

இணையத்தைப் பயன்படுத்தி எண்ணற்ற புது விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம். 285க்கும் அதிகமான தமிழ் மண்ணின் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகள், 50 ஆண்டுகள் பழமையான விவசாய, உணவு முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் யூடியூபர் கோபு. மறைந்துவரும் கிராமத்து வாழ்வியலைத் தனது ‘இணையக்களம்’ யூடியூப் அலைவரிசையில் ஆவணப்படுத்திவருகிறார்.
திரும்பிப் பார்க்கும்போது...
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கோபு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை எழும்பூரில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் படிப்பு முடித்த கையோடு ‘அனிமேஷன்’ துறையில் வேலைசெய்யத் தொடங்கினார். வேலை நிமித்தமாகக் கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயர்ந்தாலும் அவரது எண்ணம் வயல்வெளியைச் சுற்றியும் கிராமத்து வாசனையைப் பற்றியுமே இருந்தது. தான் பார்த்து ரசித்த கிராமத்து அழகியலை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் ‘இணையக்களம்’ யூடியூப் அலைவரிசை என்கிறார்.
“காட்சித்துறை சார்ந்துதான் எனது வேலை. விவசாயமும் தெரியும், தொழில்நுட்பமும் தெரியும் என்பதால் இரண்டையும் இணைக்க முயன்றேன். இந்த எண்ணத்தில்தான் 2018ஆம் ஆண்டு யூடியூப் அலைவரிசையைத் தொடங்கினேன். இதில் இயற்கை விவசாயம், விளையாட்டுகள், உணவு வகைகள், ஒப்பாரி, தாலாட்டு, நடவுப்பாடல், நாட்டுப்புறப்பாடல், போன்றவற்றை ஆவணப்படுத்திவருகிறேன். கேமரா, படத்தொகுப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என் சிறு குழுவுடன் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் நூறு காணொளிகளை மட்டுமே பதிவு செய்துள்ளோம். ஆனால், மற்ற யூடியூப் அலைவரிசைகளோடு போட்டி போட்டு இயங்காமல் தரமான காணொளிகளை மட்டுமே தயாரித்துவருகிறோம்” என்றார்.
வேண்டாம் ‘விளம்பரம்’
‘இணையக்களம்’ யூடியூப் அலைவரிசையில் இருக்கும் காணொளிகள் ஒவ்வொன்றும் தயாரிப்புத் தரம் மிகுந்தது. இதனால், அவ்வப்போது காணொளிகளைப் பதிவு செய்து, விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டலாமே என்கிற கேள்விக்கு, “வேண்டாம்” என்கிறார் கோபு. “இதுதான் கிராமத்துச் சமையல் எனச் சொல்லிக்கொண்டு ‘ஃபுட் பிளாகர்கள்’ பதிவிடும் காணொளிகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்பது நமக்கே தெரியும். வைரலாக வேண்டும் என்பதற்காகப் பலவற்றையும் செய்கிறார்கள். இதனால், வரலாற்றைச் சரியாக ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். வைரல், வருமானம் போன்ற காரணங்களுக்காக வேலைசெய்தால் தரமான காணொளிகளைப் பதிவேற்ற முடியாது. இதனால் யூடியூப் விளம்பரங்களைத் தவிர்க்கிறோம். ஒவ்வொரு காணொளியைத் தயாரிக்கும் முன்பும் ஆய்வில் ஈடுபட்டு, சரியான தகவல்களையே காட்சிப்படுத்துகிறோம். எங்களது எண்ணம், அழிவின் விளிம்பில் இருக்கும் கிராமத்து வாழ்வியலை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதுதான். இந்த வேலையைச் செய்யச் செலவு உண்டு, வருமானம் இல்லை என்றாலும் மனநிறைவு அதிகமாகவே கிடைக்கிறது” என்கிறார் உற்சாகமாக.
ஆவணப்படுத்துதல்
ஒளிப்படங்கள், காணொளிகள் வழிதான் அடுத்த தலைமுறையை எட்டிப்பிடிக்க முடியும் என்கிறார் கோபு. “கபடி, சிலம்பம் போன்று சில பாரம்பரிய விளையாட்டுகள் தாம் காப்பாற்றப்பட்டுள்ளன. மற்ற விளையாட்டுகளைப் பற்றி எழுத்து வடிவில் இருந்தாலும் நம்மால் இயன்றவரை காணொளிகளாகக் காட்சிப்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். கடல்போல விரிந்து கிடக்கும் கிராமத்து வாழ்வியல் முறைகளில் இதுவரை சிறு துளி அளவே ஆவணப்படுத்தியிருக்கிறோம். தேடிச் செல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. காட்சிகள்தாம் அடுத்த தலைமுறையை எளிதில் சென்றடைகின்றன. எதிர்காலத்தில் யாரேனும் திரும்பிப் பார்த்தால் பாரம்பரிய கிராமத்து வாழ்வியலைப் பார்ப்பதற்கு மட்டுமின்றிப் பின்பற்றவும் எளிதாக இருக்கும் வகையில் ஆவணப்படுத்திவருகிறோம்” என்கிறார். தொடரட்டும் நற்பணி.
இணையக்களம் யூடியூப் அலைவரிசையைப் பார்க்க: