

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கும், அதிக முதலீட்டுத் தொகை தேவைப்படும் போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகளுக்கும் (Portfolio Management Services – PMS) இடையே இருந்த இடைவெளியை நிரப்பும் வகையில், இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) புதிய மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை Mutual Fund-only Portfolio Management Services (MF-PMS) என்ற கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது.
போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை (PMS) என்பது அதிக சொத்து மதிப்புள்ள முதலீட்டாளர்களின் நிதியை, அவர்களுக்குப் பதிலாக தொழில்முறை மேலாளர்கள் நிர்வகிக்கும் சேவையாகும்.
இதில் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பிற முதலீட்டு கருவிகள் முதலீட்டாளரின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுகின்றன. இதில் மியூச்சுவல் ஃபண்ட்கள் போல எல்லா முதலீட்டாளர்களின் சேமிப்பும் ஒன்றாகக் குவிக்கப்படுவதில்லை.
வாங்கப்படும் பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற சொத்துகளின் நேரடி உரிமையாளராக முதலீட்டாளர் இருப்பார். இதுவரை இந்த சேவையில் சேர குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் முதலீடு அவசியமாக இருந்தது.
புதிய திட்டத்தில், போர்ட்ஃபோலியோ மேலாளர்கள் தனிப்பட்ட பங்குகளை வாங்க முடியாது. அவர்கள் முதலீட்டாளரின் சேமிப்பை நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ஈடிஎப்), மற்றும் ஸ்பெஷலைஸ்டு இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் ஆகியவற்றில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.