

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கப்படுகிறது. இருதரப்பிலும் ஒட்டுமொத்தமாக 200 கோடி நுகர்வோரைக் கொண்ட இந்த மாபெரும் சந்தை, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை உள்ளடக்கியது.
இதன்படி ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் 97% பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும். இதன் மூலம் இந்தியா சுமார் ரூ.6.41 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை ஐரோப்பாவுக்கு சுலபமாக விற்கலாம்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பல்வேறு உற்பத்தித் துறைகளை உலக அளவில் வலுவாக்கும். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையில், ஐரோப்பிய யூனியன், இந்திய ஆடைகளுக்கு வசூலித்து வந்த 10% முதல் 12% வரையிலான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படும். இது வியட்நாம் மற்றும் வங்கதேச நாடுகளுடன் இந்திய நிறுவனங்கள் சமமாகப் போட்டியிட உதவும்.
ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்: இதன் விளைவாக, அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி ஆண்டுக்கு 20-25% வரை அதிகரிக்கும். தமிழ்நாடு, குறிப்பாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகள், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியின் முதுகெலும்பாக உள்ளதால், இந்த வளர்ச்சி திருப்பூரில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ரத்தினங்கள் மற்றும் நகைகள்: ரத்தினங்கள், நகைகள் தயாரிப்பில் 2 முதல் 4% வரி நீக்கம் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளில் வர்த்தகம் சுமார் ரூ.91,000 கோடிக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.
தோல் பொருட்கள்: ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் தோல் ஏற்றுமதிக்கு மிக முக்கியமான சந்தையாக (44.64% பங்கு) இருப்பதால், இந்த ஒப்பந்தம் தோல் மற்றும் காலணி ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கமளிக்கும். தற்போது விதிக்கப்படும் 17% வரையிலான வரிகள் பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதால், 2030-க்குள் இந்தத் துறையின் ஏற்றுமதி ரூ.1,28,000 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.