

எங்கள் வீட்டுச் சுவரைப் பழுது பார்க்க மேஸ்திரி வந்திருந்தார். நான் திண்ணையில் உட்கார்ந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
வாசலில் ஒரு கார் வந்துநின்றது. அதிலிருந்து பேராசிரியரான நண்பர் இறங்கிவந்தார்.
“பலே, தெற்குப் பார்த்த வீடு. தெற்குப் பார்த்த திண்ணை. நன்றாக இருக்கிறது!” என்று பாராட்டினார்.
மேஸ்திரி அவரைப் பார்த்து, “ஐயா, தெற்குப் பார்த்த வீடு சரிதான். ஆனால், தெற்குப் பார்த்த திண்ணை கிடையாது. திண்ணைக்குத் திசையே இல்லை” என்றார்.
நான் அதிர்ந்துவிட்டேன். திண்ணைக்குத் திசைகள் இல்லை. அதில் என்ன சந்தேகம்?
திசைகள் மட்டுமா இல்லை? அதற்கு உறவுமில்லை. பகையுமில்லை. உட்காரும் சுகத்தை அன்றி அதனிடம் தருவதற்கு ஒன்றுமில்லை. கவலைகளை இறக்கிவைக்க கட்டிவைத்த சுமைதாங்கி அது.
கிராமத்துத் திண்ணைகள் வித்தியாச மானவை. பண்ணையாள் கொண்டுவரும் வாழைத்தார் உள்ளே போகும், பண்ணையாளும் திண்ணையும் எப்போதும் வெளியேதான்.
வீடுகளில் திருமணம்: அந்தக் காலத்தில் வீடுகளில் வைத்தே திருமணம் நடக்கும். கல்யாணத்துக்கு வந்த ஆண்கள் திண்ணையில் படுத்துக் கொள்வார்கள்.
“வள்ளி, நாதஸ்வர பார்ட்டிக்குத் திண்ணையை ஒழிச்சிக் கொடு!” என்று பெரியப்பா உத்தரவு போடுவார். நாதஸ்வரம் வாசிப்பவர்கள் படுத்துக்கொள்ள இடம் தரச் சொல்கிறார் என்று பார்த்தால், காலையில் நாதஸ்வரக் கச்சேரி திண்ணையில் களைகட்டும்!
திருமணத்தன்று இரவு திண்ணையில் சீட்டுக் கச்சேரி நடக்கும். திண்ணையின் ஒரு பகுதியில் வழவழவென்று சிமிட்டி பூசி திண்டுவைத்துக் கட்டியிருப்பார்கள். மாப்பிள்ளைத் தலைகாணி, மாப்பிள்ளைத் திண்ணை என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் இருந்தன.
விட்டல் மந்திர் திண்ணை: தஞ்சை மேலவீதியில் விட்டல் மந்திர் திண்ணை மிகவும் பிரபலம். இந்தத் திண்ணை இருந்த வீட்டின் உரிமையாளர் பாக்குமரத்து ஐயர், பொதுமக்கள், யாத்ரீகர்கள் வசதிக்காகவே அந்தத் திண்ணையைக் கட்டிவைத்தார். பழமையான இந்தத் திண்ணையில் அமர்ந்து இசை உலகின் பிரபலமான ஜாம்பவான்கள் சாதகம் செய்வார்கள்.
பின்னாளில் பெரிய கோயிலில் நடக்கும் திருவிழாக்களுக்கு மேலவீதி வழியே தங்களின் வாத்தியத்தை வாசித்தபடி ஊர்வலமாகச் செல்லும்போது விட்டல் மந்திர் திண்ணைக்கு முன்னால் சற்று நேரம் நின்று இசைமழை பொழிவார்கள். தங்களின் முன்னோடிகளான இசைவாணர்களுக்கு அவர்கள் செலுத்தும் அஞ்சலி அது.
புண்ணியம் செய்த திண்ணை: எங்கள் வீட்டில் இரண்டு திண்ணைகள் இருந்தன. ஒன்று குட்டித் திண்ணை. மற்றொன்று பெரிய திண்ணை. குட்டித் திண்ணையில்தான் அன்னக்காவடி பண்டாரம் யாசகம் பெற்று வந்த உணவைச் சாப்பிடுவார். என்ன வற்புறுத்தினாலும் பெரிய திண்ணையில் உட்காரவே மாட்டார். குட்டித் திண்ணையில் ஒருக்களித்தே படுத்துக் கொள்வார். இறைவனின் அடியாருக்கு இடம் கொடுக்க திண்ணையே ஆனாலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலும்.
