

இந்திய பங்குச் சந்தையில் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளதாக தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதில் கடந்த 10 ஆண்டில் ஆண்டுக்கு சராசரியாக 25% அதிகரித்துள்ளதாக (2.5 கோடி) அவர் தெரிவித்துள்ளார்.
"நாட்டில் உள்ள 99.85% அஞ்சல் குறியீட்டெண் (பின்கோடு) வட்டத்தில் வசிப்பவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 12.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 4-ல் ஒருவர் பெண் ஆவர். மேலும் நாட்டில் உள்ள மொத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளில் 56% பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளன. பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
கடந்த 2018 நிதியாண்டில் 23% ஆக இருந்த பெண் ஊழியர்கள் பங்கு, 2024 நிதியாண்டில் 42% ஆக அதிகரித்துள்ளது" என சவுகான் தெரிவித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களை நிர்வகிப்பதிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கார்ப்பரேட் நிறுவன இயக்குநர் வாரிய உறுப்பினர்களில் 5-ல் ஒருவர் பெண் ஆக உள்ளார். பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சுமார் 1.6 கோடி தொழில்களுக்கு பெண்கள் தலைமை வகிக்கின்றனர் என்றும் சவுகான் தெரிவித்தார்.