சேனல் உலா: ‘ஈட் யுவர் கப்பா’

சேனல் உலா: ‘ஈட் யுவர் கப்பா’
Updated on
2 min read

மேகாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர், சமையற் கலைஞர், யூடியூபர் எனப் பன்முகம் கொண்டவர் நம்பி ஜெஸிகா மராக். வட கிழக்கு மாநிலங்களின் அடையாள உணவாக ‘மோமோ’ தவறாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் காலத்தில், ‘ஈட் யுவர் கப்பா’ என்கிற யூடியூப் அலைவரிசை மூலம் அந்த மண்ணின் உண்மையான ருசிகர உணவு வகைகளை ஆவணப்படுத்தி வருகிறார் நம்பி. பிரபல ‘மாஸ்டர் செஃப் இந்தியா சமையல்’ போட்டியில் தென்னிந்திய, வட கிழக்கு சுவையைக் கலந்து இவர் தயாரிக்கும் உணவு வகைகள் பாராட்டுகளை அள்ளுகின்றன.

ஆவணப்படுத்துதல்: ‘ஏழு சகோதரி மாநிலங்கள்’ என்றழைக்கப்படும் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மேகாலயா. அந்த மாநிலத்தின் அப்பர் ரங்சா கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட நம்பி, சென்னையில் தொடர்பியல் துறையில் மேற்படிப்பு படித்தவர். படிக்கும்போது மசாலா தோசையும் பிரியாணியும் அவரது விருப்பமானவையாக இருந்தபோதும் சொந்த மண்ணின் சுவையை அவர் சென்னையில் தேடி அலைந்திருக்கிறார். அந்தத் தேடலில் கிடைத்த ஏமாற்றம்தான், வட கிழக்கு உணவு வகைகளை ஆவணப்படுத்தும் முயற்சிக்கான காரணம் என்கிறார்.

“இந்தியாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வட கிழக்கு மாநிலங்களின் உண்மையான கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் தெரிவதில்லை. வட கிழக்கு மக்கள் எப்போதும் இறைச்சியை உண்பவர்கள் என்றும், மலைப் பகுதியில் கிடைக்கும் எதையும் சாப்பிடுவார்கள் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது உண்மையல்ல. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மசாலா, காய்கறி, பழங்கள், இறைச்சி எனக் காலத்துக்கு ஏற்ப உண்ணக்கூடிய மக்கள் நாங்கள். ஆனால், சென்னை போன்ற பெருநகரத்தில்கூட வட கிழக்கு உணவு வகைகள் கிடைப்பதில்லை. அந்த வருத்தத்தில்தான் நானே ஒரு யூடியூப் அலைவரிசையை ஆரம்பித்து, எங்கள் உணவு வகைகளை மற்றவர்கள் அறியும் விதத்தில் நடத்தி வருகிறேன்” என்கிறார். மேகாலயாவின் மலைகள் சூழ்ந்த அழகான பகுதிகளில் சமைத்துக் காட்டும் நம்பியின் யூடியூப் அலைவரிசையை 45,000க்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

சின்னத்திரையில்: ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ சமையல் போட்டியில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் மேகாலய பெண் நம்பி. தான் தயாரிக்கும் உணவு வகைகளில் புதுமையைப் புகுத்தும் அவர், மற்ற போட்டியாளர்களுக்குச் சவாலாக இருக்கிறார்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைத்தான் நான் இணையராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். சென்னையில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். இதனால் தென்னாட்டுச் சமையல் அறிமுகம் எனக்கு ஏற்கெனவே இருந்தது. சோதனை முயற்சியாகத் தென்னிந்தியச் சுவையையும், வட கிழக்கு சுவையையும் கலந்து தயாரித்த உணவு வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கிழங்கு ஸ்டஃப்ட் தோசை, பெர்ரி மீன் குழம்பு, கிவி பழ ரசம் ஆகியவற்றுக்கு ரசிகர்கள் அதிகம். மூலப்பொருள்களையும் மசாலாக்களையும் சரியான அளவில் பயன்படுத்தினால் இந்த இரண்டு ஊர்களின் சுவை அட்டகாசமாக இருக்கும்” என்கிறார் நம்பி.

ஆசிரியராக... சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பிய நம்பி, பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். “ஊர் திரும்பியவுடன் விவசாயம் செய்துவந்தேன். அப்போது இங்கு இயங்கி வந்த ஆரம்பப் பள்ளியை நிர்வகிக்க முடியாமல் மூட இருப்பதாக கிராமத் தலைவர் தெரிவித்தார். எங்கள் கிராமத்தில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்திருந்தது நானும் என் இணையரும் மட்டுமே. அதனால் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 15 குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கி, தற்போது 85 குழந்தைகளுடன் எங்கள் பள்ளி விரிவடைந்திருக்கிறது. நாள்தோறும் அவர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென ஆசைதான். ஆனால், பொருளதாரச் சூழல் காரணமாக மாதம் இரு முறை மட்டுமே குழந்தைகளுக்கு உணவு வழங்கிவருகிறேன். மலைவாழ் குழந்தைகளுக்கும் உரிய கல்வி கிடைக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் மாநிலம் கடந்து, நாடு கடந்து அவர்களாலும் சாதிக்க முடியும்” என்கிறார் நம்பி.!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in