

தெருமுனையிலிருந்து 100 மீ. தொலைவில் இருக்கிறது அந்த நாய்கள் காப்பகம். அப்படியிருந்தும் விஜய் ஓட்டிவரும் ஸ்கூட்டரின் ஒலியைத் துல்லியமாக அடையாளம் கண்டு நாய்கள் குரைத்தன. அவற்றின் குரைப்பில் இருக்கும் உற்சாகத்தைப் புரிந்துகொண்டு குட்டி நாய்கள் ‘ஊ... ஊ...’ என்று குழைந்தன. உணவுடன் வரும் விஜய்யை நாய்கள் சூழ்ந்துகொண்டன. வரிசையாக இருக் கும் தட்டுகளில் உணவை அள்ளி அள்ளிப் போட, வயிறார உண்டு மகிழ்ந்தன. 9 மாதக் குட்டிகளுக்குத் தனி ‘ஷெட்’.
வளர்த்தவர்களால் கைவிடப் பட்ட நிலையில் உணவும் நீரும் கிடைக்காமல், மெலிந்தும் தோல் நோய்த் தொற்றுக்கு ஆளாகியும் வாகனங்களில் அடிபட்ட காயங்க ளோடும் ஆதரவின்றித் திரிந்து கொண்டிருந்த 140 நாய்களையும் 40 குட்டிகளையும் மீட்டு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்! திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கிறது இவர் அமைத்துப் பராமரித்து வரும் ‘அறண் காப்பகம்.’
நாய்களுக்கு மட்டுமல்ல; பூனைகளுக்கும் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் விஜய். இவை தவிர அரிய விலங்குகள், பறவைகள் அடிபட்ட நிலையில் தட்டுப்பட்டால் திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் அழைப்பது விஜய்யைத்தான். குறிப்பாகப் பாம்புகளைப் பார்த்துவிட்டால், ‘ஸ்நேக் விஜய்க்குப் போனைப் போடு’ என்கிறார்கள். நாய்களுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்த போதே அவரது திறன்பேசி ஒலித்தபடியிருந்தது. ‘திருப்பூரில் ஒரு குடோனுக்குள் நல்ல பாம்பு புகுந்திருக்கிறது.
அதைப் பிடித்து அங்கிருந்து அகற்ற வேண்டும்; உடனே வாருங்கள்’ என்று எதிர்முனையில் இருப்பவர் பேச, அதற்கு விஜய், “பாம்பு அடைஞ்சு இருக்கிற ஏரியாவைக் கூர்ந்து கவனிச்சுக்கிட்டே இருங்க. அதைக் கொல்லணுங்கிற நோக்கத்தோட அது பக்கத்துல போயிடாதீங்க. எங்க டீம்லேருந்து ஒருத்தர் இன்னும் அரை மணி நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துடுவார்.
அப்படியே ஃபயர் சர்வீஸுக்கும் சொல்லிடுங்க” என்றார். அவர் சொன்னபடியே அடுத்த அரை மணிநேரத்தில், தீயணைப்புத் துறையின் அனுமதியுடன் அந்தப் பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘ஸ்நேக்’ விஜய் என்பது, கடந்த 15 ஆண்டுகளில் தன்னிடம் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுடன் இணைந்து இதுவரை 8,500க்கும் அதிகமான பாம்புகளைக் காப்பாற்றியதால் வந்த அடையாளம்.
விலங்குகளின் மீது விஜய்க்கு எவ்வாறு பரிவு ஏற்பட்டது? “பள்ளியிறுதியில், ‘ரோமுலஸ் விட்டேகர்' எழுதிய ‘இந்தியப் பாம்புகள்' புத்தகத்தைப் படித்தேன். அது கொடுத்த தாக்கம் காரணமாகப் பாம்பு பிடிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள இருளர் மக்கள் சிலரிடம் களப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் சில அனுபவங்கள் கசப்பானவையாக அமைந்தன. குடும்பத்தினரும் எதிர்த்தனர்.
