

ஒருநாள் அல்சூர் நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் காபி குடிப்பதற்காக நானும் கலியபெருமாளும் சென்றோம். நாங்கள் உட்காரச் சென்ற மேசைக்குப் பக்கத்தில் நின்றிருந்தவரைப் பார்த்ததும், “என்ன செல்லதுரை? ஊருலதான் இருக்கீங்களா? பார்க்கவே முடியலையே?” என்று கேள்விகளை அடுக்கினார் கலியபெருமாள்.
அவர் பதில் சொல்லி முடித்ததும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரைப் பற்றி என்னிடம் சொன்னார். “செல்லதுரை ஐ.டி.ஐ.ல சீனியர் மெக்கானிக்கா இருக்காரு. இங்கதான் லட்சுமிபுரத்துல பதினெட்டாவது கிராஸ்ல வீடு” என்றார்.
“அவரை நான் ஏற்கெனவே பல இடங்கள்ல பார்த்திருக்கேன் கலி” என்று புன்னகைத்தபடி சொன்னேன். “எப்படி?” என்று கேட்டார் கலியபெருமாள்.
“பழக்கம் இல்ல கலி. ஆனா, அவர் பெரிய பாடகர்னு மட்டும் தெரியும். ரெண்டு, மூணு கல்யாண மண்டபத்துல அவர் பாடினதைக் கேட்டிருக்கேன். ஜேசுதாஸ் குரல்ல நல்லா பாடுவாரு.”
நான் சொன்னதைக் கேட்டு செல்ல துரையின் முகம் மலர்ந்துவிட்டது. விழிகள் விரிய வியப்போடு என்னைப் பார்த்தார்.
“தம்பிக்குப் பாட்டுன்னா ரொம்பப் புடிக்குமோ?”
“ரொம்ப ரொம்பப் புடிக்கும். இலங்கை வானொலி வர்த்தக ஒலி பரப்புல தேன்கிண்ணம், அமுதகானம் நிகழ்ச்சியில போடற பாடல்களை அந்தக் காலத்துல காத்திருந்து கேட்டவன் நான்.”
காபி வந்தது. பருகிக்கொண்டே உரையாடலைத் தொடர்ந்தோம்.
தனித்துவம் மிக்க பாடகர்: “ஒருநாள் சீத்தாராம் மண்டபத்துல நீங்க பாடிட்டிருந்ததைப் பார்த்தேன். அதுக்கப்புறம் கெம்பம்மா தேவி கல்யாண மண்டபம், சூரியநாராயண ஹால்னு பல இடங்கள்லயும் பார்த்தேன். எல்லாக் குழுவுலயும் நீங்க இருக்கீங்க. உங்களுக்குன்னு தனியா குழு இல்லையா?”
“குழு வச்சி நடத்தற அளவுக் கெல்லாம் எனக்கு வசதி கிடையாது தம்பி. எனக்குப் பாடறதுக்குப் புடிக்கும். அதுவும் ஜேசுதாஸ் குரல்ல பாடற துன்னா ரொம்ப ரொம்பப் புடிக்கும். அல்சூருல எந்த மண்டபத்துல பாட்டுக் கச்சேரியோடு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்க போயிடுவேன். நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாமே இந்த அல்சூருலதான். எல்லாருக்குமே என்னைத் தெரியும். யாரும் என்கிட்ட ஏன் வந்த, ஏன் பாடறன்னு கேட்க மாட்டாங்க.”
“எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சிருக்கீங்க!”
“அப்படியும் வெச்சிக்கலாம்” என்றபடி அவர் நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் தரையை நோக்கி முகத்தைத் தாழ்த்தினார். பிறகு, “கூட்டம் வரும் வரைக்கும் பாடகர்கள் மேடையில சும்மா கதைதான் பேசிட்டிருப்பாங்க. அந்த நேரத்துல நான் போய் ரெண்டு பாட்டுப் பாடிக்கிடட்டுமான்னு ட்ரூப் மானேஜர் கிட்ட கேட்டுப் பார்ப்பேன். வழக்கமா யாரும் வேணாம்னு சொன்னதில்லை. நானும் சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி என் ஆசைக்கு நாலஞ்சி பாட்டுப் பாடுவேன். கூட்டம் சேர ஆரம்பிச்சதும் மேடையிலிருந்து எறங்கிடுவேன். அவ்ளோதான் நம்ம கச்சேரியுடைய கதை.”
அந்த அறிமுகத்துக்குப் பிறகு செல்லதுரையை எங்கு பார்த்தாலும் சில நிமிடங்கள் பேசிவிடுவேன். அது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. எனக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.
மெட்டுக்கேற்ற புதிய வரிகள்: ஒருமுறை முதலியார் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், ‘தங்கத் தோணியிலே’ பாட்டின் மெட்டில் ‘அன்புச் செல்வங் களே ஆசைப் பறவைகளே’ என்கிற புதிய வரிகளோடு பொருத்தமாகப் பாடியதைக் கேட்டேன். ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ மெட்டில் ‘உல்லாச நாளில் ஊரெல்லாம் கூடி மனமார வாழ்த்துதம்மா’ என்று கச்சிதமான மாற்றுவரிகளோடு பாடியதையும் கேட்டேன். அன்று அவர் மேடை யிலிருந்து இறங்கி வருவதற்காகக் காத்திருந்து பாராட்டினேன்.
