

நீங்கள் ஒரு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) திட்டத்தில் முதலீடு செய்யும்போது, முதலில் கவனிக்கும் விஷயங்களில் ஒன்று, அதன் அளவு (லார்ஜ்கேப், மிட்கேப் அல்லது ஸ்மால்கேப்).
இந்த ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன. மேலும் வெவ்வேறு காலக்கட்டங்களில், ஏதேனும் ஒன்று மற்றதைவிட சிறப்பாகச் செயல்படக்கூடும். ஒரு பிரிவில் மட்டும் முதலீடு செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சந்தையின் அந்த குறிப்பிட்ட பிரிவு சிறப்பாகச் செயல்படுவதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
ஆனால், மல்டி கேப் ஃபண்டுகள் முற்றிலும் மாறுபட்ட கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. ஒரு மல்டிகேப் ஃபண்ட், லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் ஆகிய 3 பிரிவுகளிலும் உள்ள நிறுவனங்களில் ஒரே போர்ட்ஃபோலியோவுக்குள் முதலீடு செய்கிறது.
செபி விதிகளின்படி, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 25% முதலீடு செய்யப்பட வேண்டும். இதன் பொருள், சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவும்போது திட்டத்தின் மேலாளர் தனது மொத்தப் பணத்தையும் லார்ஜ்கேப்பில் மட்டுமே முடக்கி வைக்க முடியாது, அல்லது சந்தை உச்சத்தில் இருக்கும்போது ஸ்மால்கேப் பங்குகளை மட்டுமே துரத்திச் செல்ல முடியாது.