

உலக அளவில் பங்குச்சந்தை முதலீட்டின் தந்தை என கருதப்படுபவர் வாரன் பஃபெட். சிறு வயதிலேயே கோக கோலா சில்லறை வியாபாரம் செய்த இவர், இன்று உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் புத்தகமாக திகழ்கிறார்.
தனது 96-வது வயதில் பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி உள்ளார். இவருடைய முதலீட்டுப் பயணம் பற்றி பார்க்கலாம். அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹாவில், 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ல் ஹோவர்ட் பஃபெட், லீலா ஸ்டால் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாரன் பஃபெட்.
தந்தை பங்குச் சந்தை தரகராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் முதலீட்டு சூழல் அவருக்கு சிறு வயதிலேயே பரிச்சயமானது. தனது 7-வது வயதிலேயே, One Thousand Ways to Make $1000 என்ற நூலை படித்தார். இதனால் அவருக்கு சிறு வயதிலேயே வணிகம், முதலீட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
சிறு வயதிலேயே கோக கோலா பாட்டில்கள், சூயிங்கம் மற்றும் செய்தித்தாள்களை வீடு வீடாகச் சென்று விற்று பணம் சம்பாதித்தார். கோல்ஃப் மைதானத்தில் பந்துகளை விற்றதுடன், குதிரை பந்தயக் குறிப்பேடுகளைப் பகுப்பாய்வு செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 11-வது வயதில் (1942), தன்னுடைய சேமிப்பு மற்றும் சகோதரியின் சேமிப்பு பணத்தைக் கொண்டு சிட்டிஸ் சர்வீஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். அதன் பின்னர் அந்த பங்கு விலை மளமளவென சரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
எனினும், சில மாதங்களில் படிப்படியாக உயர்ந்து வாங்கிய விலையைத் தாண்டியதும் சிறிய லாபத்துக்கு விற்றுவிட்டார். ஆனால் அந்தப் பங்கின் விலை அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்ததை அறிந்து வருந்தினார்.
அப்போதுதான் நல்ல நிறுவன பங்காக இருந்தால் குறுகிய கால ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயப்படக்கூடாது என உணர்ந்தார். பங்கு விலை கீழே போகும்போது பீதியில் விற்பதும், சிறிய லாபம் கிடைத்தால் உடனே விற்று விடுவதும் சிறந்த முதலீட்டாளருக்குரிய பண்பு அல்ல என்பதை சிறு வயதிலேயே கற்றுக்கொண்டார்.
வர்த்தகம், முதலீட்டில் ஈடுபாடு
இதனிடையே, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற பஃபெட், பின்னர் கொலம்பியா வணிகப் பள்ளியில் சேர்ந்து மதிப்பு முதலீட்டின் தந்தை பெஞ்சமின் கிரஹாமின் மாணவரானார். கிரஹாமின் ‘The Intelligent Investor’ புத்தகம் இவரது முதலீட்டு பயணத்தின் கையேடாக மாறியது.
கிரஹாமின் முதலீட்டு நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியைத் தொடங்கிய பஃபெட், 1956-ல் சொந்தமாக ‘பஃபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட்’ என்ற முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். குறுகிய கால ஊக வணிகத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, ஒரு நிறுவனத்தின் உண்மையான உள்மதிப்பு (Intrinsic Value), நிர்வாகத்தின் நேர்மை மற்றும் சந்தை விலைக்கு இடையேயான வித்தியாசத்தைக் கண்டறிந்து முதலீடு செய்யும் கலையைக் கையாண்டார்.
பெர்க் ஷயர் ஹாத்வே 1965-ல் நஷ்டத்தில் இயங்கி வந்த பெர்க் ஷயர் ஹாத்வே என்ற ஜவுளி நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி அதன் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். ஜவுளித் தொழில் காலப்போக்கில் லாபமற்றதாக மாறியதும், அதனை ஒரு ஹோல்டிங் கம்பெனியாக மாற்றினார்.