நான் அல்சூரின் கிழக்குப் பகுதியில் இருந்தேன். அவர் மேற்குப் பகுதியில் இருந்தார். வாரத்துக்கு ஒருநாளாவது ஒருவர் கண்ணில் இன்னொருவர் பட்டு விடுவோம். பாட்டோடு இசைந்தபடி அவர் உரையாடலை அமைத்துச் செல்லும் போக்கு எனக்கு மிகவும் பிடித்தமானது.
திடீரென அல்சூரில் அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. வாரக்கணக்கில் நீண்ட இடைவெளி, மாதக்கணக்கிலானதாக மாறியது. முதலில் என்னுடைய வேலையில் அதை நான் பெரிய அளவில் உணர வில்லை. உணர்ந்தபோது கிட்டத்தட்ட ஓர் ஆண்டே ஓடிவிட்டிருந்தது. ஒவ்வோர் ஆண்டாகக் கடக்கக் கடக்க ஆழ்கடல் முத்தென செல்லதுரையின் முகமும் பெயரும் நினைவடுக்குகளின் கீழே புதைந்துவிட்டன.
எதிர்பாராத வாய்ப்பு: என்னோடு பணிபுரிந்த ஒருவர் பெங்களூருவுக்கு வடக்கே தணிசந்த்ரா பகுதியில் புதுவீடு கட்டி, குடிபோவதை ஒட்டி விருந்துக்கு அழைப்பு விடுத்தி ருந்தார். அல்சூரிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த இடத்துக்குச் சென்றேன்.
“அல்சூரு ஏரியைவிட நாலு மடங்கு பெரிய ஏரி ஒண்ணு இங்க பக்கத்துலதான் இருக்குது. ராசீன ஹள்ளி ஏரின்னு பேரு” என்று யாரோ சொன்ன தகவலைக் கேட்டு, மாலை யில் ஏரியைப் பார்க்கச் சென்றேன்.
கரையில் சிற்றலைகள் மோத நிரம்பித் தளும்பி நின்ற ஏரியைப் பார்க்கப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. வேடிக்கை பார்த்தபடியே கரைமீது போடப்பட்டிருந்த நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். பாதையில் விழுந்து குவிந்திருந்த புங்கம்பூக்களின் மணம் வீசியது.
மீண்டும் சந்திப்பு: யாரோ பாடும் குரல் கேட்டு ஒருகணம் நின்றேன். என் முன்னால் ஒருவருமே இல்லை. ஆனால், குரல் மட்டும் கேட்டது. ‘நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க’ என்கிற தெளிவான ஏற்றஇறக்கத்துடன் கூடிய ஜேசுதாஸ் குரல். அந்தப் பாட்டை ரசிக்கும் ஆர்வத்தில் நின்றுவிட்டேன்.
அடுத்த கணமே மின்னலைப் போல ஆழ்நெஞ்சிலிருந்து செல்லதுரையின் முகம் எழுந்துவந்தது. வழக்கமாக அவர் பாடும் மேடைப்பாட்டு அது. அந்த ஏரிக்கரையில் யார் அதைப் பாடுகிறார்கள் என அறியும் ஆவல் என்னை உந்தித்தள்ளியது.
பாதையிலிருந்து விலகிப் புல்தரை யில் இறங்கி நடந்து சென்றேன். ஓர் அரசமரத்தடி வேர்ப்புடைப்பில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தவருக்கு அருகில் சென்றேன். செல்லதுரைதான் அந்தக் குரலுக்குரியவர். பத்து ஆண்டுத் திரை அக்கணத்தில் அகன்றது.
நான் புன்னகைத்தபடி அவரை நெருங்கிச் சென்றேன். அவர் எழுந்துவந்து என்னைத் தழுவிக் கொண்டார். அவர் கண்கள் தளும்பின. பழைய நிகழ்ச்சிகளைக் கிளறுவது போல எதையும் கேட்டுவிடக் கூடாது என மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன். ஆனால், எல்லாத் தடைகளையும் மீறி அவரே பழைய கதையைத் தொட்டுவிட்டார்.
“என் பொண்டாட்டிக்கும் பசங் களுக்கும் ஆரம்பத்துலேருந்தே நான் கச்சேரியில பாடறது புடிக்காது. அசிங்கம், அசிங்கம்னு சொல்லிட்டே இருப்பாங்க. பசங்க ரெண்டு பேருக்கும் படிப்பு முடிச்ச கையோடு மான்யதா டெக்பார்க்ல நல்ல சம்பளத்துல பெரிய வேலை கெடைச்சிது.
வலுக்கட்டாயமா வீட்ட மாத்தி இங்க கொண்டுவந்துட்டாங்க. எப்பவாவது பாடற ஆசை மனசுக்குள்ள கெடந்து துடிக்கும். அடக்கவே முடியாது. அப்ப சித்த நேரம் இந்தப் பக்கமா நடக்கற மாதிரி வந்து, இப்படி மறைவா உக்காந்து நாலஞ்சி பாட்டுப் பாடிட்டுப் போயிடுவேன்!”
(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)
- writerpaavannan2015@gmail.com