

‘சிலை’ என்றவுடன் கடவுளின் சிலை, தலைவர்களின் சிலை எனப் பாரம்பரியம், வரலாறு தொடர்பான விஷயங்கள்தாம் நினை வுக்கு வரும். ஆனால், வழக்கமான சிலை களைப்போல் அல்லாமல், ஒரு கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ‘விழிப்புணர்வு’ சிலைகளை வடிவமைத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் தங்கபாண்டி. பொறியியல் பட்டதாரியான தங்கபாண்டிக்குச் சிறு வயதிலிருந்தே ஓவியம், வடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. அதனால் சிலைகள் உருவாக்கும் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். ‘Concept art’ முறையில் விழிப்புணர்வு சிலைகளை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.
“தமிழ், தமிழர்களின் அடையாளங்களில் திருவள்ளுவரும் ஒருவர். வள்ளுவரின் சிலை மூலம் தமிழ் மொழியின் பெருமையை உலகுக்குச் சொல்ல முடியும். வள்ளுவரின் சிலையை ஒரு பள்ளி வளாகத்தில் நிறுவ வேண்டும் என்றால், சிலை வைக்கப்படும் தளத்தைச் சுற்றி திருக்குறள் புத்தகம், சில குறள்கள், வள்ளுவரைப் பற்றிய சில கருத்துகள், மாணவர்கள் குறள்களை ஆர்வமாகப் படிப்பது போன்று வடிவமைத்துவிடுவேன். இப்படிக் காட்சிப்படுத்தும்போது சொல்ல வரும் கருத்தைப் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடியும். இதுபோல புகைபிடிக்கக் கூடாது, காடுகளைக் காப்போம், பெண் கல்வி என எந்தக் கருத்தானாலும் சில நுணுக்கமான வேலைப்பாடுகளைச் சேர்த்து விழிப்புணர்வு சிலைகளை அழகாகக் காட்சிப்படுத்த முடியும்” என்கிறார் தங்கபாண்டி.
கூட்டு முயற்சி: சிலை வடிவமைப்பு என்பது சிலை வடிவமைப்பாளரின் பணி மட்டும் அல்ல. வரைதல், வடிவமைப்பு, அச்சு எடுத்தல் என ஒவ்வொரு துறையையும் சேர்ந்த தேர்ந்த கலைஞர்களின் கூட்டு உழைப்பால்தான் சிலை வடிவமைக்கப்படுகிறது. ‘கலைச் சிற்பம்’ எனும் பெயரில் சிலைத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தங்கபாண்டி, “முதலில் வடிவமைக்க இருக்கும் சிலையின் படத்தை வரைய வேண்டும். இது ‘Model / Concept drawing’. இதை உறுதி செய்த பின்பு, வடிவமைப்பாளரின் கை வண்ணத்தில் சிலை வடிவமைக்கப்படும்.
இது ‘sculpting’. அதனை அடுத்து ‘moulding’ எனப்படும் அச்சு வேலையைத் தொடர வேண்டும். மொத்த பட்ஜெட், மூலப் பொருளின் தேர்வைப் பொறுத்து ரப்பர் அல்லது பிளாஸ்டரில் சிலையின் அச்சு எடுக்கப்படும். ஒரு சிலையை ஒன்றுக்கும் மேற்பட்ட பாகங்களாக அச்சு எடுத்து வடிவமைக்கும்போது ரப்பர் பயன்படுத்தப்படும். ஒரே பாகமாக அச்சு எடுக்க பிளாஸ்டர் பயன்படுத்தப்படும். இப்படி அச்சு எடுத்த பின்பு, சிலைக்கு வண்ணம் பூசப்படும். ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான வேலைப்பாட்டை செய்தால் மட்டுமே தத்ரூபமான சிலையை வடிவமைக்க முடியும். சிலையின் அளவைப் பொறுத்து இதற்கான வேலையாள்களின் தேவையும் காலமும் மாறுபடும்” என்கிறார்.
தொழில்நுட்பமும் கலையும்: படைப்பாளிகளுக்கு ஏஐ போன்ற சமீபத்திய தொழில்நுட்பத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் தங்கபாண்டி. “ஒரு கருத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் வரைய, வடிவமைக்க முடியும். ஆனால், அதற்கான கட்டளைகளை, புதுமைகள் புகுத்திச் சொல்ல மனிதரால் மட்டுமே முடியும். எது தேவை, தேவையில்லை எனப் பிரித்துப் பார்த்து தரமான தயாரிப்புகளைப் படைக்க படைப்பாளிகளால் மட்டுமே முடியும். சிலை வடிவமைப்பு பணிகளிலேயே ‘3டி, மெஷின் கட்டிங்’ முறைகள் வந்துவிட்டன.
காலத்துக்கு ஏற்பத் தன்னை வடிவமைத்துக் கொள்ளும் கலைகளில் சிலை வடிவமைப்பும் ஒன்று. எனினும் கைப்பட வடிவமைப்பதில் இருக்கும் நுணுக்கத்தை, அழகியலை இயந்திரத்தில் உணர முடியாது” என்கிறார். யானைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தங்கபாண்டி, யானை சிலைகள் அடங்கிய பூங்கா ஒன்றை மக்கள் பார்வைக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
- karthiga.rajendran@hindutamil.co.in