ஆனால், பாம்புகள் உயிருடன் காப்பாற்றப்படுவதை எடுத்துச்சொன்ன பிறகு ஏற்றுக்கொண்டனர். தற்போது திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து எங்கள் உதவி கோரி அழைப்புகள் வருகின்றன. பல மாவட்டங் களில் நான் பயிற்சி கொடுத்த இளைஞர்கள் பாம்பு, உடும்பு, குரங்கு, மயில், நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை மீட்கும் வேலையைச் செய்துவருகிறார்கள்.
நான் வெளியூர் போய்விட்டாலும் மீட்புப் பணிகளுக்கு 80 இளைஞர்களைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். கல்லூரி மாணவர்கள், கொத்தனார், விவசாயத் தொழிலாளர்கள் எனப் பல தரப்பினருக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறேன். 70 நாள் பயிற்சியை எனது பல வருட அனுபவத்தின் மூலம் வடிவமைத்தேன்.
பெரும்பாலும் மனித வாழ்விடங்களுக்குள் காணப்படும் பாம்புகள், அவற்றின் விஷத் தன்மை, நகரும் விதம், நகரும் வேகம், தாக்கும் விதம், பாம்புகளைக் கோபப்படுத்தாமல் எப்படிப் பிடிப்பது, இப்பணியில் தீயணைப்புத்துறை, வனத்துறையின் வழிகாட்டுதல்களை எப்படிப் பின்பற்றுவது, பாம்புகளை அகற்றும்போது அத்துறையினரின் கள உதவியை எப்படிப் பெறுவது என்று பயிற்சி கொடுத்திருக்கிறேன். இரவு நேர மீட்புப் பணி என்றால் தன்னார்வலர்களை அனுப்பாமல் நானே நேரடியாகச் சென்றுவிடுவேன்.
பெரும்பாலும் பயத்தில் பாம்புகளை அடித்துவிடுகிறார்கள். காயத்துடன் மீட்கப்பட்ட பாம்புகளுக்குப் பெரும்பாலான நேரம் கால்நடைத் துறை மருத்துவ நிபுணர்களின் அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. இப்படிச் சிகிச்சையளித்துக் காப்பாற்றப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை மட்டுமே 300 இருக்கும். இதில் அரசு கால்நடை அறுவைசிகிச்சை நிபுணரான அசோகன், இரவு 12 மணிக்குக்கூட அடிபட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை செய்து காப்பாற்றி விடுவார்.
ஒற்றையாக ஊருக்குள் நுழைந்து மக்களால் படுகாயம் அடைந்த கழுதைப்புலியை இரவு பகலாக விழித்திருந்து சிகிச்சையளித்துக் காப்பாற்றியிருக்கிறார்” எனும் விஜய், பாம்புகளை மீட்கும் பணிக்காக மக்களிடம் பணம் வாங்கியதில்லை. அவர்களே முன்வந்து கொடுத்தாலும் அதை மறுத்துவிடுகிறார்.
கைவிடப்பட்ட நாய்களுக்கான இவரது ‘அறண் காப்பக’த்தை வாடகை இடத்தில் நடத்தி வருகிறார். மேலும் அடைக்கலம் கொடுக்கப்பட்ட நாய்களுக்கும் சிகிச்சை பெறும் விலங்குகளுக்கும் உணவிட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. யாரிடமும் உதவி பெறாத நிலையில், காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு பகுதிநேர வேலைகளைச் செய்து கிடைக்கும் வருவாயிலிருந்து தனது காப்பக உயிர்களுக்கு உணவிடுகிறார்.
“அறண் காப்பகத்தை இதுவரை 5 முறை இடம் மாற்றியிருக்கிறேன். மக்களுக்கு உதவும் எண்ணம் இருந்தாலும் இதுபோன்ற காப்பகம் ஒன்று தங்கள் பகுதியில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய உளவியலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்களுடைய இப்போதைய தேவை, சொந்த இடத்தில் இந்தக் காப்பகத்தை அமைக்க வேண்டும் என்பது. அதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று சொல்லும்போதே, ‘மயில் ஒன்று நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. உடனே வாருங்கள்’ என்று அழைப்பு வர, நமக்கு விடைகொடுத்துவிட்டு ஸ்கூட்டரில் பறந்தார் விஜய்.
(பொறியாளர்களைக் கண்டறிவோம்)
- jesudoss.c@hindutamil.co.in