

திருப்பூர். அவருக்கு 55 வயது இருக்கலாம். குளித்து, முடி வெட்டி எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்று கணிக்க முடியவில்லை. தலை முடியும் தாடியும் சடைபிடித்துக் கிடந்தன. கண்கள் இலக்கின்றி எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தன. மனநோயின் தீவிர நிலையில் இருப்பவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
தன் உதவியாளர் ஒருவருடன் வந்திறங் கினார் தெய்வராஜ். அந்த மனிதரின் அருகில் உட்கார்ந்து, பேச்சுக் கொடுத்தார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “நீ எப்போ சிங்கப் பூர்லேர்ந்து வந்தே?” என்றார் அந்த மனிதர்.
“நேத்துதான் வந்தேன். நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு சொன்னாங்க. அதான் வந்தேன்.”
“என்ன குமாரு, புதுசா மரியாதை கொடுக்கிற… ஜெயபால்னு பேரச் சொல்லிக் கூப்பிடப்பா.”
“சரி ஜெயபாலு, டீ குடிச்சுட்டு முடி வெட்டிக்க. அப்புறம் குளிச்சுட்டு, புது டிரஸ் மாத்திக்கலாம்.”
“என்னைப் புடிச்சுக்கிட்டுப் போக வந்தீயா?”
“நான் உன் சினேகிதனப்பா...”
“சரி சரி, கோவிச்சுக்காத கண்ணு.”
தெய்வராஜ் தன்னை ‘குமார்’ என்று நினைத்துக் கொண்ட அந்த மனிதரை ஒரு வேப்ப மர நிழலில் உட்கார வைத்தார். டீயை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார். அதை ஜெயபால் குடித்ததும், உதவியாளரிடமிருந்து ஒவ்வொரு கருவியாக வாங்கி, சடை பிடித்துக் கிடந்த முடிக்கற்றைகளை வெட்டினார். ‘ட்ரிம்மர்’ கொண்டு தாடி, மீசையை மழித்தார்.
ஜெயபாலை இரண்டுமுறை சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி, புது ஆடையையும் அணிவித்தார். உணவைப் பாக்குமட்டைத் தட்டில் வைத்துப் பரிமாற, தெய்வராஜுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சாப்பிட்டார் ஜெயபால். அவர் சாப்பிட்டு முடித்ததும், “ஹோம்ல சேர்றீயா?” என்று தெய்வராஜ் கேட்டார்.
“பார்த்தியா, என்னைப் புடிச்சுக்கிட்டுப் போகத்தானே வந்த? நீ என் குமாரு இல்ல...” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார் ஜெயபால்.
தெய்வராஜிடம் பேசினேன்.
“மனநலம் பாதிக்கப்படும்போது ஆரம் பத்திலேயே கவுன்சலிங், நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, குடும்பத்தார் அரவணைப்புனு இருந்துட்டா அந்தப் பிரச்சினை பனி மாதிரி விலகிடும். ஆனால், அங்கேதான் பலரும் கோட்டை விட்டுடறாங்க. கிராமப் பகுதிகள்ல சுத்தமா விழிப்புணர்வு இல்ல.
மனச்சிதைவு தீவிர நிலைக்குப் போனால் முறையான சிகிச்சை எடுத்து, தொடர்ந்து மருந்து எடுத்துக்கிட்டா மட்டுமே மீண்டுவர முடியும். ஆனால், நிறைய பேருக்குப் பொறுமை இருக்கிறதில்ல. ‘மருந்து, மாத்திரைகள் விலை அதிகம், நம்மால் சமாளிக்க முடியாது’ன்னு விட்டுவிடும்போது அவங்க சுமையா மாறிட றாங்க.
அப்படிப்பட்டவங்கள வீட்ல வச்சுப் பராமரிக்க முடியாமல் இப்படி வெளியே விட்டுடறாங்க. இவங்களை ‘Wandering Lunatics’னு சொல்றாங்க. அதாவது எங்கே போறோம், நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பதை அறிய முடியாத நிலையில இருக்கிறவங்க. இவங்களைப் பார்க்கும்போது, ‘நாம என்ன பண்ண முடியும்’னு பரிதாபப்படுறதோட சமூகம் நகர்ந்துடுது.
சிலர் உணவுப் பொட்டலத்தை வீசி, தங்கள் இரக்கத்தைக் காட்டுறாங்க. ஆனா, அது உணவு என்பதே மனநோயாளர்களுக்குத் தெரியாது. இந்த மாதிரி இலக்கில்லாமல் அலையும் மனநோயாளர்களைக் குழந்தைக்கு உரிய அக்கறையோடு நாம அணுகணும்.
அவங்ககிட்ட பேச்சுக்கொடுத்து அவங்க நம்பிக்கையை முதல்ல பெறணும். அதுக்கப்புறம் அவங்களுக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, உடை மாற்றிவிட்டு, உணவு கொடுக்கணும். அவங்க ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா, அவங்க அனுமதியோட அரசு, தனியார் காப்பகங்கள்ல சேர்த்துவிடணும்.
இதையெல்லாம் கடந்த 23 வருஷமா செய்துகிட்டு இருக்கேன். இதுவரை 30க்கும் அதிகமான தன்னார்வலர்கள் என்னோட சேர்ந்து பணி செய்யறாங்க. நாங்க எல்லாருமே எங்களுடைய வருமானத்தில் இதைச் செய்றோம்.”
தெய்வராஜ், சிகை அலங்காரக் கலைஞர். கரூர் மாவட்டம், கட்டாரிப்பட்டி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். பள்ளியில் படிக்கிற காலத்திலேயே காசு கொடுத்து முடிதிருத்தம் செய்ய முடியாத நிலையில் இருந்த தன் வகுப்புத் தோழனுக்கு முடிதிருத்தம் செய்து, 15 வயதில் தனது சேவையைத் தொடங்கியிருக்கிறார்.
22 வயதில் திருப்பூருக்கு வந்து, தனியாக சலூன் கடை தொடங்கிய அடுத்த வருடமே கைவிடப்பட்டவர்களுக்குத் உதவும் சமூகப் பணியைத் ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் ‘தெய்வா சிட்டி அறக்கட்டளை’யைத் தொடங்கி ஏழை விடுதி மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள், அரசு மனநலக் காப்பகங்களில் இருப்பவர்கள், தொழுநோயாளர்கள் ஆகியோருக்கு முடி திருத்தம் செய்வது, ஆதரவற்றவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது என்று சேவையை விரிவாக்கினார். கடந்த 23 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிக மானவர்களுக்கு இவரும் இவருடைய தன்னார் வலர்களும் சேவையை அளித்திருக்கிறார்கள்.
“இவர்களுக்காகவே உணவகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். மனநோயாளர்கள், ஆதரவற்றவர்களைச் சீர்படுத்தினாலும் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க முடிவ தில்லை. இவர்களுக்கான அரசு, தொண்டு நிறுவனக் காப்பகங்களின் எண்ணிக்கை குறைவு.
அதனால், இவர்களை ஒரே இடத்தில் தங்க வைப்பதற்காகக் காப்பகம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்கான இடத்தை வாங்கிவிட்டேன். பல கரங்கள் இணையும்போது கட்டிடம் எழும்பும்” என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் தெய்வராஜ்.
(பொறியாளர்களைக் கண்டறிவோம்)
- jesudoss.c@hindutamil.co.in