

‘சமையல்’ என்பது பெண்களின் வேலை என்று இன்றும் பெரும்பான்மைச் சமூகத்தால் பெண்கள்மீது திணிக்கப்படுகிறது. இப்போது சமையலைப் பாலினப் பாகுபாடின்றிக் கற்க வேண்டும் என்கிற தெளிவு இளைய தலைமுறையினரிடம் வர ஆரம்பித்திருக்கிறது. அவர்களில் தீபிகா-பிரசன்னா இணையும் ஒன்று. கணவன் சமைக்க, மனைவி தொழிலை நிர்வகிக்க என மசாலா வியாபாராத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்!
பிரசன்னாவுக்குச் சமையல்மீது அவ்வளவு பிரியம் என்றால், தீபிகாவுக்கும் சமையலுக்குமான சம்பந்தமோ வெகு தொலைவு. ‘ஜஸ்ட் சைட்ஸ்’ என்கிற பெயரில் வீட்டிலேயே தயாரித்து இவர்கள் விற்பனை செய்யக்கூடிய மசாலாப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு.
“நாங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வந்தோம். பிரசன்னாவுக்குச் சமையல் சார்ந்து ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதில் ஆர்வம். கரோனா ஊரடங்கின்போது எங்கள் மகளுக்காக வீட்டிலேயே ஜாம் தயாரிக்க ஆரம்பித்தோம்.
பின்னர் மசாலா, தொக்கு, பொடி வகைகள், சத்து மாவு ஆகியவற்றையும் தயாரித்தோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் விருப்பத்துக்கேற்ப மசாலாக்களைத் தயாரித்துத் தந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்தத் தொழிலில் இறங்கிவிட்டோம்.”
தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் பொருள்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ரசாயனப் பதப்படுத்தி எதுவும் சேர்க்காமல் இருப்பதையும் தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறார் பிரசன்னா.
“பாட்டி சொல்லிக்கொடுத்த செய்முறைகளைத் தூசிதட்டி எடுத்து, தரமான ‘பேக்கேஜிங்’ முறைகளைப் பின்பற்றி ருசியிலும் தரத்திலும் சமரசம் செய்யாமல் உணவுப் பொருள்களைத் தயாரிக்கிறோம். சிறு வயதிலிருந்தே எனக்குச் சமையலில் ஆர்வம் என்பதால், ‘ரெசிபி’ உறுதி செய்வது, மூலப் பொருள்களை வாங்குவது, சுத்தம் செய்வது, சமைப்பது போன்று அனைத்து வேலைகளுக்கும் நான் பொறுப்பு.
ஆர்டர் எடுப்பது, வாடிக்கையாளருடன் உரையாடுவது, பொருள்களை அனுப்புவது, விளம்பரப்படுத்துவது போன்ற வேலைகளை தீபிகா செய்கிறார். அவர் ஏற்கெனவே மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியிருப்பதால் இந்த வேலைகளுக்கு அவர் பொறுப்பு” என்கிறார் பிரசன்னா.
மாற்றம் தேவை: பாலினச் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என்பதற்கான மாற்றம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள். தீபிகா - பிரசன்னா விஷயத்தில் வீட்டில் மாற்றம் நிகழ்ந்துவிட்டாலும் சமூகம் ஏற்க மறுப்பதாக வருத்தம் தெரிவித்தார் தீபிகா.
“இந்தக் காலத்திலும் கணவன் சமைக்கிறார், மனைவி சமைப்பதில்லை என்றால் ஆச்சரியமாகத்தான் பார்க்கின்றனர். வாடிக்கையாளர்கள்கூட, ‘நீங்கள் சமைப்பதில்லையா?’ என்றுதான் கேட்கிறார்கள். ஆண் சமைப்பதில் பெண்களுக்கே தயக்கம் இருக்கிறது. நிர்வாகத்தில் ஒரு பெண்ணா என்கிற தயக்கம் ஆண்களிடமும் இருக்கிறது” என்கிறார் தீபிகா.
“சமீப காலமாக உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்துவிட்டது. தேடித் தேடிப் புது உணவு வகைகளை ருசிக்கும் பெரும்பாலானோருக்கு அவற்றைச் சமைப்பது ஆண்கள்தாம் என்பது தெரியாமல் இல்லை. உணவகங்களில், கல்யாண வீடுகளில் ஆண்கள் சமைப்பதை ஏற்றுக்கொள்ளும் சமூகம், வீட்டில் சமைக்கும்போது ஏற்க மறுப்பது ஏன்? ஆண்கள் சமைப்பதை இயல்பாக்க வேண்டும்” என்கிறார் பிரசன்னா.
இன்ஸ்டகிராம் உதவி: ‘கிளவுட் கிட்சன்’ முறையில் இயங்கும் இவர்களது வியாபாரத்துக்கு இன்ஸ்டகிராம்தான் விற்பனைத் தளம். “இன்ஸ்டகிராம் பக்கம் ஒன்றை ஆரம்பித்து, அதன் வழியே எங்களது விற்பனையைத் தொடங்கினோம். டிஜிட்டல் தளம் என்பதால் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும்கூட ஆர்டர்கள் வருகின்றன. புது மெனுக்களை அவ்வப்போது எங்களது பக்கத்தில் பதிவேற்றுவோம்.
ஒளிப்படங்களோடு தகவலையும் இணைப்போம். இன்ஸ்டகிராம் வழியே வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்தது. வியாபாரம் தொடங்கிய புதிதில் பெரிய முதலீடு இல்லாமல் தொழிலை முன்னேற்ற சமூக வலைதளத்தைப் பயன்படுத்தலாம். தொழில் முறையில் வளர்ச்சியடையும்போது இணையதளம் தொடங்கி விற்பனையை விரிவுபடுத்தலாம்” என்கிறார் தீபிகா.