சமுகப் பொறியாளர்கள் 01: மிதிவண்டியில் வரும் தேவதூதன்!

சமுகப் பொறியாளர்கள் 01: மிதிவண்டியில் வரும் தேவதூதன்!
Updated on
3 min read

வேலனூர் மலைக்கிராமம். பகலெல்லாம் நிலத்தில் உழைத்த களைப்பில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த முத்து, ‘ம்மா... ம்மா...’ என்கிற தீனமான குரல் கேட்டுக் கண்விழித்தார். அரூர் சந்தையில் வாங்கிக்கொண்டு வந்த பசுவின் அலறல்தான் அது.

தொழுவத்துக்கு ஓடிப்போய் பசுவைக் கவனித்தார். எதுவும் பிடிபடவில்லை. அவருடைய மனைவி, “பூச்சிபொட்டு ஏதும் தீண்டிருச்சான்னு தெரியல. ரவி சாரைக் கூட்டிக்கிட்டு வாங்க’’ என்று பதறினார். ரவியை அழைத்துக்கொண்டு வந்தார் முத்து. பசுவின் வயிறு வழக்கத்தைவிட உப்பலாக இருப்பதைக் கவனித்த ரவி, பசுவின் மூச்சுக் காற்றை வாசனைப் பிடித்துப் பார்த்தார்.

200 மி.லி. ஓமத்தண்ணீரில் 100 மி.லி. வெற்றிலைச் சாற்றைக் கலந்து பசுவின் வாய்க்குள் செலுத்திவிட்டுக் காத்திருந்தார். இப்போது பசு கத்துவதை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழித்துச் சாணத்தை வெளியேற்றியது.

உப்பியிருந்த வயிறு வடியத் தொடங்கியது. முத்துவும் அவரின் மனைவியும் ரவியைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். “இது முதலுதவிதான். காலையில மொத வேலையா கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருங்க” என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார் ரவி.

வேலனூருக்குப் பக்கத்தில் உள்ள மற்றொரு மலைக்கிராமம் ஆவாளூர். அந்த ஊரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவியான தர்ஷினி, தாதன்கொட்டாய்க்கு ரவியைத் தேடிக்கொண்டு வந்தார். குடிசை வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரவி, “என்னம்மா, வெற்றியா?” என்று உற்சாகமாகக் கேட்க, “ஆமாங்க சார், சென்னை ஐஐடியிலேர்ந்து மெயில் வந்திருக்கு.

பி.இ. பயோமெடிக்கல் இன்ஜினியரிங். நாலு வருஷப் படிப்பு. முதல்ல உங்ககிட்ட காட்டணும்னு ஓடியாறேன்” என்று தன்னுடைய போனில் மின்னஞ்சலை அவருக்குக் காட்ட, அதைப் பார்த்து ரவியின் கண்கள் கலங்கின. ரவி நடத்தும் இலவச மாலைநேர வகுப்புகளில் படித்து, ரவியின் அறிவுரையால் பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் நிறைய வாசித்து, அறிவை விரிவாக்கிக்கொண்டவர் தர்ஷினி.

வேலனூர், ஆவாளூர் மட்டுமல்ல; கட்டக்காடு, தேக்கனம் பட்டி, குழுமி நத்தம், செலம்பை, புதுக்கோட்டைச்சரடு, தாதன் கொட்டாய் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களில் வாழும் மக்களின் மத்தியில் ரவி உருவாக்கியிருக்கும் மாற்றங்களும் வெற்றிக் கதைகளும் ஏராளம்!

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உள்பட்ட மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதிதான் சின்ன கல்வராயன்மலை. இதன் அடிவாரத்தில் 50க்கும் அதிகமான மலைக்கிராமங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கம் மலை, ஒரு பக்கம் வனம், ஒரு பக்கம் சமவெளி எனப் பசுமை போர்த்திக் கிடக்கும் இப்பகுதியில் பருத்தி, பாக்கு, ரோஜா, சிறுதானியங்கள் என விவசாயம் செய்கிறார்கள் அங்கு வாழும் மலைவாழ் மக்கள். விவசாயத்துடன் அவர்களது வாழ்வாதாரத்தைக் கால்நடை வளர்ப்பும் காப்பாற்றி வைத்திருக்கிறது.

அப்பா, அம்மாவுடன் 30 ஆண்டுகளுக்கு முன் ஆத்தூரிலிருந்து தாதன் கொட்டாய்க்குக் குடிபெயர்ந்து வந்தார் ரவி. இப்போது இவருக்கு 70 வயது. “நான் இங்கே வந்தபோது எனக்கு 40 வயசு. அப்போ இந்தக் கிராமங்களுக்குச் சரியான சாலை வசதியோ பள்ளிக்கூடமோ இல்லை.

இங்கு வாழும் மக்களிடம், ‘நீங்கள் செய்யும் விவசாயத்தை உங்கள் பிள்ளைகள் தானாகவே கற்றுக்கொள்வார் கள். ஆனால், கல்வியை அப்படிக் கற்றுக்கொள்ள முடியாது.

எனவே அவர்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்’ என்று ஒவ்வொரு குடும்பமாகப் பார்த்து எடுத்துச் சொன்னேன். அதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வீடாகப் போய், பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தேன்.

அடுத்து வந்த ஐந்து வருடங்களில் பிள்ளைகள் ஆர்வமாகப் பள்ளிக்குப் போகத் தொடங்கினார்கள். அதன் பிறகு, தாதன்கொட்டாய் பஞ்சாயத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் மாலைநேர வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

அதில் கற்று, சென்னை ஐஐடி வரை சென்றுள்ள பிள்ளைதான் தர்ஷினி” என்றவரிடம், உங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என்று யோசிக்க வில்லையா என்றதும், “குடும்பம் இருந்தி ருந்தாகூட இவ்வளவு மகிழ்ச்சியா இருந் திருப்பேனான்னு தெரியாது. நான் வந்த அஞ்சு வருஷத்தில் அம்மாவும் அப்பாவும் ஆத்தூருக்குப் போக விரும்பினாங்க. நானும் அவங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பிட்டேன்.

ஊருக்குப் போன பிறகு அப்பாவும் அம்மாவும், ‘உன்ன நம்பியிருக்க அந்த ஜனங்களை எங்களுக்காக இப்படி விட்டுட்டு வந்திட்டியேப்பா’ என்று வருத்தப்பட்டார்கள். எனக்கும் கவலை தொற்றிக்கொண்டது. ஊர்ப் பெரியவர்களும் என்னைத் தேடிக்கொண்டு ஆத்தூருக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களை நானும் என்னை அவர்களும் இனிப் பிரிய முடியாது என்று உணர்ந்தபோது, இந்தப் பகுதி மக்களில் ஒருவனாக மாறிப்போனேன்” எனும் ரவி, திருமணம் தனது சமூகப் பணிக்குத் தடையாக இருக்கலாம் என்கிற எண்ணத்தில் அதைத் தவிர்த்துவிட்டார்.

ரவியின் பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பங்கெடுத்த பிள்ளைகளில் பலர் இன்று பட்டப்படிப்பைத் தொட்டு நிற்கிறார்கள். கான்ஸ்டபிள், செவிலியர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என 15 அரசு ஊழியர்களை உருவாக்கியிருக்கிறார் ரவி. இந்த வயதிலும் வகுப்புகள் நடத்துவதை நிறுத்தாதவர், மிதிவண்டியில்தான் கிராமங்களுக்குப் பயணிக்கிறார்.

(பொறியாளர்களைக் கண்டறிவோம்)

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in