவரது அன்னதானக் கூடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் ‘பசியென்றால் கதவைத் தட்டவும்.’

படங்கள்: ஜெ

- (பொறியாளர்களைக் கண்டறிவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in