கடிதமும் கண்ணீரும்: எங்கள் கிராமத்தில் ஒருவர் உட்காராத திண்ணைகளே கிடையாது. அவர்தான் தபால்காரர். திண்ணையில் உட்கார்ந்தபடி படிக்கத் தெரியாதவர்களுக்கு வந்த சில கடிதங்களைப் படித்துக் காண்பிப்பார். சில கடிதங்களை அவர் படிக்கும்போது தொண்டை கம்மும். அவர் படிப்பதைக் கேட்டு வீட்டில் உள்ளோரின் கண்கள் கலங்கும்.
திண்ணையை ஒட்டியுள்ள மாடப் பிறையில் ஏற்றிய அகல்விளக்கு திண்ணை முழுவதும் வெளிச்சத்தால் மெழுகி யிருக்கும். நிழலும் வெளிச்சமும் கூடி விளையாடும் முன்னிரவுகளின் மாயலோகக் கதவுகள் திறக்கும். பாட்டி சொல்லும் கதையின் படுதாக்கள் திண்ணை நெடுக தொங்கும்.
கவிமொழியும் பழமொழியும்: ‘திண்ணைக்கு விடிந்ததும் வீட்டுக்கு விடியும்’ என்பது பழமொழி. மொட்டை மாடியில் நின்றபடி வானத்தை அண்ணாந்து பார்க்கும் கவிஞர், இது மொட்டை மாடியே அல்ல பிரபஞ்சத்தின் திண்ணை என்று பிரமிக்கிறார்.
இடிப்பள்ளிக் கூடம்: பாரதியாரின் இடிப்பள்ளிக்கூடம் என்கிற நகைச்சுவையான நடைச்சித்திரத்தில், ‘பிரம்மராய வாத்தியார் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு சிநேகிதர்களுடன் பேசிக் கொண்டு, அதாவது கர்ஜனை செய்து கொண்டிருப்பார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார் இடிப்பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்’ என்று வரும்.
திண்ணை சுவாமிகள்: திருவண்ணாமலையில் ஓர் அன்பரின் வீட்டுத் திண்ணையில் நாற்பது ஆண்டுகள் மெளனமாக வீற்றிருந்த திண்ணை சுவாமிகள் பற்றிக் குறிப்பிட்டு ஹென்றி ஜேம்ஸ் என்கிற ஆங்கிலேயர் அதிசயிக்கிறார்.
திண்ணை சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் அந்தத் திண்ணை வெறுமையாகி விடவில்லை. அங்கே 40 ஆண்டுகளாக அவர் விட்டுச் சென்ற மெளனம் வீற்றிருக்கிறது.
திண்ணைக் கதைகள்: கு.அழகிரிசாமி ‘காற்று’ என்கிற பெயரில் திண்ணைக்காக ஆசைப்படும் ஒரு சிறுமியைப் பற்றிய கதை எழுதியிருப்பார். ஒரு வீட்டுத் திண்ணையில் தெருக் குழந்தைகள் எல்லாம் கும்மாளம் போடுகிறார்கள். அந்த வீட்டில் வசிக்கும் முரட்டு ஆசாமி குழந்தைகளை விரட்டுகிறார்.
அழுதுகொண்டே வீட்டுக்கு வரும் சிறுமி அப்பாவிடம் திண்ணை வேண்டும் என்கிறாள். சிறுமியின் தகப்பன் வேதகிரி வாயையும் வயிற்றையும் கட்டிப் பழகியவன்தானே ஒழிய எந்தக் காலத்திலும் திண்ணை கட்டியவன் அல்ல என்கிறார் அழகிரிசாமி.
உ.வே.சா. போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தாம். அவர் ஏடு தேடிச் சென்ற காலங்களில் வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து ஏடுகளைப் பரிசோதித்தபடியும், படி எடுத்தபடியும் இருந்ததை அனுபவித்து எழுதியிருக்கிறார்.
அறிவின் விளக்கமாகத் திகழ்ந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் திண்ணையிலிருந்து விடைபெற்றுவிட்டன. ‘இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி’ என்கிற பட்டுக்கோட்டையாரின் பாடலே திண்ணையின் அடையாளமாக வந்து சேர்ந்தது பரிதாபம்தான்.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com