

சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று பெசன்ட் நகர் கடற்கரை. சூரியன் உதயமாகும் நேரத்தில், அலைகளின் ஓசைக்கு மத்தியில் கடற்கரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் புத்தக வாசிப்புக்காக பெசன்ட் நகர் கடற்கரையில் கூடுகிறார்கள் புத்தகப் பிரியர்கள். உங்களிடம் புத்தகம் இருந்தால் போதும், பெசன்ட் கடற்கரை கார்ல் ஸ்மித் நினைவகம் அருகே வந்து வாசிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
ஏன் கடற்கரை? - கொல்கத்தா ரீட்ஸ், திருவனந்தபுரம் ரீட்ஸ், கோயமுத்தூர் ரீட்ஸ், பெங்களூரு வின் கப்பன் ரீட்ஸ் என நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாசிப்பு குழுக்கள் ஒரு பொது இடத்தில் கூடி வாசிப்பை ஊக்குவித்து வருகின்றன. இவர்களைப்போல வாசிப்பில் ஆர்வம் கொண்ட கிருத்திகா, சஞ்சனா ஆகியோரால் தொடங் கப்பட்டது தான் சென்னையின் ‘பெஸ்ஸி ரீட்ஸ்’ அமைப்பு. வாசிப்பு நிகழ்வுக்காக இவர்கள் பெசன்ட் நகரைத் தேர்வு செய்தது ஏன்?
“பூங்காக்களைப் போல் அல்லாமல் எல்லாருக்குமான இடமாக, சென்னையின் அடையாளமாக இருப்பவை கடற்கரைகளே. மெரினா, சாந்தோம் கடற்கரைகளோடு ஒப்பிடும்போதும் பெசன்ட் கடற்கரைக்கான பொதுப் போக்குவரத்து வசதி அதிகமாக இருந்தது. மத்திய, தென் சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சிரமமின்றி பெசன்ட் கடற்கரைக்கு வரலாம் என்பதால் இந்த இடத்தைத் தேர்வு செய்தோம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 6 மணிக்குக் கூடுவோம். அவரவர் எடுத்துவரும் புத்தகத்தை வாசித்துவிட்டு, 9 மணிக்கு விடைபெறுவோம். இதுவரை 30 முறை கடற்கரை வாசிப்பு நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளோம்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் கிருத்திகா.
வாசித்தால் போதும்… கடற்கரை வாசிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள, விதிமுறைகள் எதுவும் இல்லை. உங்களிடம் புத்தகம் இருந்தால், அதைக் கொண்டுவந்து வாசிக்கலாம். புத்தகம் இல்லை என்றால், அவர்களே சில புத்தகங்களை வைத்திருப் பார்கள். அவற்றை எடுத்தும் வாசிக்கலாம்.
“வாசிப்பு நடக்கும் இடம், நேரத்தில் பெரிதாக மாற்றம் இருந்ததில்லை. ஆனால், மழை, புயல்போலத் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக நிகழ்வு தள்ளிப் போனால் ‘பெஸ்ஸி ரீட்ஸ்’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது குறித்த தகவல்களைப் பதிவிடுவோம். நிகழ்வுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதினரும் பங்கேற்கலாம்.
5 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை உங்கள் வசதிக்கேற்ப நிகழ்வில் பங்கு பெறலாம். புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் என எது வேண்டுமானாலும் வாசிக்கலாம். டிஜிட்டலிலும் வாசிக்கலாம். இந்நிகழ்வின் முதல் நோக்கம், அனைவரும் வாசிக்க வேண்டுமென்பது மட்டுமே” என்கிறார் கிருத்திகா.
எங்கேயும் எப்போதும்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் பாதிப்பால் வாசிப்பு நிகழ்வை நடத்த முடியாமல் போனதாகச் சொல்லும் கிருத்திகா, இணையவழியில் வாசிப்பைத் தொடர்ந்த கதையைப் பகிர்ந்தார்.
“மிக்ஜாம் புயல் பாதிப்பால் கடற்கரையில் வாசிப்பு நிகழ்வை நடத்த முடியவில்லை. அப்போது அவரவர் வீட்டிலிருந்தபடியே வாசிப்பு நிகழ்வை நடத்தினோம். படித்து முடித்து இன்ஸ்டகிராம் அல்லது வாட்ஸ்-அப்பில் விவரங்களைப் பகிர்ந்துகொண்டோம். ஆரம்பத்தில் நானும் சஞ்சனாவும் வாசிப்பு நிகழ்வை ஒருங்கிணைத்து வந்தோம். தற்போது சஞ்சனா வெளியூருக்குச் சென்றுவிட்டார்.
அதனால் சேத்தனா என்னோடு சேர்ந்து வாசிப்பு நிகழ்வை ஒருங்கிணைத்து வருகிறார். கடந்த சில வாரங்களாக, வாசிப்பு நிகழ்வு முடிந்த பிறகு விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறோம். இதனால் வாசிப்பு நிகழ்வுக்கு வரும் மக்கள் ஒருவருடன் இன்னொருவர் உரையாடி, நட்பு பாராட்ட முடிகிறது” என்கிறார் மகிழ்ச்சியாக!