

மேற்கத்திய நாடுகளில் தையல் இயந்திரத்தின் விற்பனை பரவலாக்கப்பட்டபோது, அது பெண்களுக்கு விடுதலையைத் தந்தது. அதுவரை பல மணி நேரம் செலவு செய்து துணிகளைக் கையால் தைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு விடிவுக் காலம் கிடைத்தது. பலர் வருமானம் ஈட்டி, பொருளாதாரச் சுதந்திரமும் பெற்றனர். இவ்வளவு சிறப்புமிக்க இந்தத் தையல் இயந்திரத்தை மையமாகக் கொண்டு, பெண்கள் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களைத் தீட்டிவருகிறார் ஓவியர் மனோஜித் கிருஷ்ணன்.
ஏன் தையல் ஓவியங்கள்? - கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த மனோஜித், கடந்த ஐந்து ஆண்டுகளாக முழு ஈடுபாட்டுடன் ஓவியம் வரைந்துவருகிறார். பெரும்பாலும் பென்சில் கோட்டோவியங்களை வரையும் இவர், தனது படைப்புகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவுசெய்கிறார்.
தையல் இயந்திர ஓவியங்கள் உருவானதைப் பற்றி உற்சாகமாகப் பகிர்ந்துகொண்ட அவர், “சிறு வயது முதலே எங்கள் வீட்டில் இருக்கும் தையல் இயந்திரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். என்னைச் சுற்றியிருந்த பெரும்பாலான பெண்கள் தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். அதன் வருகைக்குப் பிறகு பெண்கள் பொருளாதார அளவில் யாரையும் சாராமல் இருக்கும் சூழல் வந்தது.
இதை ஒரு புரட்சி என்றே சொல்லலாம். எனவே, தையல் இயந்திரத்தையும் பெண்களையும் இணைத்து, கொஞ்சம் கற்பனை கலந்து வரைந்தேன். இயந்திரத்தின் பல்வேறு பாகங்களைக் கொண்டு வாள், வாகனம், கப்பல்போல மாற்றியமைத்து அவற்றைப் பெண்கள் பயன்படுத்துவது போல வரைகிறேன். இந்த ஓவியங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது, எதிர்ப்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி” என்கிறார்.
கலைக்கு மொழி கிடையாது: மனோஜித்தின் ஓவியங்கள் கேரளத்தைத் தாண்டியும் பிரபலமாக இருக்கின்றன. இவரது ஓவியங்கள் பார்ப்பதற்கு எளிமையாகவும் கதை சொல்பவையாகவும் இருப்பது தனிச்சிறப்பு.
“பென்சில் ஓவியங்களில் விருப்பம் என்பதால் பெரும்பாலும் வண்ணங்களைத் தவிர்க்கிறேன். நான் வரைய நினைக்கும் ஓவியத்தின் ‘அவுட்லைன்’ அமைந்துவிட்டால், முழுமையாக வரைந்து முடிக்க ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகும். மனிதர்கள் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.
அதனால்தான் உணர்ச்சிகள், விமர்சனம், விருப்பு, வெறுப்பு ஆகியவை ஒருவரோடு இன்னொருவருக்கு ஒத்துப்போகிறது. அப்படிப் பலருக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் எனது படைப்புகள் இருப்பதால், இந்த ஓவியங்கள் எல்லை தாண்டி பலரைச் சென்றடைந்திருக்கின்றன” என்கிறார் மகிழ்ச்சியாக.
‘பாசிட்டிவ் வலைதளம்’ - சமூக வலைதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் ஓவியர்கள் போன்று கலை சார்ந்து இயங்குபவர்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார் மனோஜித்.
“2012ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் எனது ஓவியங்களைப் பகிரத் தொடங்கினேன். அதில் நண்பர்கள் சிலர் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களைப் பதிவுசெய்தனர். சிலர் ஓவியங்களைக் கேட்டு ஆர்டர் செய்தனர். ஆரம்பத்தில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது சமூகவலைதளம்தான்.
அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று நிறைய ஆர்டர்களை எடுத்து வரைந்துவருகிறேன். ‘தையல்’, ‘ஜிமிக்கி’ ஓவியங்கள்போல எனது கற்பனைத் திறனை வெளிக்காட்டவும் வலைதளம் உதவியாக இருக்கிறது. ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் அனைவருக்கும் இது ஒரு பாசிட்டிவ் தளம்தான்” என்கிறார் மனோஜித்.
- karthiga.rajendiran@hindutamil.co.in